அண்ணாமலை என் மண், என் மக்கள் என்னும் பெயரில் பாதயாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையில் ரயில் நிலையம் அருகே பாதயாத்திரையை தொடங்கியவர், தேவர் சிலை பகுதி வரையிலும் கட்சி தொண்டர்களுடன் பாதயாத்திரையாக வந்தார். கடம் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க மண்பாண்டங்களுக்கு மானாமதுரை புகழ்பெற்றது. இங்குள்ள மண்பாண்டத்தின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார் அண்ணாமலை. உடனே, கட்சி நிர்வாகிகள் மண்பாண்டம் தயாரிக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். கடம் தயார் செய்யும் இடத்தை பார்வையிட்டவர், மண்பாண்டம் தயாரிக்கும் சக்கரத்தை இயக்கினார்.
தொடர்ந்து, வரும் காலங்களில் இந்த தொழில் நலிவடையாமல் இருக்க என்னால் முடிந்த முயற்சிகளை எடுப்பதாக கூறினார். அண்ணாமலை பேசும்போது, “மானாமதுரை கடம் உலக புகழ்பெற்றதாக விளங்குகிறது. தமிழர்கள் உலகின் மிக பழைமையானவர்கள் என்பதை கீழடி நமக்கு உணர்த்தியிருக்கிறது.

அங்கு கண்டெடுக்கப்பட்ட மண்பானைகள் மானாமதுரையில் செய்யப்பட்டவை என்று சொல்லப்படும் அளவுக்கு வரலாற்று புகழ் வாய்ந்தது இந்த ஊர். ஆனால், இந்த ஊர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. மத்திய அரசு பட்டியலின மக்களுக்காக ரூ.3 ஆயிரம் கோடியை தமிழகத்துக்கு ஒதுக்கியது. அந்த நிதியைத் தான் தற்போது தி.மு.க மகளிர் உரிமைத் தொகைக்காக எடுத்துள்ளனர். யார் பெற்ற குழந்தைக்கு யார் பெயர் வைப்பது, இந்த நிதி மாற்றத்தை அரசாணையாக வெளியிட்டுள்ளனர்.
பொருளாதரத்தில் 11-வது இடத்தில் இருந்த இந்தியா இன்று மோடி ஆட்சியில் 5-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. தமிழ் மொழியை, அதன் தொன்மையை உலகமெங்கும் எடுத்துக் கூறி தமிழுக்கு பெருமை சேர்ப்பவர் மோடி. காரைக்குடி செட்டிநாடு பகுதியினருக்கு சொந்தமாக மடம் போன்ற ஒரு இடம் இருந்தது. அந்த இடத்தை அப்போதைய ஆளும் அரசு அபகரித்தது. ஆனால், பா.ஜ.க அரசு தற்போது அதனை மீட்டுக்கொடுத்துள்ளது. தேர்தல் நேரத்தில் சிவகங்கை மாவட்டத்திற்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க நிறைவேற்றவில்லை” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/dGoZf39
