அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைதுசெய்தனர். செந்தில் பாலாஜி சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்பட்டிருப்பதாகக் கூறி, அவருடைய மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். அதனால் இந்த வழக்கை விசாரித்த 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், `அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைதுசெய்த நடவடிக்கை சட்டபூர்வமானது’ என்றும், `இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்றும் ஜூலை 14-ம் தேதி தீர்ப்பளித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், அமலாக்கத்துறையின் கைது நடைமுறையை எதிர்த்தும் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரின் மனைவி மேகலாவும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 2) 4-வது நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், “இந்த வழக்கில் தொடர்புடைய ஏனைய சாட்சிகளை முன்வைத்து விசாரிப்பதற்கும், ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சரைக் காவலில்வைத்து விசாரிப்பதற்குத் தேவையான அதிகாரம் அமலாக்கத்துறையிடம் இருக்கிறது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவரின் நடத்தை, நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக, காவலில்வைத்து விசாரிக்கும் உரிமையை அமலாக்கத்துறை பயன்படுத்துவதைத் தடுத்துவிட்டது. ‘உண்மையை உயிர்ப்பிப்பது’ என்பது புலனாய்வு அமைப்பின் உரிமை மட்டுமல்ல. அமைச்சர் இழைத்ததாகக் கூறப்படும் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்யவேண்டிய கடமையும்கூட. ஆனால், தலையீடு சூழ்நிலைகள் காரணமாக அமலாக்கத்துறை அந்தக் கடமையைச் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை” என்றார்.

மனுதாரர் தரப்பில் முகுல் ரோத்தகி வாதிடுகையில், “சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் காவலில் இருக்கும் குற்றம்சாட்டப்பட்ட நபரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு எந்த உரிமையும் இல்லை” என்றார். இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் அமர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இதற்கு முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் வைத்த முக்கியமான வாதங்களில் ஒன்று… ‘செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது’ என்பதுதான். அதற்கு அவர்கள் எடுத்துவைக்கும் காரணிகள், சி.ஆர்.பி.சி எனப்படும் குற்ற நடைமுறைச் சட்டம். இந்தச் சட்டத்தின்படி ஒருவரைக் கைதுசெய்வதற்கு முன்பாக, கைதுசெய்யப்படும் நபரிடம் அவரை எதற்காகக் கைதுசெய்கிறோம் என்ற காரணத்தை முறைப்படி வாய் வார்த்தையாகவோ அல்லது எழுத்துபூர்வமாகவோ தெரிவிக்க வேண்டும்.
இதற்கு அடுத்து இரண்டாவதாக, செந்தில் பாலாஜி தரப்பு முன்வைத்த வாதம்… ‘சட்டவிரோதக் கைது என்பதால் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் வழங்கியதும் சட்டவிரோதமானது’ என்பதுதான். மூன்றாவதாக, ‘செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சையில் இருந்த காலத்தை நிச்சயமாக அமலாக்கத்துறையின் காவல் கணக்கில்தான் சேர்க்க வேண்டும்’ என்பது செந்தில் பாலாஜி தரப்பின் மற்றொரு முக்கியமான வாதம்.

இதற்கு அப்படியே நேர்மாறாக, அமலாக்கத்துறை தரப்பில் முன்வைத்த வாதங்கள் என்னவென்றால், ‘செந்தில் பாலாஜி தரப்பு கூறுவது போன்று எங்களுக்கு குற்ற ஆவண நடைமுறைச் சட்டம் பொருந்தாது. எங்களுக்கு பி.எம்.எல்.ஏ (பண மோசடி தடுப்புச் சட்டம் ) எனப்படும் சிறப்புச் சட்டம் மட்டுமே பொருந்தும்.’ சிறப்பு சட்டத்தின்படி கைதுசெய்யப்படுபவருக்கு கைதுக்கான காரணத்தை உடனே தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. ‘As soon as possible’ என்றுதான் எங்களுக்கான சட்டத்தில் இருக்கிறது. ‘இதன்படி செந்தில் பாலாஜியைக் கைதுசெய்தது சட்டவிரோதம் அல்ல’ என்று அமலாக்கத்துறை தரப்பு வாதிட்டது.
அடுத்தபடியாக, அமலாக்கத்துறையின் மிகவும் முக்கியமான வாதம் என்றால், ‘செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சையில் இருக்கக்கூடிய காலத்தைத் தங்களுடைய காவல் கணக்கில் சேர்க்கக் கூடாது (Exclude)’ என்பதுதான். அமலாக்கத்துறையைப் பொறுத்தவரை கைதுசெய்த 15 நாள்களுக்குள், கைதுசெய்த நபரை ED காவலில் எடுக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒரு விதி. அதன்படியே மருத்துவ சிகிச்சையில் செந்தில் பாலாஜி இருந்தாலும், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது. அதன்படி எட்டு நாள்கள் காவல் எடுக்கவும் செய்தது. ஆனால், செந்தில் பாலாஜியின் உடல்நிலை காரணமாகத் தங்களால் விசாரிக்க முடியவில்லை என்ற வாதத்தை அமலாக்கத்துறை தரப்பு முன்வைத்தது.
இவ்வாறாக உயர் நீதிமன்றத்தில் வைத்த வாதங்களையே இப்போது உச்ச நீதிமன்றத்திலும் இரு தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்க, ‘செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பதற்கான முகாந்திரமே அதிகமாக இருக்கிறது’ என்கிறார்கள் இந்த வழக்கை உற்று நோக்குபவர்கள். இதற்கிடையே இந்த வழக்கோடு, வேறு சில விஷயங்களில் அவர் சிக்குவாரா என்பதை மையமாகவைத்தும், அது தொடர்பான ஆதாரங்களைத் திரட்டுவதற்கும், வழக்கை ஸ்ட்ராங் செய்வதற்கும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களை தொடர்ந்து குறிவைத்து வருகிறது அமலாக்கத்துறை. இது இன்னும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், “செந்தில் பாலாஜியை சுயகாவலில் எடுக்க வேண்டும் என்பது அமலாக்கத்துறையின் நோக்கம். சுயகாவலில் எடுக்க குறுக்கே நிற்கும் ஒரே விஷயம் சி.ஆர்.பி.சி பிரிவுதான். சி.ஆர்.பி.சி தளர்த்துவது தொடர்பாக, ‘உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அது வேண்டாம்…’ என்கிற முடிவுக்கு டிவிஷன் பெஞ்ச் வருகிறார்கள். மூன்று நீதிபதிகள் அமர்ந்தும் இங்கு முடிவாகவில்லை. எனவே, உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவேளை சி.ஆர்.பி.சி-யில் தளர்வு கொடுத்தால் இந்தியா முழுவதும், எல்லா மாநிலங்களிலும் இருக்கிற எல்லா காவல் நிலையங்களுக்கும் அது பொருந்தும். இது காவல்துறை அத்துமீறல்களுக்கு வழிவகுக்கும்.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு கஸ்டடி கொடுக்க முடியாது என்று சொல்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இது அமலாக்கத்துறைக்கு பெரிய பின்னடைவாக மாறும். அதனால் இரண்டாவது வழக்கு போடுவதற்குத் தயராகிறார்கள்.
இப்போது செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடக்கும் ரெய்டுக்கும், முதல் வழக்குக்கும் சம்பந்தமே கிடையாது. ஏனென்றால், அது வேலை வாங்கித் தருவதாக நடந்த மோசடி. இப்போது நடப்பது டாஸ்மாக் தொடர்புடையது. அப்போது இரண்டாவது வழக்கு போட்டால் அமலாக்கத்துறைக்கு கிடைக்கும் அனுகூலம், உச்ச நீதிமன்றம் எப்படித் தீர்ப்பு கொடுத்தாலும் அமலாக்கத்துறை மற்றொரு வழக்கைக் காட்டி, இன்னொரு கஸ்டடி கேட்பார்கள்.
அதை நோக்கித்தான் போகிறார்கள். உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கு போன பிறகு இரண்டாவது வழக்குக்குத் தீவிரமாகிறது அமலாக்கத்துறை” என்றவரிடம், ‘இந்த வழக்குகளின் மூலம் செந்தில் பாலஜியின் அரசியல் எதிர்காலம் என்னவாக இருக்கும்..?’ என்கிற கேள்வியை முன் வைத்தோம்.
“செந்தில் பாலாஜிக்கு இனி அரசியல் எதிர்காலம் என்பது சிக்கலானதுதான். அது மிகவும் பாதிக்கக்கூடும். இப்போதும்கூட அமைச்சர் பதவியிலிருந்து அவராக விலகியிருக்க வேண்டும். இல்லையென்றால் முதலமைச்சர் விலக்கியிருக்க வேண்டும். இப்போதைக்கு அவரது எம்.எல்.ஏ பதவிக்குத் தகுதி இழப்பு கிடையாது. அப்படி என்றால் அமைச்சராகத் தொடரலாம். ஆனால், இந்த மாதிரி விஷயங்களில் அமைச்சரவைக்குக் கூட்டு பொறுப்பு இருக்கிறது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜிக்கு கூட்டு பொறுப்பு இருக்க முடியாது. ஏனென்றால் அவரிடம் துறை கிடையாது. எந்த அமைச்சரவைக்கும் கூட்டு பொறுப்பு இருக்கிறது. அப்படிப் பார்த்தால் ஒரு பெரிய கோட்பாடே இங்கு மீறப்படுகிறது.
சில அரசியல் காரணிகளுக்காக செந்தில் பாலாஜியை அமைச்சராக நீடிக்கவைக்கிறார்கள். ஏனென்றால், ‘அகில இந்திய அளவில் அமலாக்கத்துறையைக் கண்டு எங்களுக்கு அச்சமில்லை, அதை எதிர்த்து போராடுகிறோம்’ என்பதைக் காட்டுவதன் மூலம் அரசியலில் ஒரு சாகச பிம்பத்தை கட்டமைக்கிறது திமுக. எனவே செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக நிற்பார்கள். அரசியல் சூழல்படி பார்த்தால் செந்தில் பாலாஜிக்கு திமுக-வில் இழப்பு வராது. ஆனால், தார்மிக அடிப்படையில் பார்த்தால் பதவியில் அவர் இருக்கக் கூடாது. ஏனென்றால், கூட்டு பொறுப்பு கோட்பாடு அடிபடுகிறது” என்றார்.

“அமலாக்கத்துறை வலையில் சிக்கியிருக்கும் செந்தில் பாலஜியை ஒருவேளை அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்தால் பாதிப்பு அவருக்கு மட்டுமல்ல, அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் தான். ஏனென்றால், அமலாக்கத்துறையிடம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் ‘ரெக்கார்டே…’ அதனால், பரபரப்பிலேயே இருக்கிறதாம் அறிவாலய வட்டாரம்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
from Tamilnadu News https://ift.tt/VJsufha
