விழுப்புரம் கம்பன் கழகம் சார்பில், 40-ம் ஆண்டு கம்பன் விழா விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமணம் மண்டபம் ஒன்றில் நேற்று இரவு துவங்கியது. இந்த விழாவை துவக்கி வைத்து பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “நான் சாதாரணமாக இருந்தபோது தமிழை போற்றி கொண்டாடியதால் தான் இன்று ஆளுநராக இருக்கிறேன். தமிழ் தான் நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பல கழகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே கம்பன் கழகங்கள் தோன்றியிருக்கிறது. ஆனால், ராமக்காதையை கம்பன் பாடினார் என்பதற்காகவே தமிழை உறக்க பேசியவர்கள் கூட, கம்பனை சரியாக பேசவில்லை என்ற ஆதங்கம் உண்டு. ஆன்மீகம் தான் தமிழை வளர்த்தது என்பதை மறுபடியும் மறுபடியும் கம்பனும், ஆன்மீக குருக்களும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஏதோ தமிழ்நாட்டில், தமிழ் என்பது ஆன்மீகம் இல்லாதது போலவும், ஆன்மீகத்திற்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை என்பதை போலவும் ஒரு உருவகம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. தமிழும், ஆன்மீகமும் பிரிக்க முடியாதது என்பதை கம்பராமாயணம் சிறப்பாக நமக்கு சொல்கிறது.

ஒரு நாடு, நல்ல அரசியல், நல்ல மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று கம்பர் சொல்லியிருக்கிறார். ராமனிடம் தசரதன்… ‘ராமா நீ நாடாள வேண்டும்; இல்லை காட்டுக்குச் செல்ல வேண்டும்’ என்று சொன்னாலும் ஒரே மாதிரியான சிரிப்பு முகம் தானாம் ராமனுக்கு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிலர் நாடாண்டு கொண்டிருப்பார்கள். அவர்களின் சில தவறுகளை சுட்டிக் காண்பித்து சோதனை நடத்த வந்தால், அவர்களுக்கு நெஞ்சு வலியே வந்துவிடுகிறது. ஆக, எந்த சூழ்நிலையிலும் நாம் எப்படி இருக்க வேண்டுமென்று கம்பன், ராமன் மூலமாக நமக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். இந்த பூமிப்பந்தை எப்படி பாதுகாப்பது, பசுமையாக வைத்திருப்பது என்பதனை பற்றி நாம் இந்த உலகிற்கு ஜி-20 மாநாட்டின் மூலமாக காட்டிக் கொண்டிருக்கிறோம்.
அது இந்த மண்ணிற்கு எப்படி வந்தது என்றால், கம்பன் போன்றவர்கள் இயற்கை எப்படி வாழ்ந்தது என்பதை மிக அழகாக சொல்லும்போது, ‘இந்த பூமிப்பந்தை எப்படி பாதுகாக்க வேண்டும்’ என்று இந்தியா இந்த உலகிற்கு சொல்லிக் கொடுக்கிறது. அது கம்பன் போன்ற கவிகளிடமிருந்து நமக்கு வந்தது, ஆன்மாக்களிடமிருந்து வந்தது. முன்பெல்லாம் ஏதாவது தீர்வு வர வேண்டும் என்றால் உலகத்தை இந்தியா நோக்கி கொண்டிருந்தது. ஆனால் உலகத்திற்கு தீர்வு வேண்டும் என்றால், இன்று உலகம் இந்தியாவை நோக்கி கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் நம் நாட்டின் இதிகாசங்கள் மற்றும் கருத்துள்ள பாடல்கள். கம்பன் வடமொழியை கற்றுக் கொண்டதால் தான் ராமாயணத்தை நமக்கு தர முடிந்தது. கம்பன் வடமொழியை கற்றதனால் தான் தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

அதனால் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றால், தமிழ் மொழியில் உள்ள நல்லவை மற்ற மாநிலத்தவருக்கு செல்ல வேண்டும் என்றால், இன்னொரு மொழியை கற்பது தவறில்லை என்பது கம்பன் மூலம் நமக்கு தெரிகிறது. நாம் இன்னொரு மொழியை படிப்பதினால் தாய்மொழி நிச்சயம் அழிந்துப்போகாது. தமிழை அழிக்க யாராலும் முடியாது. தமிழ் வாழத்தான் செய்யும், வாழ்ந்தே ஆகும். இன்னொரு மொழியால் தமிழை அழிக்க முடியாது, தமிழால் தான் மற்ற மொழிகளே வளரும். தமிழ் கற்றதினால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னை பெற்றதினால் நான் தமிழ் பேசுகிறேன் தமிழ் வாசனை என் தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. அவருக்கு நான் அரசியல் வாரிசு அல்ல, ஆனால் தமிழ் வாரிசு. தமிழ் என வரும்போது நிச்சயமாக நான் அங்கு இருப்பேன்” என்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரசியல் சார்ந்த கருத்துக்கள் எதையுமே நான் பேச மாட்டேன். ஆன்மீகமும், தமிழும் பிரிக்க முடியாத ஒன்று. கம்பராமாயணம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும்… கம்பர் ராமனை பற்றி பாடியதால் பல பேர் அந்த தமிழை கொண்டாடாமலே தமிழகத்தில் விட்டுவிட்டார்கள். எல்லோரையும் நான் சொல்லவில்லை. கம்பருக்கான மரியாதை கொடுக்கப்பட வேண்டும். கம்பன் கழகம் போல, அரசியல் கழகங்களும் கம்பனை போற்ற வேண்டும். ஆகையால், கம்பன் விழாக்கள் அரசாங்கங்கள் மூலம் நடைபெற வேண்டும்” என்றவரிடம் நிருபர்கள் அரசியல் சார்ந்த கேள்விகளை முன்வைக்க துவங்கினர். உடனே புன்னகைத்தபடி அங்கிருந்து விலகிய தமிழிசை, “நான், அது எதுக்குமே பதில் சொல்ல முடியாது. நான் ஆளுநர்” என்றபடி கடந்தார்.
from Tamilnadu News https://ift.tt/PruhTQ7
