தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக இருந்த சைலேந்திர பாபு ஓய்வு பெற்றயதைடுத்து, புதிய டி.ஜி.பி-யாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். அதேபோல தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக இருந்த சங்கர், ஆவடி கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆவடி கமிஷனராக இருந்த ஏ.டி.ஜி.பி அருண், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாகவும் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தமிழக காவல்துறையில் 30-க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதில் உளவுத்துறையிலும் மாற்றங்கள் இருக்கும் எனக் கூறப்பட்டது. ஒவ்வொரு வார இறுதி நாள்களில் ஐ.பி.எஸ் இடமாறுதலுக்கான பட்டியலை எதிர்பார்த்து அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்தச் சூழலில்தான் அதிரடியாக 27 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரியான, டி.ஜி.பி பி.கே ரவி, மின்வாரிய விஜிலென்ஸுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மின்வாரிய விஜிலென்ஸில் டி.ஜி.பி-யாக இருந்த வன்னியபெருமாள், சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவில் பணியமர்த்தப்பட்டிருக்கிறார். அங்கு ஐ.ஜி அந்தஸ்திலிருந்த காமினிக்கு திருச்சி போலீஸ் கமிஷனர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. ராஜீவ் குமார் ஐ.பி.எஸ், போலீஸ் பயிற்சி பள்ளி டி.ஜி.பி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏ.டி.ஜி.பி அந்தஸ்திலிருக்கும் பால நாக தேவி, பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். பொருளாதாரக் குற்றப்பிரிவிலிருந்த ஏ.டி.ஜி.பி அபின் தினேஷ் மோடக், மாநில குற்ற ஆவணக் காப்பகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் ஏ.டி.ஜி.பி-யாக இருந்த வினித் தேவ் வான்டே, நிர்வாகத்தின் ஏ.டி.ஜி.பி-யாக பணியமர்த்தப்பட்டிருக்கிறார். திருச்சி போலீஸ் கமிஷனராக இருந்த சத்யபிரியா, பொருளாதாரக் குற்றப்பிரிவின் ஐ.ஜி-யாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். பொருளாதாரக் குற்றப்பிரிவின் ஐ.ஜி-யாக இருந்த ஆசியம்மாள், தலைமையகத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கூடுதல் கமிஷனராக இருந்த லோகநாதன், மதுரை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மதுரை போலீஸ் கமிஷனராக இருந்த நரேந்திரன் நாயர் தென்மண்டல ஐ.ஜி-யாக பணியமர்த்தப்பட்டிருக்கிறார். தென்மண்டல ஐ.ஜி-யாக இருந்த அஸ்ரா கர்க், சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனராக (வடக்கு) நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மேற்கு மண்டல ஐ.ஜியாக இருந்த சுதாகர், சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனராக (போக்குவரத்து) பணியமர்த்தப்பட்டிருக்கிறார். மாதக்கணக்கில் காத்திருப்பு பட்டியலிருந்த ஐ.ஜி நிர்மல்குமார் ஜோஷி, போலீஸ் அகடமியில் பணியமர்த்தப்பட்டிக்ருக்கிறார். டி.ஐ.ஜி சாமுண்டீஸ்வரி, சென்னை இணை கமிஷனராக (வடக்கு) நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அந்தப் பதவியிலிருந்த ரம்ய பாரதி, மதுரை டி.ஐ.ஜி-யாக மாற்றப்பட்டிருக்கிறார். மதுரை டி.ஐ.ஜி-யாக இருந்த பொன்னி, காஞ்சிபுரம் டி.ஐ.ஜி-யாக மாற்றப்பட்டிருக்கிறார். காஞ்சிபுரம் டி.ஐ.ஜி-யாக இருந்த பகலவன், திருச்சி சரக டி.ஐ.ஜி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். திருச்சி சரக டி.ஐ.ஜி-யாக இருந்த சரவண சுந்தர், கோவை சரக டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். நெல்லை போலீஸ் கமிஷனராக இருந்த ராஜேந்திரன், உளவுத்துறை டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இது குறித்து டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றும் சில ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் பேசினோம். “நீண்ட எதிர்ப்புக்கு மத்தியில் இந்த ஐ.பி.எஸ் அதிகாரிகளின் இடமாறுதல் பட்டியல் வெளியாகியிருக்கிறது. இதில் திருச்சி, மதுரை, நெல்லை போலீஸ் கமிஷனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதன் பின்னணியில் சில காரணங்கள் உள்ளன. குறிப்பாக திருச்சி போலீஸ் கமிஷனராக இருந்த சத்யபிரியாவுக்கும் சில சிக்கல்கள் இருந்ததாக காவல்துறை வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் தான் அவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதாரக் குற்றப்பிரிவிலிருந்த ஏ.டி.ஜி.பி அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி ஆசியம்மாள் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பொருளாதாரக் குற்றப்பிரிவில் முக்கியமான மோசடி வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்த வழக்குகளில் சில அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. இந்தச் சூழலில்தான் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், நீண்ட காலமாக ஏ.டி.ஜி.பி அபின் தினேஷ் மேடாக் அங்கு பணியாற்றியதாலும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். நிலுவையிலிருக்கும் வழக்குகளை திறம்பட விசாரித்து உடனடி நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் பொருளாதாரக் குற்றப்பிரிவின் ஏ.டி.ஜி.பி-யாக பால நாக தேவியும், ஐ.ஜி-யாக சத்யபிரியாவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேற்கு மண்டல ஐ.ஜி-யாக இருந்த சுதாகர், சென்னைக்கு வர நீண்டகாலமாக விருப்பத்தில் இருந்து வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த இடங்களிலிருப்பவர்கள் யாரும் வேறு இடத்துக்குச் செல்லாததால், போக்குவரத்துப் பிரிவின் கூடுதல் கமிஷனராக சுதாகர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தென்மண்டல ஐ.ஜி-யாக இருந்த அஸ்ரா கார்க்கின் அதிரடி நடவடிக்கைகளுக்கு நீதிமன்றமே அவரைப் பாராட்டியிருந்தது. அதனால்தான் அவருக்கு சென்னையில் கூடுதல் கமிஷனர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதேபோல ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றத்தின் பின்னணியிலும் ஒரு காரணம் இருக்கிறது. இந்த இடமாறுதல் பட்டியலை டி.ஜி.பி. அலுவலகத்திலுள்ள இரண்டு அதிகாரிகள்தான் இறுதி செய்து தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைத்தனர். அதற்கு தலைமைச் செயலகமும் ஓகே செய்து, பட்டியலை வெளியிட்டிருக்கிறது. தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சில காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடந்த இரண்டு ரௌடிகள் என்கவுன்ட்டர் சம்பவத்தில், தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் யாரும் மாற்றப்படவில்லை” என்றனர்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs
from Tamilnadu News https://ift.tt/tn2kBpM
