கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி நிர்வாகத்தின் சுரங்க விரிவாக்கப் பணிக்காக கரிவெட்டி, வளையமாதேவி மேல்பாதி, வளையமாதேவி கீழ்பாதி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் 2007-ம் ஆண்டு என்.எல்.சி நிர்வாகம் நிலங்களைக் கையகப்படுத்தியது. இதற்காக சமீபத்தில் வாய்க்கால் வெட்டும் பணியின்போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டிருக்கும் பயிர், அறுவடை செய்யப்படும்வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி, பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40,000 ரூபாய் வழங்க வேண்டும் என அரசுக்கும், என்.எல்.சி-க்கும் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, என்.எல்.சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், 88 விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடாக ஏக்கருக்கு 40,000 வீதம் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அப்போது, “நிலம் முழுமையாக கையகப்படுத்தபட்ட நிலையில், அதில் தொடர்ந்து விவசாயம் செய்வதை, அத்துமீறி நுழைந்ததாகத்தான் கருத வேண்டும்” என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

அதற்கு, “கையப்படுத்தப்பட்ட நிலம் சுரங்கப்பணிகளுக்கு தேவைப்படுகிறது. எனவே, படிப்படியாக அந்த நிலங்கள் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என என்.எல்.சி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், “ஏக்கருக்கு 6 லட்சம் ரூபாய், 10 லட்சம் ரூபாய், 14 லட்சம் ரூபாய் மற்றும் 25 லட்ச ரூபாய் என வெவ்வேறு காலகட்டங்களில் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, மேற்கொண்டு எந்த நிவாரணத்தையும் எதிர்பார்க்க முடியாது” எனக் கூறி, மனுவை ஏற்கக் கூடாது என வாதிட்டார்.
அப்போது நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “2006-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டுவரை என்.எல்.சி-க்காக 602 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கான இழப்பீடு மற்றும் கருணைத்தொகை பெற்றிருக்கும் நிலத்தின் உரிமையாளர்கள், நிலத்தில் உரிமைகொண்டாட முடியாது” என்று கூறினார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs
தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “கருணைத் தொகை பெறாதவர்களுக்கு கருணைத்தொகை வழங்குவதற்காக அரசு அதிகாரிகளை கொண்ட குழுக்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களில் அமைக்கப்படவிருக்கின்றன. செப்டம்பர் 15-ம் தேதிக்குள் கருணைத்தொகை வழங்கப்படும். அதற்குள் விவசாயத்தை முடித்து, அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும்” என வாதிட்டார்.
இதை பதிவுசெய்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “கருணைத்தொகை முழுவதையும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார். “அதேசமயம் அந்த தேதியில் நிலத்தை ஒப்படைக்க வேண்டும். அறுவடை முடியாவிட்டால் அறுவடை செய்தபிறகு ஒப்படைக்க வேண்டும், புதிதாக ஏதும் பயிரிடக் கூடாது” எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.

“25 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது, 2014-க்குப் பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு மட்டுமே வழங்க முடியும். அதற்கு முன்பாக நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது” எனவும் தெரிவித்த நீதிபதி, “தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது. நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் முடிந்த நிலையில், நில உரிமையாளர்கள் எந்தக் கோரிக்கையையும் வைக்க முடியாது. அதன் பின்னர் அந்த நிலத்தைப் பாதுகாக்க வேண்டியது என்.எல்.சி-யின் பொறுப்பு. அதற்கு பிறகு நிலத்தில் நுழைபவர்கள் அத்துமீறுபவர்களாகக் கருதி, சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கலாம். என்.எல்.சி செய்த ஒரே தவறு, இரக்கமின்றி (MERCY) விவசாய நிலத்தில் பணிகள் மேற்கொண்டதுதான்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலு, “நாங்கள் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்திருப்போம்” என்றார். “நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே பாலு இப்படி சொல்கிறார்” என என்.எல்.சி தரப்பு கூறிய நிலையில், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “நீங்கள் ஆட்சியில் இருந்தால் செய்வீர்கள். அது அரசின் கொள்கை முடிவு. நீங்கள்தான் தினமும் நிறைய வாக்குறுதிகளை வழங்கி வருகிறீர்களே… ஆனால், எதுவும் நடக்கும் போதுதான் உறுதியாகத் தெரியும்” என்றார்.

“விளைவித்த பயிர் கண்ணெதிரே அழிக்கப்படுவதை எந்த விவசாயியும் ஏற்கமாட்டார். அதன் வெளிப்பாடாகவே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்திருக்கின்றன. பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது, பொதுச்சொத்துக்கு ஏற்பட்ட இழப்பீட்டை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. எனவே கூடுதல் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட முடியாது” எனக் கூறி, வழக்கை முடித்துவைத்தார்.
Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs
from Tamilnadu News https://ift.tt/GBzPQ90
