டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் இருக்கிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால், துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணைநிலை ஆளுநருக்குமிடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு இருந்துவருகிறது. குறிப்பாக, அரசு அதிகாரிகளை நியமிப்பது, இடமாறுதல் தொடர்பான விவகாரங்களில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதாக ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்குதான் அதிகாரிகள் நியமனம், மாறுதல் தொடர்பான அதிகாரம் இருக்கிறது என தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கிடையில், மத்திய அரசு அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. அந்தச் சட்டத் திருத்தத்தின்படி, டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிகாரம் இருக்கிறது.

இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் ஒப்புதல் அளித்தார். அதனால், தற்போது அதிகாரிகள் நியமனம் உள்ளிட்டவை மத்திய அரசின் அதிகாரத்தின்கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பொதுவாக அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டால், நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றி சட்டமாக்க வேண்டும். எனவே, டெல்லி அவசரச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்தது.

அமித் ஷா

முதலில் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை இருப்பதால் இந்த மசோதா எளிதாக நிறைவேறியது. எனினும் அனைவரின் கவனமும் மாநிலங்களவையில் இந்த சட்டம் நிறைவேறுமா என்பதில் தான் இருந்தது. முதல்வர் கெஜ்ரிவால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை வீழ்த்த பல்வேறு மாநில கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார். இந்தியா கூட்டணியிலும் இந்த மசோதாவை முன்வைத்தே ஆதரவு வழங்கினார்.

இந்நிலையில் தான் நேற்று, மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, டெல்லி அவசர சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேறியது. சுமார் 8 மணிநேர விவாதத்துக்கு பின் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையில் நிறைவேறியது.

முன்னதாக மசோதாவை தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை. நாட்டின் தலைநகரில் பயனுள்ள, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதை இலக்காகக் கொண்டே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.

மாநிலங்களவை

சொல்லப்போனால் இந்த மசோதா, காங்கிரஸ் ஆட்சியின் போது இருந்த அதே அதிகாரங்களை டெல்லி அரசுக்கு வழங்குகிறது. ஆம் ஆத்மி கட்சியை திருப்திப்படுத்தவே தற்போது இம்மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கிறது” என்று கூறினார்.

டெல்லி அவசர சட்ட மசோதா மீதான வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 131 எம்பிக்களும், எதிர்ப்பு தெரிவித்து 102 வாக்குகளும் பதிவாகின. நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் மற்றும் ஜெகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் முன்னர் தெரிவித்தது போலவே மசோதாவுக்கு ஆதரவு அளித்தன.

from Tamilnadu News https://ift.tt/qITRdmC