நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், `தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க-வின் மாநிலத் தலைமை கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டு, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க-மீதும், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களையும், அ.தி.மு.க-வின் கொள்கைகளையும் விமர்சித்துவருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அ.தி.மு.க., பா.ஜ.க-வின் கூட்டணியிலிருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும் விலகிக்கொள்கிறது’ என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

அதைத் தொடர்ந்து, கூட்டணி குறித்து பா.ஜ.க மேலிடம்தான் முடிவு செய்யும் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கடந்த திங்கள் கிழமை டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். இந்த நிலையில், சென்னையில் தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகளின் கூட்டம் தி.நகரில் இருக்கும் பா.ஜ.க அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது. இதில், கேசவ விநாயகம், ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் என முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர். பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வருவதற்கு முன்பே கூட்டம் தொடங்கியது.

பின்னர் அண்ணாமலை கூட்டத்தில் பேசியதாக சில தகவல்கள் வெளியானது. “கூட்டணிக் குறித்த என் கருத்தை டெல்லி மேலிடத் தலைவர்களிடம் தெரிவித்துவிட்டேன். இனிக் கூட்டணிக் குறித்த முடிவை மேலிடம் பார்த்துக்கொள்ளும். கூட்டணியிலிருந்து விலகுபவர்கள் செல்லட்டும். அது அவர்களின் விருப்பம். தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிக்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்படவிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “இந்தியாவில் ஐந்து மாநிலத் தேர்தல், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் என முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேர்தல்கள் இருக்கிறது. அதனால், தற்போது 5 மாநிலத் தேர்தலுக்கு முழு கவனத்தையும் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கின்றன. எனவே கூட்டணிக் குறித்து பொறுமையாக முடிவெடுக்கலாம்.

கட்சியின் அனைத்துக் கூட்டமும் மாநிலத் தலைவர் இருந்துதான் நடக்க வேண்டும் என்றில்லை. நான் மாநிலத் தலைவராக இருந்தபோது, நான் கலந்துக்கொள்ளாமலேயே பலக் கூட்டங்கள் நடந்திருக்கிறது. தற்போது மாநிலத் தலைவராக இருக்கும் அண்ணாமலை இல்லாமலும் பலக் கூட்டம் நடந்திருக்கிறது. `அ.தி.மு.க-வின் வெற்றிக்கு தடையாக இருந்த பா.ஜ.க கூட்டணி இனி இல்லை. அதனால் தடை நீங்கிவிட்டது’ என முன்னாள் அமைச்சர் கூறியிருப்பதாக தெரிகிறது.

பொன் ராதாகிருஷ்ணன்

அ.தி.மு.க-வில் இரண்டுக்கோடி தொண்டர்கள் இருப்பதாக கூறுகிறார்கள். அதனால் இரண்டுக் கோடி கருத்துகள் வரும். அது அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தக் கூட்டணி முறிவு யாருக்கு பின்னடைவு என்றெல்லாம் முடிவு செய்ய முடியாது. இப்போது எங்களின் இலக்கை நோக்கி நடக்கத் தொடங்கியிருக்கிறோம். டெல்லியில் தேசியத் தலைவர்களை அண்ணாமலை சந்தித்திருக்கிறார். சுமூகமான முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஒ.பி.எஸ் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக தகவல் வெளிவருகிறது எனக் கேட்கிறீர்கள்.

கூட்டணி அமைப்பது டீ குடிப்பது போன்றதல்ல. எல்லோரும் அது குறித்து கருத்துச் சொல்ல முடியாது. எப்போது கூட்டணிக் குறித்து முடிவு செய்யப்படுகிறதோ அப்போது உறுதியான அறிவிப்பு வரும். அதுவரை காத்திருங்கள். என்.டி.ஏ என்பது தேசியக் கட்சிகளின் கூட்டணி. தமிழ்நாட்டுக்கென தனி பா.ஜ.க கிடையாது. தனி என்.டி.ஏ-வும் கிடையாது. தமிழ்நாட்டில் பா.ஜ.க உறுப்பினர் ஒருவரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது தவறுதலாக நடந்த சோதனை எனத் தெரிவித்திருக்கிறார்கள்” எனக் கூறினார்.

அண்ணாமலை

இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “எதிர்வரும் தேர்தலில், பா.ஜ.க-வின் வெற்றி வேட்பாளர்களையும், வாக்கு சதவிகிதத்தையும் தமிழ்நாடு பார்க்கும். அ.தி.மு.க கூட்டணியில் இல்லை என்ற வருத்தம் என்பதைக் கடந்து, அந்தந்தக் கட்சிகள் அதன் வளர்ச்சியை மட்டும்தான் பார்க்கும். பா.ஜ.க தனது வளர்ச்சியை பார்க்கிறது. எங்களுடன் ஒருவர் இருக்கிறார் என சந்தோசப்படுவதோ, அல்லது இல்லை என வருத்தப்படுவதோ கிடையாது. எனது ஒரே நோக்கம் பா.ஜ.க வலிமையடைய வேண்டும்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரதமர் மோடிக்கான தேர்தல். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் பிரதமர் மோடி பக்கம் வரும். என்மீது பல்வேறு கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் அதற்கெல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது. எனது வேலையை நான் செய்துக்கொண்டிருக்கிறேன். அதில் தெளிவாக இருக்கிறேன். அண்ணா மீது நான் வைத்த விமர்சனம் குறித்துப் பேச விரும்பவில்லை. அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க அமைதிகாக்கவில்லை. 2024 தேர்தல் என்பது எங்கள் கட்சி சார்ந்த பிரதமர் வேட்பாளர் தேர்தல். இது எங்கள் கட்சித் தேர்தல்.

ஸ்டாலின் – அண்ணாமலை

எனவே, அதற்கான எங்கள் வேலையை நாங்கள் செய்யப்போகிறோம். என்.டி.ஏ வலிமையாக இருக்க வேண்டும். நாளைகூட சில கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியில் சேரலாம். எனவே தற்போது என்.டி.ஏ கூட்டணியை உறுதியாக்க வேண்டும். அ.தி.மு.க வளர்ச்சிக்கு பா.ஜ.க தடையாக இருக்கிறதா என்பதையெல்லாம் 2024 தேர்தல் முடிவுகள் தெளிவாக கூறும். பா.ஜ.க தமிழ்நாட்டின் மூன்றாவது பெரியக் கட்சியாக உருவாகியிருக்கிறது. இந்தத் தேர்தல் தி.மு.க VS பாஜக என்பதுதான் சவால். மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பா.ஜ.க-வுக்கும் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் தி.மு.க-வுக்கும் நடக்கும் போட்டிதான் இந்தத் தேர்தல்.

அ.தி.மு.க ஊழல் குறித்து எப்போது பேச வேண்டுமோ அப்போது பேசுவேன். எங்கள் சண்டை தி.மு.க-வுடன் தான். இந்தத் தேர்தல் களம் என்பது இவர்கள் இல்லாமல் வெற்றி பெற முடியுமா அவர்கள் இல்லாமல் வெற்றிபெற முடியுமா என்பதைத் தாண்டி, இந்தியாவில் பிரதமர் மோடிக்கான ஒரு சூழல் இருக்கிறது. எந்தக் கட்சியின் முடிவும் சாதகம் பாதகம் என்பதெல்லாம் கிடையாது. பா.ஜ.க அடிப்படையில் உறுதியாகியிருக்கிறது. அதை 20204 தேர்தல் முடிவுகள் சொல்லும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

from Tamilnadu News https://ift.tt/NeqkwcD