மீண்டும் மீண்டும் பற்றி எரிகிறது இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றுவரும் போரில் இதுவரையில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். பல்லாண்டுகளாக தொடர்ந்து நடக்கும் வரலாற்றுப் பெரும் போருக்கு தீர்வுகாண்பதற்கு பதிலாக தீனிப்போட்டுக்கொண்டிருக்கின்றன உலகின் வல்லரசு நாடுகள் என்ற குற்றச்சாட்டும் உலக அரசியலில் முன்வைக்கப்படுவதுண்டு.

இஸ்ரேல் தொடர்ந்து அரங்கேற்றிவரும் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு மற்றும் இஸ்லாமியப் படுகொலைக்கு எதிராக பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிக்குழு கடந்த செப்டம்பர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதலை நடத்தியது. குறிப்பாக, இஸ்ரேல் நாட்டின் முக்கியமான ராணுவ நிலைகள், ராணுவ பயிற்சி முகாம்கள், விமான தளங்களைக் குறிவைத்து சுமார் 5,000 ஏவுகணைகளை ஹமாஸ் ஏவியது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதிலியிருந்து ஏவப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகள், வெறும் 20 நிமிடங்களில் இஸ்ரேலின் பல்வேறு இடங்களைத் தீக்கிரையாக்கின. இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பின் மீதும், பாலஸ்தீனத்தின் மீதும் அதிரடித் தாக்குதலில் இறங்கியிருக்கிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் உள்பட 500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
சுமார் 1,20,000 மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். பாலஸ்தீன காசா எல்லையைச் சுற்றிவளைத்திருக்கும் 1,00,000 இஸ்ரேலிய ராணுவத்தினர் அந்தப் பகுதி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.
யார் யாரெல்லாம் இஸ்ரேலுக்கு ஆதரவு?
இந்தப் போர் குறித்து பேசியிருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து நாட்டை பாதுகாக்கும். நாங்கள் யுத்தம் செய்கிறோம். அதில் நாங்களே வெல்வோம். எங்களின் எதிரி யோசித்துகூட பார்த்திடாத விலையைக் கொடுக்கப்போகிறார்கள்! எங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி, காசா நகரில் ஹமாஸ் தீவிரவாதிகள் செயல்படும் அனைத்து இடங்களையும் அழிப்போம். இந்த போர் நீண்ட காலம்நடக்கும்!” என்று ஆவேசமாகக் கொக்கரித்திருக்கிறார். அதேசமயம், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, நார்வே, பிரான்ஸ், ஸ்பெயின், போலந்து, உக்ரைன், பிரேசில் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. தவிர, இந்தியா, ஆஸ்திரேலியாவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கின்றன.

குறிப்பாக இந்திய பிரதமர் மோடி, தனது எக்ஸ் பதிவில், “இஸ்ரேலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காகவே இருக்கின்றன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலின் பக்கம் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்!” என்று இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “தீவிரவாத தாக்குதலை நியாயப்படுத்த முடியாது. நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் கடமை, உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்ய, அமெரிக்கா தனது முழு ஆதரவையும் வழங்கும். இஸ்ரேலின் தேவை குறித்து கேட்டறியுமாறு அமெரிக்க பாதுகாப்பு குழுவினருக்கு உத்தரவிட்டிருக்கிறேன். மேலும், இஸ்ரேலுக்கு 8 பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவி அளிக்கவும் ஒப்புதல் அளித்திருக்கிறேன்!” எனத் தெரிவித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து, கிழக்கு மத்திய தரைக்கடலுக்கு விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் ஜெட் விமானங்களை அமெரிக்கா அனுப்பியிருக்கிறது.
யார் யாரெல்லாம் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு?
இந்த போர் குறித்துப் பேசியிருக்கும் பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ், “பாலஸ்தீனத்துக்குள் அத்துமீறி குடியேறுபவர்களுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய ராணவ பயங்கரவாதத்துக்கு எதிராகவும் தங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை என்பது பாலஸ்தீனியர்களுக்கு உண்டு!” என்று தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், பெரும்பாலான உலக வல்லரசு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் நிலையில், பாலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கும் சில நாடுகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக, இரான், சிரியா, சவுதி அரேபியா, ஏமன், கத்தார், தென் ஆப்ரிக்கா, லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பும் ஆதரவாக உள்ளது.

குறிப்பாக இரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஹமாஸ் தாக்குதல், ஆக்கிரமிப்பாளர்களின் முன்னிலையில் பாலஸ்தீன மக்களின் நம்பிக்கைக்கு சான்றாக உள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு பாலஸ்தீனம் மற்றும் மத்திய கிழக்கு பகுதியிலுள்ள பிற நாடுகளிலும் ஆதரவு இருக்கிறது” என தெரிவித்திருக்கிறது.

தலைகீழாக மாறிய இந்தியாவின் நிலைப்பாடு:
சுதந்திர காலம் தொட்டே, இந்தியாவின் ஆதரவு என்பது பாலஸ்தீனத்துக்கே எப்போதும் இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக, 1948-ல் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதற்கான தீர்மானம் ஐ.நா. சபையில் கொண்டு வரப்பட்டபோது, அதை எதிர்த்து வாக்களித்து நாடு இந்தியா. மேலும், முன்னாள் பிரதமர் நேரு காலம் தொட்டே அனைத்து இந்திய பிரதமர்களும் பாலஸ்தீனத்தையே ஆதரித்து வந்தனர். ஆனால், 2014-ம் ஆண்டு பா.ஜ.க வெற்றிபெற்று பிரதமராக பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு இஸ்ரேல்-பாலஸ்தீன நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இதுவரை எந்த இந்திய பிரதமரும் இஸ்ரேலுக்கு சென்றிருக்காத நிலையில், 2017-ம் ஆண்டு முதன்முறையாக அந்த நாட்டுக்குச் சென்று பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் மோடி. இஸ்ரேலுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்ற பெயரையும் பெற்றார். அதேபோல, தற்போதைய போர் சூழலிலும் இஸ்ரேலுக்கே ஆதரவளித்திருக்கிறார்.
இதனிடையே பாலஸ்தீன மக்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போரில் பாலஸ்தீன மக்களுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/j2XNy6R
