காவிரி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் கர்நாடக அரசு, உரிய அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்துவிடாமல் முரண்டு பிடித்து வருகிறது. இந்த விவகாரத்தில், `ஒன்றிய அரசு, கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு முறையாக நீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நேற்றைய தினம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவந்தார். ஆனால், `தண்ணீர் தரக் கோரி, கர்நாடக அரசை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி ஒருவார்த்தைகூட பேசவில்லை’ என அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

இந்த நிலையில், காவிரி நீர் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசு, கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்து நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்த, தி.மு.க கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, திட்டமிட்டிருக்கின்றன.
அதன் முடிவில் தமிழ்நாட்டுக்கு உரியக் காவிரி நீரைப் பெற்றுத் தராத மத்திய அரசையும், காவிரி ஆணையத்தையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசையும் கண்டித்து, மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் அக்டோபர் 11-ம் தேதி கடையடைப்பு செய்து, மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “தி.மு.க-வின் டெல்டா பகுதி நிர்வாகிகள் கூட்டத்தின் காணொளி ஒன்றைக் காண நேர்ந்தது. அந்தக் காணொளியில், `வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயிக்க, கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போராடுவதுபோல நடிக்க வேண்டும்’ என்று நாகை மாவட்ட தி.மு.க நிர்வாகி ஒருவர் பேசுகிறார். அவர், தி.மு.க நாகை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன் என்று அறிகிறேன்.
மேலும் அந்தக் கூட்டத்தில், மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரும் பங்கேற்றிருக்கிறார். சட்டசபையில், காவிரிப் பிரச்னைக்காகத் தீர்மானம் என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றிய தி.மு.க, தங்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், செய்தியாளர்கள் முன்னிலையில், `போராட்டம் நடத்தப்போகிறோம்’ என்று கூறிவிட்டு, அவர்கள் சென்ற பிறகு, `போராடுவதைப்போல நடித்து மக்களை ஏமாற்றிவிடலாம்’ என்று முடிவெடுத்திருக்கிறார்கள். தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை, வாழ்வாதாரப் பிரச்னைகளில் தமிழக மக்களுக்குத் துரோகங்கள் செய்வதே வரலாறு.

காவிரிப் பிரச்னையில், நாளொரு நாடகம் நடத்தி வரும் தி.மு.க, தற்போது மக்களை ஏமாற்ற, கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்ப்பதுபோல ஒரு மாயையைக் காட்ட வேண்டும் என்று, போராட்டம் நடத்துவதுபோல நடிக்கவிருக்கிறது. இவர்களின் உண்மையான நோக்கம், மக்களுக்கான உண்மையான தீர்வு அல்ல; மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது மட்டுமே என்பதை அவர்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/opqVtXF
