நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில், நாட்டுக்கே முன்னுதாரணமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். அதிகார வர்க்கத்துக்கும் பழங்குடி மக்களுக்குமிடையிலான இந்த 30 ஆண்டுக்கால சட்டப் போராட்டத்தில் செயற்பாட்டாளர்கள் முதல் வழக்கறிஞர்கள் வரை அம்மக்களின் உடனிருந்த அனைவருக்கும் வணக்கங்கள்.

தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராம‌‌ மக்கள் சந்தன மரங்களை வெட்டிக் கடத்துவதாகக் கூறி 1992-ம் ஆண்டு காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் `தேடுதல் வேட்டை’ என்ற பெயரில் ஊருக்குள் புகுந்தனர். குடிசைகளைத் தகர்த்து, பொருள்களை சேதப்படுத்தி, மக்களை அடித்து என கிராமத்தையே சிதைத்தனர். 90 பெண்கள், 28 குழந்தைகள் உட்பட 133 பேரை கைது செய்தனர். உச்சபட்ச கொடூரமாக, 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் உள்பட 269 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 19 ஆண்டுகளுக்குப் பின்னர், 54 பேர் இறந்துவிட்ட நிலையில், மீதமிருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்றும், ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதித்து தருமபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் 2011-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. தற்போது சென்னை உயர் நீதிமன்றம், அதன் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து, தண்டனையை உறுதிசெய்து, பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

மலைவாழ் மக்களுக்கு மனிதத்தன்மையற்ற இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டது சமூக விரோதிகளால் அல்ல, அரசு ஊழியர்களால் என்பது அதிகாரத்தின் அசிங்கத் துக்கு சாட்சி. இன்னொரு பக்கம், சாட்சி சொல்லியது, அடையாளம் காட்டியது என இந்த வழக்கில் 30 வருடங்களாக உறுதியுடன் நின்று போராடிய பெண்களின் நெஞ்சுரம், அசாத்தியமானது. பெண்கள் உட்பட, அக்கிராம மக்கள் பெரும்பாலானவர்களுக்கு அடிப்படை சட்ட நடைமுறைகள், நீதிமன்ற நெறிமுறைகள் இன்று அத்துப்படி. ஆயுளின் பெரும்பகுதியை சட்டப் போராட்டமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

நமக்குள்ளே…

`இந்தத் தீர்ப்பின் மூலம் பழங்குடியினர் அதிகார வர்க்கத்தை வென்றுள்ளனர்’ என்றெல்லாம் நம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டாலும், அம்மக்கள் இழந்தவற்றுக்கு யார் பொறுப்பு? `அப்போது நான் 13 வயது பள்ளிச் சிறுமி. அதிகாரிகளிடம் கெஞ்சியும் என்னை விடவில்லை. படிப்பை இழந்தேன். யாரும் என்னை திருமணம் செய்ய முன் வரவில்லை. ஒருவழியாக திருமணம் முடிந்தாலும், இன்றும் அந்நாட்களை நினைத்தால் மன நடுக்கும் ஏற்படும்’ என்று சொல்லும் பெண்ணுக்கான நீதி என்று எதை தர முடியும் நம்மால்? இப்படிப் பல பெண்களின், மக்களின் சார்பான கேள்விகள் கிடக் கின்றன வாச்சாத்தியில்.

அமைதிப்படை, ஆயுதப்படை, காவல்துறை, வனத்துறை என… ஆணாதிக்கமும் அதிகாரமும் இணைந்து, வேலியே காட்டை மேயும் குற்றம், இனியொருமுறை நடக்கவே கூடாது என்பதை அதிகார வர்க்கத்தின் காதுகளில் அறைந்து சொல்வோம் தோழிகளே. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி தருவதல்ல… பெண்கள் பாதிக்கப்படாமல் காப்பதே அறம், அரசாங்கம்.

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

அடுத்த இதழ்…

Selfie வித் அவள்!

அவள் விகடன் (29.8.2023 தேதியிட்ட) இதழுடன் பியூட்டி ஸ்பெஷல் 52 பக்க இணைப்பும் வெளியானது. அந்த இதழுடன் ஒரு Selfie எடுத்து, அழகு குறித்து ஒரு பன்ச் லைன் எழுதி அனுப்ப வாசகிகளிடம் கேட்டிருந் தோம். வாசகிகளின் ‘நச்’ வரிகளுக்கு சிறப்புப் பரிசாக பட்டுப்புடவை வழங்கப்பட்டது. பரிசு பெற்ற வாசகிகள் இவர்கள்…

பரிசு பெற்ற வாசகிகள்

from Tamilnadu News https://ift.tt/9lSEO0e