எதிர்க்கட்சியினருக்கு எதிராக வருமானவரித் துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை ஏவி, பழிவாங்கல் நடவடிக்கையில் மத்திய பா.ஜ.க அரசு ஈடுபட்டுவருகிறது என்ற குற்றச்சாட்டு அதிகரித்துவருகிறது. பா.ஜ.க-வைக் கடுமையாக எதிர்த்துவரும் தி.மு.க-வின் முக்கியத் தலைவர்களுக்கு எதிராகவும் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சோதனைகளை நடத்திவருகின்றன.

சமீபத்தில் தி.மு.க எம்.பி-யான ஜெகத்ரட்சகன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில், தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் ‘பினாமி’ சொத்துகளை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, ஆ.ராசா மீது 2015-ம் ஆண்டு சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியது. பின்னர் சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் ஆ.ராசாவுக்குச் சொந்தமான இடங்களில் சி.பி.ஐ சோதனை நடத்தியது. அதில், முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ அதிகாரிகள் கைப்பற்றியதாகச் செய்திகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, ஆ.ராசா உள்ளிட்ட ஐந்து பேர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதுபோக, அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தியது. 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார். அப்போது, குருகிராமில் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதிகளை ஆ.ராசா வழங்கினார் என்றும், அதற்காக அந்த நிறுவனம் ஆ.ராசாவுக்குக் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக வழங்கியது என்று விசாரணையில் தெரியவந்ததாகவும் அமலாக்கத்துறையினர் கூறினர்.
மேலும், ‘லஞ்சமாகப் பெற்ற பணத்தை ஆ.ராசா, தன் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் பெயர்களில் தொடங்கிய பினாமி நிறுவனம் மூலம் வருமானமாக கணக்கு காட்டியதும் விசாரணையில் தெரியவந்தது’ என்று அமலாக்கத்துறை கூறியது. அந்த நிறுவனம் ஆரம்பத்திலிருந்து எந்த ஒரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றும், நிறுவனத்தில் பெறப்பட்ட முழு பணமும் ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்தில் இருந்து லஞ்சமாக பெறப்பட்டது என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர்.
அதனடிப்படையில், கோவையில் ஆ.ராசாவின் ‘பினாமி’ பெயரில் வாங்கப்பட்ட ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை தற்போது முடக்கியிருக்கிறது. லஞ்சமாக பெறப்பட்ட பணத்தில் இருந்து இந்த சொத்து வாங்கப்பட்டதாகவும், இது தொடர்பாக விசாரணை நடந்துவருவதாகவும் அமலாக்கத்துறை கூறியிருக்கிறது.
2015-ம் ஆண்டு ஆ.ராசா மீதும் அவருடைய குடும்பத்தினர்மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டபோது, ‘எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது சட்டரீதியில் தவறானது’ என்றார் ஆ.ராசா. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஆ.ராசாவுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கு இல்லை என்று 2013-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி சிறப்பு நீதிபதி முன்பாக சி.பி.ஐ விசாரணை அதிகாரி உறுதிசெய்தார்’ என்றார்.
மேலும், தனது டெல்லி இல்லத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதி சி.பி.ஐ சோதனை நடத்தியபோது பறிமுதல் செய்த ஓர் ஆவணமானது, அமலாக்கத்துறையால் பதிவுசெய்யப்பட்ட புகாரின் நகல்தான் எனக் கூறியவர், அந்த நகலைக் காண்பித்தார்.
சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகிய மூன்று அமைப்புகளும் தங்கள் விசாரணைகளை ஒருங்கிணைக்க வேண்டும், ஒருவருக்கொருவர் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அப்போது ஆ.ராசா சுட்டிக்காண்பித்தார்.
ஆ.ராசா வீட்டில் சோதனை நடத்தப்பட்டதை கண்டித்த அன்றைய தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, ‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இடம்பெற்ற தி.மு.க அமைச்சர்கள் அரசியல் காரணங்களுக்காக குறிவைக்கப்படுகிறார்கள். ஆ.ராசா வீட்டில் ஏற்கெனவே சோதனை நடத்தப்பட்டுவிட்டது. தற்போது, சட்டமன்றத் தேர்தல் வரும் நேரத்தில் மீண்டும் சோதனை நடத்துகிறார்கள். இதன் பின்னால் அரசியல் உள்நோக்கம் இருப்பது தெரிகிறது’ என்றார்.
தற்போது, மத்திய பா.ஜ.க அரசு மீது ஆ.ராசா கடுமையான விமர்சனங்களைத் தொடர்ச்சியாக முன்வைத்துவரும் நிலையில், அவரது ‘பினாமி’ சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன.
from Tamilnadu News https://ift.tt/k0CroZz
