கோச்சடையான் திரைப்பட விவகாரத்தில் பணமோசடி செய்ததாக லதா ரஜினிகாந்த்மீது தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான `கோச்சடையான்’ திரைப்படம், 2014-ம் ஆண்டு வெளியானது. மிகப்பெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம், பெரியளவில் வசூலை ஈட்டவில்லை. இந்த திரைப்படத்தைத் தயாரிப்பதற்காக ஆட்-ப்யூரோ நிறுவனத்திடமிருந்து மீடியா ஒன் என்ட்டர்டெயின்மென்ட் நிறுவனம், ரூ. 6.2 கோடி கடன் பெற்றிருந்தது. அதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்துக் கையெழுத்திட்டிருந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடனாகப் பெற்ற பணத்தை மீடியா ஒன் நிறுவனத்தின் உரிமையாளர் முரளி திருப்பித் தரவில்லை எனக் கூறி, ஆட்-ப்யூரோ நிறுவனம், பெங்களூரு முதன்மை நீதிமன்றத்தில் 2016-ம் ஆண்டு மோசடி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் முரளி, லதா ஆகியோர்மீது `மோசடி செய்து ஏமாற்ற முயற்சி’, `ஆதாரங்களைத் திரித்தல்’, `தவறான அறிக்கை சமர்ப்பித்தல்’ ஆகிய பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், `உரிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை’ எனக் கூறி, இந்தியத் தண்டனைச் சட்டம் 196 (போலி ஆவணம்), 199 (தவறான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல்), 420 (மோசடி) ஆகிய பிரிவுகளை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஆதாரங்களைத் திரித்துத் தாக்கல் செய்த பிரிவுகளின்கீழ் வழக்கின் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று பெங்களூரு முதன்மை நீதிமன்றத்துக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்த நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றம் 3 பிரிவுகளை ரத்து செய்ததற்கு எதிராக ஆட்-ப்யூரோ நிறுவனமும், பெங்களூரு நீதிமன்ற விசாரணைக்கு எதிராக லதா ரஜினிகாந்தும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களையும் ஏற்று விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, “லதா ரஜினிகாந்த் வழக்கை மீட்டெடுக்கிறோம் (மீண்டும் விசாரணைக்கு எடுக்கிறோம்). இந்த வழக்கு தொடர்பாக, விசாரணை நீதிமன்றத்துக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்படுகிறது.
மேலும் இரு தரப்பிலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களைக் கருத்தில்கொண்டு, மனுதாரர் – குற்றம்சாட்டப்பட்டவர் ஆகிய இருவரும் விசாரணைக்கு ஆஜராகத் தேவைப்படும்போது, ஆஜராக வேண்டும். இந்த வழக்கின் நிலை குறித்து நாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனவே, மத்தியஸ்தர்கள் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்க இரு தரப்பினருக்கும் அனுமதியளிக்கப்படுகிறது” என உத்தரவிட்டது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/dNsYia7
