திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க-வுக்கும் பிரச்னைகளுக்கும் அப்படியொரு ராசி. சமீபத்தில்தான், செக் மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளர் கருணாகரன் என்பவருக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். அந்தச் சூடு தணிவதற்கு முன்னதாகவே, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகளின் ஆபாச ஆடியோ ‘லீக்’காகி சமூக வலைதளங்களில் அனலைக் கிளப்பியது. இப்படி, அடுத்தடுத்து திருவள்ளூர் பா.ஜ.க-வில் சர்ச்சைகள் அரங்கேறும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகியான வெங்கடேசன், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் பலராமனைச் சந்தித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

பலராமனுடன் வெங்கடேசன்

பா.ஜ.க-வின் ஓ.பி.சி பிரிவு முன்னாள் நிர்வாகியான வெங்கடேசன், அ.தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வுக்கு வந்தவர். அ.தி.மு.க-வில் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் மாவட்ட துணைச் செயலாளராக இருந்த வெங்கடேசன், மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குள் தனக்கென செல்வாக்கை வளர்க்கத் தொடங்கியதால், மாவட்டச் செயலாளரான மாதவரம் மூர்த்திக்கும் அவருக்கும் இடையே மோதல் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க-வில் வெங்கடேசன் ஓரங்கட்டப்பட, பா.ஜ.க-வுக்குத் தாவினார். பா.ஜ.க-வில் ஓ.பி.சி பிரிவு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டவர், பின்னர் கட்சிக்குள்ளேயே எழுந்த சலசலப்புகளால், பதவி பறிக்கப்பட்டார். இந்தச் சூழலில்தான், அ.தி.மு.க-வின் திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பலராமனை ரகசியமாகச் சந்தித்திருக்கிறார் வெங்கடேசன்.

மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என வெங்கடேசன் தரப்பில் காரணங்களைச் சொன்னாலும், “நடப்பதே வேறு… பா.ஜ.க-வை உடைக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டது அ.தி.மு.க தலைமை” என்கிறார்கள் இலைக்கட்சிக்காரர்கள். இந்தச் சந்திப்பு குறித்தும், சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் குறித்தும் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க பிரிந்ததைத் தொடர்ந்து, பா.ஜ.க-விலிருந்து ஆட்களை இழுத்து வர மாவட்ட நிர்வாகிகளுக்கு ‘க்ரீன் சிக்னல்’ கொடுத்துவிட்டது கட்சித் தலைமை. குறிப்பாக, பா.ஜ.க-வுக்காக செலவு செய்யக்கூடியவர்கள், முழு நேரமும் கட்சிப் பணியாற்றக் கூடியவர்களுக்கு வலை வீசச் சொல்லியிருக்கிறது. அதன்படிதான், வெங்கடேசனுக்கும் வலை வீசப்பட்டிருக்கிறது.

பலராமனுடன் வெங்கடேசன்

திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க-வில், தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் வெங்கடேசன். அவ்வளவு தூரம் உழைப்பைக் கொட்டியும் கட்சியில் பொறுப்பு வழங்கப்படாததால், அதிருப்தியில் இருக்கிறார் அவர். இந்தத் தருணத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, அவரை அ.தி.மு.க-வுக்கு மீண்டும் இழுத்துவர திட்டமிடப்பட்டது. திருவள்ளூர் அ.தி.மு.க-வில் மாதவரம் மூர்த்திக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம்தான் என்றாலும், மற்றொரு மாவட்டச் செயலாளரான பலராமன் மூலமாக வெங்கடேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இதுவரையில், அவர் எந்த முடிவையும் சொல்லவில்லை. வெங்கடேசன் போல, திருவள்ளூர் பா.ஜ.க-வில் துடிப்போடு செயலாற்றுபவர்கள், பசையுள்ளவர்கள் பலரையும் அ.தி.மு.க-வுக்கு இழுத்து வரும் திட்டத்தை முன்னாள் அமைச்சர்கள் ரமணா, பெஞ்சமின், அம்பத்தூர் அலெக்ஸாண்டர் ஆகியோரும் கையில் எடுத்திருக்கிறார்கள்” என்றனர்.

“அ.தி.மு.க-வில் மீண்டும் இணையப் போகிறீர்களா…” என்ற கேள்வியுடன் பா.ஜ.க-வின் வெங்கடேசனிடம் பேசினோம். “பலராமனைச் சந்தித்தது முற்றிலும் மரியாதை நிமித்தமான சந்திப்பு. என்னுடைய நெடுநாள் நண்பர் என்கிற வகையிலேயே அவரைச் சந்தித்தேன். கூட்டணி உடைந்தது என்பதற்காக என்னுடைய நட்பு உடைந்துவிடாது. பா.ஜ.க-வின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வந்திருந்தபோது நடைபெற்ற ‘என் மண் என் தேசம்’ நிகழ்ச்சியில் நிர்வாகிகளுடன் அவரை வரவேற்றிருக்கிறேன். நான் ஏன் கட்சி மாறப் போகிறேன்… எனக்கு உரிய அங்கீகாரம் வழங்கினாலும், வழங்காவிட்டாலும் பா.ஜ.க-வின் தொண்டனாக எப்போதும் இருப்பேன்” என முடித்துக் கொண்டார்.

பி.எல்.சந்தோஷுடன் வெங்கடேசன்

“கட்சி மாறப் போவதில்லை என வெங்கடேசன் கூறினாலும், அவரோடு சேர்த்து திருவள்ளூர் பா.ஜ.க நிர்வாகிகள் பலருக்கும் அ.தி.மு.க வலைவீசியிருப்பது உண்மைதான். சமீபத்தில், தி.மு.க-வைச் சேர்ந்த நாமக்கல் யூனியன் சேர்மன் அ.தி.மு.க-வில் இணைந்தார். அதுபோன்ற இணைப்புகள் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இனி அ.தி.மு.க-வில் தொடர்ச்சியாக நடைபெறப் போகிறது. எங்கள் கட்சித் தலைமையும் அதைத்தான் விரும்புகிறது. திருவள்ளூரில் இனி ஆக்‌ஷன் ப்ளாக்தான்” என்கிறார் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஒருவர்.

தாமரையைச் சீண்ட ஆரம்பித்திருக்கிறது இலை. ஆக்‌ஷன் காட்சிகள் தடதடக்குமா… பொறுத்திருந்து பார்ப்போம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/0yC5bSE