அ.தி.மு.க-வின் 52-ம் ஆண்டு தொடக்கவிழா தமிழ்நாடு முழுவதும் இன்று விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 11:10 மணிக்கு தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவருக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அலுவலக முகப்பில் இருக்கும் மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார் எடப்பாடி.

இனிப்பு வழங்கிய எடப்பாடி

தொடர்ந்து கட்சியின் கொடியை ஏற்றியதோடு, தொண்டர்களுக்கு இனிப்புகளையும் வழங்கினார். மேலும், கடந்த ஆண்டு, ஜூலை மாதம் சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு, 2023 ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற்ற மாநாடு ஆகிய நிகழ்ச்சிகளுக்கு வரும்போதும், வந்து திரும்பும்போதும் விபத்தில் பலியான மற்றும் காயமடைந்த 62 தொண்டர்களின் குடும்பத்துக்கு 1 கோடியே 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

நிதியுதவி

தொடர்ந்து பூத்வாரியாக பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் சிலரிடம் கேட்டோம். நம்மிடம் பேசியவர்கள், “ `அமைப்புரீதியாக நாம் வலுவடைந்தால்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியும். அதற்கு முதலில் பூத் கமிட்டிகளை முறையாக அமைக்க வேண்டும். நான் கிளைக் கழகச் செயலாளராகப் பணியாற்றியிருக்கிறேன் என்பதால், பூத் கமிட்டி அமைப்பிலுள்ள பிரச்னை எனக்கு நன்றாகவே தெரியும். மாமன், மச்சான், சொந்தக்காரர்கள் என்ற அடிப்படையில் பொறுப்புகள் வழங்கக் கூடாது என்று ஏற்கெனவே நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறேன். அது முறையாக நடக்கிறதா என்று நீங்கள் மேற்பார்வையிட வேண்டும்.

ஒரு பூத் கமிட்டிக்கு 20 நபர்கள் வீதம், 50 ஓட்டுகளுக்கு ஓர் ஆள் கட்டாயம் இருக்க வேண்டும். அவர்களோடு மகளிர் அணியைச் சேர்ந்த 25 பேரும், இளைஞர் பாசறையிலிருந்து 25 பேரும் இடம்பெறுவதுபோல பார்த்துக்கொள்ளுங்கள். அவர்களோடு ஒரு பூத்துக்கு இரண்டு ஐடி விங் நிர்வாகிகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். மாவட்ட நிர்வாகிகளுடன் ஒத்துழைத்துச் செல்லுங்கள். அவர்கள் ஒத்துழைக்கவில்லையென்றால் என்னிடம் தெரியப்படுத்துங்கள்.

நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

நீங்கள் செய்யும் தவறும் எனக்கு வந்துவிடும். தேர்தலில் வெற்றியடைய நமக்கு இருந்த அனைத்துத் தடைகளும் நீங்கிவிட்டன. பா.ஜ.க-வுடன் கூட்டணியை முறித்ததிலிருந்து சிறுபான்மையினர் ஆதரவு நமக்குக் கிடைத்திருக்கிறது. இதை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, பா.ஜ.க-வுடன் நாம் கூட்டணியை முறித்துவிட்டதால், நம்மைப் பார்த்து தி.மு.க-வுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான், பா.ஜ.க-வுடன் மீண்டும் நாம் இணைந்துவிடுவோம். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைப்பார்கள் என்று ஏதாவது சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். தி.மு.க-வின் இந்தக் கருத்துருவாக்கத்தை நாம் உடைக்க வேண்டும்.

அது உங்கள் கையில்தான் இருக்கிறது. நாம் யாருக்கும் அடிமையில்லை. பா.ஜ.க-வுடன் எப்போதும் கூட்டணி இல்லை. 2024-லும் இல்லை… 2026-லும் இல்லை… இதுதான் ஒட்டுமொத்த அ.தி.மு.க-வின் நிலைப்பாடு என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். மக்களின் நம்பிக்கையைப் பெற்றால்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறலாம். ‘பிரதமர் வேட்பாளர் இல்லாமல் எப்படித் தேர்தலைச் சந்திக்க முடியும்?’ என்று எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள்.

மோடி – அமித் ஷா

2014 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் இல்லாமல்தான் அம்மா தலைமையில் அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேற்கு வங்கத்தில் மம்தாவும் பிரதமர் வேட்பாளர் இல்லாமல்தான் வெற்றிபெற்றார். இப்படிப் பல எடுத்துகாட்டுகள் இருக்கின்றன. நமது பிரதமர் வேட்பாளர் யாரென்றால்… தமிழ்நாட்டு மக்களின் நலனே நமது வேட்பாளர். அதை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திப்போம். நிச்சயம் வரலாறு காணாத வெற்றியைப் பெறுவோம்’ என்று எடப்பாடி பேசினார்” என்றனர் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/vThlf50