சனாதனம் தொடர்பான சர்ச்சையில் `ஆட்சியே போனாலும் பரவாயில்லை, கொள்கைப் பக்கம்தான் நிற்பேன். கருத்தில் பின்வாங்க மாட்டேன்’ என்று சொன்னார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஆனால், இது தொடர்பான வழக்கில் தற்போது நீதிமன்றத்தில் வாதாடிய அமைச்சர் உதயநிதி தரப்பு, `தனிப்பட்ட முறையில்தான் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அமைச்சர் என்ற முறையில் உதயநிதி பேசவில்லை’ என நீதிமன்றத்தில் வாதம் முன் வைத்ததாக சொல்லப்பட்டது.

சனாதனம் – உதயநிதி ஸ்டாலின்

`சனாதனம் குறித்து உதயநிதி என்ன பேசினார்?’

கடந்த செப்டம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் `சனாதன ஒழிப்பு மாநாடு’ சென்னையில் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. `சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல், `சனாதன ஒழிப்பு’ மாநாடு என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்'” என்று பேசினார்.

மேலும், “சனாதனம் என்கிற சொல் சம்ஸ்கிருதத்திலிருந்து வந்தது. சனாதனம், சமத்துவத்துக்கும் சமூக நீதிக்கும் எதிரானது. சனாதனம் என்றால் நிலையானது என அர்த்தம். அதாவது மாற்ற முடியாதது என்றும் சொல்லலாம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும், எதையும் கேள்வி கேட்க வேண்டும் என உருவானது தான் திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும்!” என்றும் கூறியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின் – சாமியார் – சீமான்

`ஊதிப் பெருக்கிய பா.ஜ.க… பின்வாங்காத உதயநிதி!’

அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த இந்தப் பேச்சை பா.ஜ.க-வினர் `இந்துக்களுக்கு எதிரான பேச்சு’ என நாடு முழுக்க சர்ச்சையாக்கினர். `தி.மு.க அங்கம் வகிக்கும் I.N.D.I.A கூட்டணி சனாதன தர்மத்தை அழிக்க நினைக்கிறது’ எனக்கூறி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி நாட்டின் அனைத்து பா.ஜ.க தலைவர்களும் கடுமையாக விமர்சித்தனர். அயோத்தி சாமியார் ஒருவர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி விலை வைத்த சம்பவமும் அரங்கேறியது. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க சார்பில் உதயநிதி மீது வழக்குத் தொடரப்பட்டன. `உதயநிதி பதவி விலக வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும்’ என போராட்டங்களும் நடத்தப்பட்டன.

உதயநிதி

அந்த சூழ்நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டுப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதற்காக என்னையும், அமைச்சர் சேகர் பாபுவையும் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஆளுநரிடம் பா.ஜ.வினர் புகார் மனு அளித்திருக்கின்றனர். தி.மு.க கட்சியே சனாதனத்தை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்ட கட்சிதான். எங்களுக்கு ஆட்சியை பற்றி எல்லாம் கவலை கிடையாது. கொள்கை பக்கம் நிற்போம்! ஆட்சி அதிகாரத்தைவிட கொள்கையே முக்கியம். வருகிறவர் போகிறவர்கள் எல்லாம் எனது தலைக்கு விலை பேசுகிறார்கள். சனாதனம் தர்மம் ஒழிப்பு சர்ச்சை காரணமாக ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம். அம்பேத்கர், பெரியார், அண்ணா ஆகியோர் பேசாததை நான் பேசவில்லை!” என அதிரடியாக பதிலுரைத்தார்.

இந்த நிலையில், `சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசிவிட்டு எந்த தகுதியின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதியாக உதயநிதி நீடிக்கிறார் என்பதை விளக்கவேண்டும் எனக்கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ-வாரண்டோ மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் உதயநிதி தரப்பில் பதில் மனு தாக்கல்செய்து வாதாடிய தி.மு.க மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனப் பேசியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதா? மனுதாரர்களுக்காக மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஆஜராவதிலிருந்தே இந்த வழக்கில் கண்ணுக்கு தெரியாமல் பா.ஜ.க-வின் பங்கு இருப்பது தெளிவாகிறது. ஆர்ட்டிக்கிள் 25-ஐ ஒரு அரசுக்கு எதிராக தான் பயன்படுத்த முடியுமே தவிர, ஒரு தனிநபருக்கு எதிராக பயன்படுத்த முடியாது. இந்த அடிப்படையில் உதயநிதி அமைச்சராக பேசியதாக கருத்தில் கொள்ளக் கூடாது, தனிநபர் கருத்தாகவே இதனை பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

வில்சன் – மாநிலங்களவையின் தி.மு.க வழக்கறிஞர்

மேலும், “உரிய தகுதியில்லாமல் பதவி வகித்தால் மட்டுமே எந்த தகுதியின்அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கோரி கோ-வாரண்டோ மனுக்களை தாக்கல் செய்ய முடியும். சனாதனம் குறித்து அரசியலமைப்பு சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. சாதி, மத அடிப்படையில் மக்களை பிரித்து வைக்கும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், அனைத்து மக்களும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும், அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும்தான் உதயநிதி பேசினார். இந்தக்கொள்கை மோதல் பல ஆண்டுகளாக நீடித்துவருகிறது. அரசியலமைப்பு சட்டத்துக்கும், இறையாண்மைக்கும் எதிராக பேசியதாக குற்றம்சாட்டும் மனுதாரர்கள் அதற்கான ஆதாரங்களை தெரிவிக்கவில்லை!” என உதயநிதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.வில்சன் வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 31-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

from Tamilnadu News https://ift.tt/w037fNb