பா.ஜ.க-வின் கொள்கைகளையும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்துவருபவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-யான மஹுவா மொய்த்ரா. அதானி குழுமத்தின் முறைகேடுகள் தொடர்பான அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது.

பிரதமர் மோடியின் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது, அவருடன் தொழிலதிபர் கௌதம் அதானியும் சென்றது குறித்தும், அந்தப் பயணத்தின் மூலம் அதானி குழுமம் அடைந்த ஆதாயங்கள் குறித்தும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸின் மொஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.
அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்ற கேரிக்கையையும் எதிர்க்கட்சிகள் எழுப்பின. மேலும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், எதிர்க்கட்சிகளின் எந்தக் கோரிக்கையையும் ஆளும் பா.ஜ.க கண்டுகொள்ளவில்லை. ஆனாலும், அந்த விவகாரம் மத்திய பா.ஜ.க அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு பணம் கேட்டார் என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மீது பா.ஜ.க குற்றச்சாட்டியிருக்கிறது. பா.ஜ.க எம்.பி-யான நிஷிகாந்த் துபே, ‘நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக தொழிலதிபர் தர்ஷன் ஹிரநன்தனியிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கினார்” என்று குற்றம்சாட்டியிருக்கிறார். மேலும், மஹுவாவுக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு துபே கடிதம் எழுதியிருக்கிறார்.
நிஷிகாந்த் துபே தனது கடிதத்தில், ‘திரிணமூல் காங்கிரஸ் எம்.பி-க்கும், தொழிலதிபருக்கும் இடையில் லஞ்சம் பரிமாறப்பட்டதற்கான மறுக்க முடியாத ஆதாரம் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் மொய்த்ரா கேட்ட 61 கேள்விகளில் 50 கேள்விகள் அதானி குழுமத்தைப் பற்றியதே’ என்று வழக்கறிஞர் ஒருவரின் ஆவணங்களைச் சுட்டிக்காட்டி கூறியிருக்கிறார்.
மஹுவா மொய்த்ரா மீது குற்றம்சாட்டியிருக்கும் நிஷிகாந்த் துபே, அது தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ், இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ‘திரிணமூல் காங்ரகிரஸ் எம்.பி-யான மஹுவா மொய்த்ரா தனது மக்களவை இணையதளத்தைப் பயன்படுத்தும் உள்நுழைவு அனுமதியை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியும், அவரது ரியல் எஸ்ட்டே நிறுவனமும் தங்கள் சொந்த லாபத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தாரா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கிறார்.

மத்திய அமைச்சர்களுக்கு அனுப்பிய கடிதத்தை தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் துபே பகிர்ந்திருக்கிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்திருக்கும் மஹுவா மொய்த்ரா, ‘நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் பணிகளும் அவர்களின் தனி உதவியாளர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட மிகப்பெரிய குழுவினரால் மேற்கொள்ளப்படுகின்றன.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அவர்களே, அனைத்து எம்.பி-க்களின் நாடாளுமன்ற இணையத்தின் Login விவரம், எங்கிருந்து பயன்படுத்துகிறார்கள் என்ற விவரம் ஆகியவற்றை வெளியிடுங்கள். அதேபோல, இணையத்துக்குள் உள்நுழைய அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி குறித்த விவரங்களையும் தயவுசெய்து வெளியிடுங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

மஹுவா மொய்த்ராவுக்கு ஆதரவாக களமிறங்கிய சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.பி-யான சஞ்சய் ராவத், ‘மஹுவா, மொய்த்ரா திரிணமூல் காங்கிரஸின் புகழ் பெற்ற தலைவர். அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களை நோக்கி கேள்விகள் எழுப்புவதை பா.ஜ.க-வால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான், இத்தகைய குற்றச்சாட்டுக்களை எழுப்புகிறார்கள். இதன் மூலம் மஹுவா மொய்த்ராவின் மனஉறுதியைக் குலைக்கப் பார்க்கிறார்கள்’ என்று விமர்சித்திருக்கிறார். தேசிய அரசியலில் இந்த விவகாரம் தற்போது பெரும் அனலை கிளப்பி உள்ளது!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/VDBmH6E
