இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் குழுவுக்கும் இடையே 10 நாள்களுக்கும் மேலாக போர் நடைபெற்றுவருகிறது. அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில், 1,400-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 200 இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக ஹமாஸ் பிடித்து வைத்திருப்பதாகவும் கூறும் இஸ்ரேல், பதிலுக்கு பாலஸ்தீனத்தின் காஸா-மீது கடுமையான தாக்குதல் நடத்திவருகிறது. இதில், உயிரிழந்த பாலஸ்தீன அப்பாவி மக்களின் எண்ணிக்கை 3,000-ஐ தாண்டிவிட்டது.

இருப்பினும், `ஹமாஸை முற்றிலுமாக அழிக்கும் வரை போர் ஓயாது’ என காஸாவில் தரைவழி தாக்குதலை வலுப்படுத்திவருகிறது இஸ்ரேல். பதிலுக்கு ஹமாஸும், `இஸ்ரேலின் தாக்குதல் எங்களை அச்சுறுத்தவில்லை, எதற்கும் தயாராகவே இருக்கும்’ எனக் கூறிவருகிறது. இதற்கிடையில், உக்ரைன்மீது போர் புரிந்துவரும் ரஷ்யா, `மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேல் – பாலஸ்தீன போரை நிறுத்த வேண்டும்’ என ஐ.நா-வில் தீர்மானம் கொண்டுவந்தது.
ஆனால், உக்ரைன்மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என கடந்த ஒருவருடமாகக் கூறிவரும் அமெரிக்கா, உக்ரைனுக்கு செய்ததைப்போலவே இஸ்ரேலுக்கும் போர் ஆயுத உதவிகளை வழங்கிக்கொண்டே, ஐ.நா-வில் ரஷ்யா கொண்டுவந்த போர் நிறுத்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனைத் தோல்வியடைய வைத்தது. இப்படியான சூழலில், காஸாவிலுள்ள மருத்துவமனைமீது நேற்று நடந்த திடீர் தாக்குதலில், சுமார் 500 பேர் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

`இஸ்ரேல்தான் இந்தத் தாக்குதலை நடத்தியது’ என ஹமாஸ் கூற, `மருத்துவமனைமீது ஹமாஸ்தான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. அதற்கு ஆதாரமும் இருக்கிறது’ என பழிபோடுகிறது இஸ்ரேல். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று, இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகரில் அந்த நாட்டு பிரதமர் நெதன் யாகுவை நேரில் சந்தித்தார். அதைத் தொடர்ந்து ஜோ பைடனும், நெதன் யாகுவும் ஒன்றாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ஜோ பைடன், “இஸ்ரேலிய மக்களுக்கும், உலக மக்களுக்கும் அமெரிக்கா எந்தப் பக்கம் நிற்கிறது என்பதைக் காண்பிக்க வேண்டும் என்ற சிறிய காரணத்துக்காகவே நான் இங்கு வர விரும்பினேன். இஸ்ரேலுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்து தரும்.

ஹமாஸ் குழு, 31 அமெரிக்கர்கள் உட்பட 1,300-க்கும் மேற்பட்டோரை படுகொலைசெய்திருக்கிறது. குழந்தைகள் உட்பட பலரைப் பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கிறது. ஹமாஸின் இந்த அட்டூழியங்கள், ஐ.எஸ்.ஐ.எஸ்-கூட கொஞ்சம் நியாயமானதாக இருக்கும் என்று காட்டுகிறது. ஹமாஸ், அனைத்து பாலஸ்தீன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதையும், மாறாக அவர்களுக்குத் துன்பத்தை மட்டுமே அளித்திருக்கிறது என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
மேலும், நேற்று காஸாவிலுள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட விபத்தால் நான் மிகுந்த வருத்தமடைந்தேன். அதேசமயம், மிகவும் கோபமடைந்தேன். நான் பார்த்தவரையில், இது மற்ற குழுவினரால் செய்யப்பட்டதுபோல் தெரிகிறது. அங்கு நிறைய பேர் இருப்பதால், தாக்குதல் நடத்தியது யார் என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், அது நீங்கள் (இஸ்ரேல்) அல்ல” என்றார்.

அதைத் தொடர்ந்து, பைடனின் வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துப் பேசிய நெதன் யாகு, “அக்டோபர் 7-ம் தேதி ஒரே நாளில், 1,400 இஸ்ரேலியர்களை ஹமாஸ் கொன்றது. நீங்கள் (பைடன்) சரியாகச் சொன்னீர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸைவிட மோசமானது ஹமாஸ். அவர்கள் தற்போது நாஜி படைகளாக மாறியிருக்கின்றனர். எனவே, ஹமாஸை வீழ்த்த, நாகரிக உலகம் ஒன்றுபட வேண்டும்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/2aRyrnF
