ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில், அடுத்த மாதம் (நவம்பர்) வெவ்வேறு தேதிகளில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. டிசம்பர் 3-ம் தேதி மொத்தமாக ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் வெளியிடப்படுகின்றன. இந்த ஐந்து மாநிலங்களில் மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே பா.ஜ.க ஆட்சியிலிருக்கிறது. மற்ற நான்கு மாநிலங்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸும், தெலங்கானாவில் கே.சி.ஆர் தலைமையிலான பி.ஆர்.எஸ்-ஸும், மிசோராமில் மிசோ தேசிய முன்னணியும் ஆட்சியிலிருக்கின்றன.

5 மாநிலத் தேர்தல்

இந்த ஐந்து மாநிலத் தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலுக்கான அரையிறுதி ஆட்டமாகப் பார்க்கப்படுவதால், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டு, மற்ற மூன்று மாநிலங்களில் குறிப்பிடத்தக்க வகையில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று தீவிரம் காட்டிவருகிறது காங்கிரஸ். அதற்கேற்ற வகையில், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அந்தக் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.

இருப்பினும், முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே உட்கட்சிப்பூசல் இருக்கும் ராஜஸ்தானில் மட்டும் இன்னும் காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டே, நான்காவது முறையாக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா அல்லது 2020-ல் முதலமைச்சராக வேண்டும் என்ற நோக்கில் கட்சியில் கிளர்ச்சியை ஏற்படுத்திய சச்சின் பைலட் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்வி பரவலாக எழுந்துவருகிறது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் – சச்சின் பைலட்

கடந்த ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடப்போகிறார் என்ற பேச்சு எழுந்தபோதுகூட, சச்சின் பைலட்டை முதல்வராக்க வேண்டும் என்று அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் குரலெழுப்பினர். எனவே, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் ஏற்படும் தாமதத்துக்கு, இருவருக்கிடையிலான உட்கட்சி மோதல் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அசோக் கெலாட், “நான்காவது முறையாக நீங்கள் முதல்வராக வர வேண்டும் என்று ஒரு பெண் என்னிடம் கூறினார். அப்போது, முதல்வர் பதவியைவிட்டு நான் விலக விரும்புகிறேன் என்று அவரிடம் கூறினேன். ஆனால், இந்தப் பதவி என்னைவிட்டு விலகவில்லை. அநேகமாக, எதிர்காலத்திலும் இந்தப் பதவி என்னைவிட்டுப் போகாது. கட்சி மேலிடம் மூன்று முறை என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு, என்னில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்” என்று கூறினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

மேலும், வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அசோக் கெலாட், “நாங்கள் (கெலாட் – பைலட்) சண்டையிட்டுக்கொள்ளாததால் பா.ஜ.க-வினர் வருத்தத்தில் இருக்கின்றனர். கட்சியில், எல்லோருடைய கருத்துகளையும் கருத்தில்கொண்டு அனைத்து முடிவுகளும் சுமுகமாக எடுக்கப்படுகின்றன. சச்சின் பைலட் ஆதரவாளர்களிடமும் பேசி, அவர்களுக்குச் சாதகமாக முடிவெடுக்கிறேன். அதனால்தான் பா.ஜ.க மட்டும் மகிழ்ச்சியாக இல்லை. கட்சிக்குள் எந்தப் பிளவும் இல்லை. `மறப்போம், மன்னிப்போம்’ என்ற தாரக மந்திரத்தை நான் பின்பற்றிவருகிறேன். ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி” என்றார்.

மொத்தம் 200 தொகுதிகள்கொண்ட ராஜஸ்தானில், நவம்பர் 25-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

from Tamilnadu News https://ift.tt/96aRQG1