சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குக் கல்வி, மருத்துவம் போன்றவை முறையாகக் கிடைக்கிறாதா என்று பார்த்தால் இல்லை… அப்படி ஏற்காடு பகுதியில் அமைந்திருக்கும் இரண்டு பள்ளிகள், பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்து வந்தன. அவற்றில்தான் குழந்தைகளும் படித்து வந்தனர். இது குறித்த தகவல் கிடைக்க, சம்பந்தப்பட்ட பள்ளிக்கட்டடங்கள் எங்கு இருக்கின்றன என்பதைத் தேடிச் சென்றோம்.

செங்காடு கிராமத்தில் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடமும், புளியங்கடை கிராமத்தில் இயங்கி வரும் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கட்டடமும் மிக மோசமான நிலையில் இருந்து வந்தன.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். அவர்களுக்கு சரியான பள்ளிக்கட்டட வசதி இல்லாமல், மழையிலும், வெயிலிலும் அமர்ந்து கல்வி பயின்று வருவதைக் கண்டோம்.

இது குறித்து 05.08.2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ’இடியும் நிலையில் பள்ளிக் கட்டடங்கள்… இல்லம் தேடி வரும் ஆசிரியர்கள்’ என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் மூலம் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அன்றைய தினமே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேரில் சென்று கட்டடங்களை ஆய்வு செய்து, உடனடியாக அந்தக் கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான நிதியாக பள்ளி ஒன்றுக்கு 25 லட்சம் ரூபாய் என, மூன்று பள்ளிகளை புதிதாகக் கட்ட 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த நிலையில், பள்ளிகளின் கட்டுமான வேலைகள் முடிந்து, நேற்றைய தினம் ஏற்காடு, செங்காடு பகுதியில் அமைந்திருக்கும் நடுநிலைப் பள்ளியையும், புளியங்கடை பகுதியில் அமைந்திருக்கும் தொடக்கப் பள்ளியையும் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா திறந்துவைத்தார்.
from Tamilnadu News https://ift.tt/W61pHFm
