கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்திருக்கும் பரவளூரில் நேற்று இரவு அ.தி.மு.க-வின் ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய புவனகிரி தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன், “நீட் தேர்வால் இதுவரை 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் வடலூரை சேர்ந்த நிஷா என்ற மாணவி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அத்தியாவசிய பொருள்களின் விலையை ஏற்றிவிட்டு, பெண்களுக்கு ரூபாய் 1,000 வழங்குவது என்பது ஏமாற்று வேலை. ஸ்டாலின் தன்னை சிறந்த முதல்வர் என்று சொல்லிக் கொள்கிறார்.

மற்ற மாநிலங்களை விட அதிகமாக கடன் வாங்கி, முதலிடத்தில் உள்ள மாநிலம் என்ற பெருமையை ஸ்டாலின் பெற்று தந்திருக்கிறார். கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வந்தபோது, ஸ்டாலின் தட்டுடன் பூவை தூக்கிப் போட்டு விட்டார். அதனால்தான் இந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் வரவில்லை. கள்ளச்சாராயம் குடித்து இருந்தவர்களுக்கு ரூபாய் பத்து லட்சம், அதை காய்ச்சிய நபருக்கு ரூபாய் 50,000 நிவாரணம் வழங்கிய தி.மு.க அரசு, தஞ்சாவூரில் 15 ஏக்கர் நெற்பயிர்களை அழித்து தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு ஒரு இரங்கல் செய்திகூட சொல்லவில்லை” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/puAvan1
