மகாராஷ்டிராவில் சிவசேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. அஜித் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 42 பேர் தனி அணியாகச் செயல்படுகின்றனர். அவர்கள் தங்களது அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று கூறி, தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருக்கின்றனர். அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றவுடன் சரத் பவார் ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டார். சரத் பவாரின் அண்ணன் பேரன் ரோஹித் பவார், கர்ஜத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். போட்டியிட்ட முதல் தேர்தலில் ரோஹித் பவார் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், அஜித் பவாரின் மகன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிவிட்டார்.

சரத் பவார், அவர் பேரன், அஜித் பவார்

இந்த நிலையில், ரோஹித் பவாரின் `பாராமதி அக்ரோ பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை மூடும்படி கூறி, கடந்த சில நாள்களுக்கு முன்பு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதிகாரிகள் ஒருமுறை மட்டும் ஆய்வு செய்துவிட்டு மாசு கட்டுப்பாட்டு விதிகள் மீறப்பட்டிருப்பதாகக் கூறி, 72 மணி நேரத்தில் கம்பெனியை மூட நோட்டீஸ் கொடுத்திருந்தனர். இதனை ரத்து செய்யக் கோரி ரோஹித் பவார் சார்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த விசாரித்த நீதிமன்றம், கம்பெனியை மூட இடைக்காலத் தடை விதித்தது.

அதோடு மனுமீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இதில் ரோஹித் பவார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அக்‌ஷய் ஷிண்டே, “மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒரு முறை மட்டும் அவசரமாக ஆய்வு செய்துவிட்டு, அவர்கள் தெரிவித்தபடி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக்கூட பார்க்காமல், 72 மணி நேரத்தில் மூடும்படி உத்தரவிட்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டார். மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், “பாராமதி அக்ரோ நிறுவனம், மாசு கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றவேண்டியது அவசியம்” என்று வாதிட்டனர். இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் பாராமதி அக்ரோ நிறுவனத்தை மூட பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்த நீதிபதிகள், “மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவில் பல பிழைகள் இருக்கின்றன. தீர்ப்பு சமநிலையில் இல்லை. நிலத்தடி நீரில் தற்போதைய மாசுபட்ட அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

மும்பை உயர் நீதிமன்றம்

விதிமுறைகள் மீறப்பட்ட அளவு, சுற்றுச்சூழல் அச்சுறுத்தல், அதனை சரி செய்வதற்கான மாற்றுவழிகள் போன்ற அம்சங்களையும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே இந்த விவகாரத்தில் இதனை புதிதாக ஆய்வுசெய்து முடிவு எடுக்கும்படி உத்தரவிடுகிறோம்” எனத் தெரிவித்தனர். மேலும், “ஒரே ஆய்வில் அனைத்து விதிமுறை மீறல்களையும் தெரிந்துகொள்ள முடியுமா?” என்று கேட்ட நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு மாற்று நடவடிக்கை எடுக்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை” என்றும் தங்களது உத்தரவில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

from Tamilnadu News https://ift.tt/nh2N7dG