2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டுமென்று 28 கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கியிருக்கின்றன. பீகார் தலைநகர் பாட்னா, கர்நாடகா தலைநகர் பெங்களூரு, மகாராஷ்டிரா தலைநகர் மும்பை ஆகிய இடங்களில் ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் சந்தித்து, பா.ஜ.க-வைத் தோற்கடிப்பதற்கான வியூகங்களை வகுத்திருக்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கிறது. ஒரு மினி நாடாளுமன்ற தேர்தலைப் போன்று இந்தத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி ஒன்றாக இணைந்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது.
இதற்கிடையில், உத்தரப்பிரதேசத்தில் கோசி சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அங்கு பா.ஜ.க-வை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது. அந்தத் தேர்தலில், பா.ஜ.க வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர். மத்தியில் பா.ஜ.க-வை வீழ்த்துவதில் ‘இந்தியா’ கூட்டணி எவ்வளவு உறுதியாக இருக்கிறது பாருங்கள் என்று கோசி இடைத்தேர்தலின் முடிவு அனைவரையும் பேசவைத்தது.

ஆனால், அதன் பிறகு உத்தராகண்ட் மாநிலம் பாகேஸ்வர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு சமாஜ்வாடி ஆதரவு அளிக்கவில்லை. அங்கு, தன்னுடைய வேட்பாளரை சமாஜ்வாடி நிறுத்தியது. காங்கிரஸ் வேட்பாளரை பா.ஜ.க தோற்கடித்தது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடித்தது. ஆனால், உத்தராகண்ட்டில் சமாஜ்வாடி கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லை.
இப்போது, மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தலையொட்டி இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் உத்தரப்பிரதேச எல்லையையொட்டி சில தொகுதிகளில் சமாஜ்வாடிக்கு செல்வாக்கு இருக்கிறது. அங்கு, 2003-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஏழு தொகுதிகளில் சமாஜ்வாடி வெற்றிபெற்றது. ஆனால், அப்படியொரு வெற்றி அதன் பிறகு அந்தக் கட்சிக்கு கிடைக்கவில்லை. 2019-ல் ஒரே ஒரு தொகுதியில்தான் சமாஜ்வாடியால் வெற்றி பெற முடிந்தது. அந்த எம்.எல்.ஏ-வையும் பா.ஜ.க தன் பக்கம் இழுத்துக்கொண்டது.

இந்த நிலையில்தான், தற்போது காங்கிரஸுடன் தொகுதிப்பங்கீடு செய்துகொள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் விரும்பினார். மத்தியப்பிரதேசத்தில் பலம் வாய்ந்த கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. 2018-ல் அங்கு காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற்றது. கமல்நாத் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் நடந்த உட்கட்சி சண்டையில், ஜோதிராதித்யா சிந்தியா சில எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க-வுக்குத் தாவிட்டார். அதனால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பா.ஜ.க அதிகாரத்துக்கு வந்தது.
இந்த முறையும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுவிடும் என்று ராகுல் காந்தி உள்ளிட்டோர் அடித்துச்சொல்கிறார்கள். அதற்கான வாய்ப்பு இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன. இந்தச் சூழலில், தொகுதிப்பங்கீடு பற்றி பேசுவதற்காக சமாஜ்வாடி தலைவர்கள் சென்றிருக்கிறார்கள். காங்கிரஸின் முன்னாள் முதல்வர்கள் கமல்நாத்தையும், திக்விஜய் சிங்கையும் சந்திக்கச் சென்ற அவர்களை நள்ளிரவு ஒரு மணி வரை சந்திக்காமல் காக்கவைத்திருக்கிறார்கள். அது, அகிலேஷ் யாதவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

“இந்தியா கூட்டணி, தேசிய அளவிலானதா? மாநில அளவிலானது இல்லையா என்று காங்கிரஸை நோக்கி சமாஜ்வாடி தலைவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். மாநில அளவில் கூட்டணி இல்லையென்றால், நாடாளுமன்றத் தேர்தல் வரும்போது உத்தரப்பிரதேசத்தில் நான் பார்த்துக்கொள்கிறேன்.. இதேபோல நான் நடந்துகொள்வேன்” என்று கனலைக் கக்கியிருக்கிறார் அகிலேஷ் யாதவ்.
நிலைமை இவ்வளவு தூரம் சென்றும், இது குறித்து காங்கிரஸின் அகில இந்திய தலைமை வாய்திறக்கவில்லை. இப்படி இருந்தால், பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் எப்படி நிறைவேறும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில ஊடகப்பிரிவின் தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம். “மத்தியப்பிரதேசத்தில் சமாஜ்வாடிக்கு செல்வாக்கு இல்லை. அவர்களுக்கு சில தொகுதிகளைக் கொடுத்து, அந்தத் தொகுதிகளில் தோற்றுவிட்டால், காங்கிரஸ் ஆட்சியமைப்பது பாதிக்கப்படும். ஆட்சியைப் பிடிக்க ஒவ்வொரு தொகுதியும் முக்கியம் என்பதைப் பார்க்க வேண்டும்.

இந்தப் பிரச்னையால் அகிலேஷ் யாதவ் தற்போது அதிருப்தியில் பேசலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் சூழல் மாறிவிடும். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களுடன் அகிலேஷ் யாதவ் சுமூகமான உறவுடன் இருக்கிறார். அதனால் பிரச்னை எதுவுமில்லை. நாடாளுமன்றத் தேர்தல் எந்தப் பிரச்னையும் இருக்காது. மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதுதானே இந்தியா கூட்டணியின் நோக்கம்” என்கிறார் கோபண்ணா.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/NhJGl3o
