திருவண்ணாமலையில் நேற்று மாலை நடைபெற்ற தி.மு.க-வின் வடக்கு மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப்பட்டறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ‘‘ஒளிமிகுந்த ஊரில் உங்கள் முகங்களைப் பார்க்கும்போது உதயசூரியனை பார்ப்பதுபோல் தோன்றுகிறது. தினமும் காலை சூரிய ஒளியை பார்க்கும்போது ஏற்படும் உற்சாகம் உங்களை பார்க்கும்போது ஏற்படுகிறது. எனது சக்தியின் ரகசியமே நீங்கள்தான். திருவண்ணாமலையும் தீபமும் போலத்தான் திருவண்ணாமலையும் தி.மு.க-வும். யாராலும் பிரிக்கமுடியாது. கடந்த மார்ச் மாதம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினோம். அப்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். மாநிலம் முழுவதும் தேர்தல் பூத் கமிட்டிகளை அமைத்துள்ளோம்.

வெற்றி ஒன்றே இலக்காக இருக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்குங்கள். அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். யாருக்கு என்ன தேவையோ, அதை பெற்றுக்கொடுங்கள். முதியோர் உதவித்தொகை உட்பட எந்த உதவி தேவையோ அதை கேட்டு உதவுங்கள். அரசின் சாதனைகளை மக்களிடத்தில் எடுத்துக்கூறி புரியவையுங்கள். நமது திட்டங்களால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும் ஏதோ ஒரு விதத்தில் பயனடைந்துகொண்டிருக்கிறது. அப்படி மக்களுக்காக பார்த்துப் பார்த்து திட்டங்களை நாம் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். இதனால் தி.மு.க ஆட்சிமீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
‘தி.மு.க ஆட்சிக்கு வந்து எந்த புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை’ என்று சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அது பேச்சு அல்ல, வயித்தெரிச்சல். வயித்தெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டியிருக்கிறார். இந்த இரண்டரை ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியில் செய்த சாதனைகளை கூறவேண்டுமானால், எனக்கு தனியே 2 மணி நேரம் வேண்டும். அவ்வளவு சாதனைகள் படைத்துள்ளோம். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த பச்சைப் பொய்யர் பழனிசாமி பேசுகிறார். சொன்னதிலேயே பெரிய பொய் எதுத் தெரியுமா?
‘அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களைத்தான் நாம் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறோம்’ என்றும் மிகப்பெரிய பொய்யை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் அ.தி.மு.க கொண்டுவந்த திட்டமா, பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் அ.தி.மு.க கொண்டுவந்த திட்டமா, காலை சிற்றுண்டி திட்டம் யாருடையது அ.தி.மு.க திட்டமா? இது குறித்து எடப்பாடி பழனிசாமி பச்சைப் பொய் பேசி வருகிறார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம், பா.ஜ.க-வின் பாதம் தாங்கியாக இருக்கிற பழனிசாமி ஆட்சியில் நடைபெற்றதா… இன்னமும் தரையில்தான் ஊர்ந்துகொண்டிருக்கிறாரா, கொஞ்சம் தலையை தூக்கிப் பாருங்கள் பழனிசாமி, தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறது. பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாட்டின் நலன்களும், உரிமைகளும் பா.ஜ.க-விடம் அடகு வைத்து காவு கொடுக்கப்பட்டது.

தி.மு.க குடும்பக்கட்சி தான். கோடிக்கணக்கான குடும்பங்களை வாழவைக்கும் கட்சி இது. ஒற்றைக் கையெழுத்தில் கோடிக்கணக்கான குடும்பங்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய தி.மு.க குடும்ப கட்சிதான். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி முழுமையாக தோற்கடிக்கப்பட விருக்கிறார். டெபாசிட்டை காப்பாற்ற, பா.ஜ.க-விடம் இருந்து தனியாக பிரிந்ததுபோல் உள்ளே, வெளியே நாடகத்தை எடப்பாடி பழனிசாமி நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். மக்களைப் பிளவுபடுத்தி, அடிமைப்படுத்தக்கூடிய பாசிச பாஜகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல் களத்திற்கு திருவண்ணாமலை பாசறை கூட்டம் நல்ல வழிகாட்டியாக அமையட்டும். தீபம் தெரிவதைபோல இந்தியாவுக்கு நம்பிக்கை ஒளி தெரிகிறது. இந்தியா வாழ்க, இந்தியா கூட்டணி வாழ்க’’ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/O5nfiKN
