தேனி மாவட்டம், வீரபாண்டியில் திமுக வடக்கு, தெற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரையில் ஒரு மாநாடு நடத்தினார்கள். ஒரு மாநாடு எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணம் அந்த மாநாடு தான். அதில் கட்சியின் வரலாறு, கொள்கை குறித்து பேசவில்லை. ஆடல் பாடல் நடத்தி, புளிச்சோறு நன்றாக இருந்ததா, சாம்பார் சோறு நன்றாக இருந்ததா எனப் பேசினார்கள். நாம் சேலத்தில் டிசம்பர் 17 -ம் தேதி நடத்தப்போகும் மாநாடு முன்னுதாரணமான மாநாடாக அமையும். 10 லட்சம் பேரை திரளும் அந்த மாநாட்டில் கட்சியின் வரலாறு, கொள்கை, சாதனை குறித்து பேசுவோம். 

உதயநிதி ஸ்டாலின்

கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வு வரவில்லை. பாஜக-வின் அடிமை அதிமுக வந்த பிறகு தான் நீட் தேர்வு வந்தது. அதனால் அனிதா, ஜெகதீஸ் உள்பட 22 பேர் உயிரிழந்துள்ளனர். மாணவர்கள் மட்டுமில்லாது மாணவர்களின் பெற்றோர்களும் உயிரிழந்தனர். தேர்தலின் போது நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம் என வாக்குறுதி அளித்திருந்தோம். அதற்காக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறோம். அதற்காக 2  முறை மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நீட் விலக்கை மக்கள் இயக்கமாக மாற்ற 50 நாள்களில் 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க உள்ளோம். அதை சேலம் மாநாட்டில் வைத்து முதல்வரிடம் ஒப்படைப்போம். 

கையெழுத்து இயக்கத்தை நாடகம் என்கிறார்கள். நீட் தேர்வுக்கு எதிராக போராடுகிறோம் எனக் கூறும் எடப்பாடி பழனிசாமியை எங்களுடன் சேர்ந்து போராட அழைக்கிறேன். நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுவிட்டால் அந்த வெற்றியை அவருக்கே கொடுத்துவிடுகிறோம். 

செயல்வீரர் கூட்டம்

பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகளாகிவிட்டன. ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவதாகக் கூறிய வாக்குறுதி என்ன ஆனது. ஆனால் திமுக கொடுத்த மகளிர் உரிமை தொகை வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளது. மோடி எங்கு சென்றாலும் திமுக குறித்து பேசுகிறார். குறிப்பாக என் மீது அவ்வளவு பிரியமாக உள்ளார் மோடி. ஆம் மோடி சொல்வது போல் குடும்ப ஆட்சி தான் நடத்துகிறோம். தமிழகமே எங்கள் குடும்பம் தான். மோடி, இ.டி-க்கு நான் பயப்பட போவது இல்லை. ஏன் எங்கள் கிளை செயலாளர் கூட அஞ்சப்போவது இல்லை. எதையும் நீதிமன்றம் சென்று சந்திக்க தயாராக உள்ளேன். 

மோடி ஆட்சி அதானி வளர்ச்சிகாக தான் உள்ளது. மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். விமானி இல்லாமல் கூட செல்வாரே தவிர அதானி இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லமாட்டார். அதை ராகுல்காந்தி புகைப்பட ஆதாரத்துடன் கேள்வி கேட்டார். ஆனால் அதற்கு தற்போது வரை பதில் கிடைக்கவில்லை. ஆட்சிக்கு வரும்போது இந்தியாவை வல்லரசாக்குவோம் என்றார். 9 ஆண்டுகளாவிட்டன இப்போதும் அதையே தான் சொல்கிறார். 9 ஆண்டு ஆட்சியில் 7.50 லட்சம் கோடி ரூபாய் கணக்கில் வரவில்லை என்கிறது தணிக்கை குழு. ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்க மட்டும் 250 கோடி என்கிறார்கள். ரமணா படத்தில் இறந்தவரை ஐசியூவில் வைத்து கொண்டு பணம் பறிப்பதை போல, இறந்த 88 ஆயிரம் பேருக்கு மருத்துவக்காப்பீடு கொடுத்து ஊழல் செய்கிறார்கள். 

கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணியினர்

கட்சி பெயரில் அண்ணாவையும் திராவிடத்தையும் வைத்து கொண்டு, ஆளுநர் ஆரியம், திராவிடம் இல்லை எனக் கூறிய கருத்துக்கு பதில் சொல்லாமல் அந்த அளவுக்கு படிக்கவில்லை என்கிறார் எடப்பாடி. எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என நாடகம் போடுகிறார். அவர்கள் கூட்டணி வைக்கிறார்களோ, தனியாக நிற்கிறார்களோ ஜெயிக்க போவது என்னவோ திமுக தான்” என்றார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/Cuw7lmj