பெட்ரோல் குண்டு வீச்சு:
கடந்த 25-ம் தேதி மதியம் 3 மணியளவில் ரௌடி கருக்கா வினோத் என்பவர் ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை தீ பற்றவைத்து வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த நபரை அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த மற்ற பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட வினோத் உடனடியாக சிறையிலும் அடைக்கப்பட்டார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் சென்னைக்கு வரும் சமயத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயத்தில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டக் கருக்கா வினோத் என்பவர் ஏற்கனவே டாஸ்மாக், போலீஸ் நிலையம் மற்றும் பாஜக தமிழ்நாடு தலைமையகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல்நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சமீபத்தில் தான் சிறையிலிருந்து வெளியில் வந்த வினோத் இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பேசுபொருளானது.
`முன்னுக்குப் பின் முரண்’
இந்த சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில், “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டுத் தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்” என்றும், மற்றொரு அறிக்கையில், “ஆளுநர் மாளிகை, ஆளுநர் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. ஆனால், அந்தப் புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படுவதில்லை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அடுத்து வந்த அறிக்கையில், “அவசர கதியில் கைது மேற்கொள்ளப்பட்டு, மாஜிஸ்ட்ரேட்டை நள்ளிரவில் எழுப்பிக் குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால், பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது” என்று கூறப்பட்டிருந்தது.
ஆளுநர் மாளிகையின் இந்த புகாருக்குத் தமிழ்நாடு காவல்துறை தரப்பில், “குற்றவாளி கருக்கா வினோத் தேனாம்பேட்டையிலிருந்து நடந்து ஆளுநர் மாளிகைப் பகுதிக்கு வந்தார். அவரிடம் பெட்ரோல் நிரம்பிய நான்கு பாட்டில்கள் இருந்தன. கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை உள்ளே நுழைய முயலவில்லை. அவர் மாளிகையின் எதிர்புறமிருந்து வீசியிருக்கிறார். அவரைக் கைதுசெய்ததும் காவல்துறைதான். ஆளுநர் மாளிகைப் பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை. அங்கு 253 காவலர்கள் பணியில் இருக்கிறார்கள். உரியப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. முதலில் பலர் வந்து குண்டு வீசியதாகத் தகவல் பரவியது. இங்குப் பல சிசிடிவி காட்சிகளைக் காண்பித்தோம். அவர் தனியாகத்தான் வந்தார். ஆளுநர் மாளிகை பக்கத்தில்கூட வரவில்லை. எதிர்புறத்திலிருந்துதான் வீசினார். நான்கு பாட்டில்களை எடுத்துவந்தார், இரண்டு வெடித்தது. கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து விசாரித்த பின்னர் முழுமையான தகவல் தெரியவரும்” என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.
ஜாமீன் எடுத்தது பாஜக-வினரா?!
இந்த பரபரப்பான சூழலில் சிறையிலிருந்த கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது பாஜக பிரமுகர்தான் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், “ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது. இவரைச் சிறையிலிருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தைக் கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாகத் தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது” என்று கூறியிருந்தார். இது தொடர்பான ஆவணமும் திமுகவின் அங்கீகரிக்கப்பட்ட எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியாகியிருந்தது.
பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்:
அமைச்சரின் இந்த கருத்துக்குப் பிறகு பாஜகவின் எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்தது திமுகவினர். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரைச் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது. பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து 2021-ம் ஆண்டே விலகிவிட்டார்.

அது மட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரைப் பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது. தன் மீதே பல ஊழல் குற்றச்சாட்டுக்களை வைத்துக்கொண்டு, ஊழல் தடுப்புப் பிரிவைக் கையாளும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மூன்றாம்தர இணைய ஊடகங்களைப் போலப் பொய்ச் செய்திகளைப் பரப்பிக் கொண்டு இருக்கிறார். நீதிமன்ற வளாகத்திலேயே கொலைகள் நடப்பது முதல், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கையில், சட்டத் துறை அமைச்சர் சிறிதேனும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று பாஜக பதிவு செய்திருந்தது.
ஒரு ரெளடியை ஜாமீனில் எடுத்த விவகாரத்தில் திமுக – பாஜக மாறி மாறி குற்றம்சாட்டி வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/RhTEcIW
