நீட் தேர்வினை ரத்து செய்யக் கோரி தி.மு.க சார்பில், பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக விழுப்புரத்தில் இன்று கையெழுத்து வாங்கும் பணியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார். அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நீட் தேர்வை ரத்து செய்வதற்கு பல்வேறு நடவடிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்து வருகிறார். குடியரசுத் தலைவர் சென்னை வந்தபோதும், நீட் தேர்வினை ரத்து செய்யக் கோரி கடிதம் கொடுத்திருக்கிறார்.

நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு, 50 லட்சம் பேரிடம் வாங்குவதற்கான முனைப்புடன் தி.மு.க செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றவுடன், நீட் விலக்கு கொண்டு வரப்படும். நீட் தேர்வினை ரத்து செய்யும் முயற்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியும் வெற்றி பெறுவார்கள்” என்றார். அப்போது, `ஆரியம், திராவிடம் குறித்து எனக்குத் தெரியாது. ஆராய்ச்சியாளர்களைத்தான் கேட்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி தெரிவித்திருக்கிறாரே?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “ஆரியம், திராவிடம் குறித்து பள்ளி மாணவர்களுக்கே தெரியும். ஆரியத்தால் பாதிக்கப்பட்டு, திராவிட உணர்வுடன் பள்ளியிலேயே மாணவர்கள் படித்து கொண்டு இருக்கின்றனர். ஆரியம், திராவிடம் குறித்து எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களின் கட்சிப் பெயரே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் அவருக்கு அண்ணாவையும் தெரியவில்லை. திராவிடத்துக்கும், ஆரியத்திற்கும் பொருளும் தெரியவில்லை.

அவர் எப்படி அந்த கட்சியின் உறுப்பினராக, பொதுச்செயலாளராக ஆனார் என்றே தெரியவில்லை. ஆரியம், திராவிடம் குறித்து தெரிந்துகொள்ள ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆறாவது, ஏழாம் வகுப்பு பாடப் புத்தகத்திலேயே அது இருக்கிறது. திராவிடம் குறித்து தெரிந்து கொள்ளாமல் எப்படி ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார்… இது குறித்து தெரியாது என்று அவர் கூறுவது, வெட்கக்கேடாக இருக்கிறது. அவர் என்ன படித்தார், எப்படி இந்த அ.தி.மு.க-விற்கு வந்தார் என்பதே தெரியவில்லை” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/7TUcXIL
