ஹமாஸ் குழுமீது பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், பாலஸ்தீனத்தின்மீது நான்காவது வாரமாகப் போர்தொடுத்து வருகிறது இஸ்ரேல். இதில், ஹமாஸ் தாக்குதலில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்திருக்க, இஸ்ரேலின் தாக்குதலில் மட்டும் 8,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தப் போரில் சவுதி அரேபியா, கத்தார், இரான், சிரியா, துருக்கி போன்ற நாடுகள் வெளிப்படையாகவே இஸ்ரேலை எதிர்த்து வருகின்றன. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றன.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் | போர்

ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஹமாஸை தீவிரவாத இயக்கம் எனக் கூறி இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கின்றன. இந்தியாவும்கூட தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற இதே கருத்தை முன்வைத்து, இஸ்ரேல் பக்கம் நிற்கிறது. இதில், அமெரிக்கா ஒருபடி மேலாக இஸ்ரேலுக்கு ஆயுத உதவிகளைச் செய்து வருகிறது. இத்தகைய சூழலில், `பாலஸ்தீனம்மீது இஸ்ரேல் நடத்தும் போர், மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ என கடந்த வாரம் ஐ.நா-வில் ஜோர்டான் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 120 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 14 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராகவும் வாக்களிக்க, இந்தியா உட்பட 45 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துவிட்டன.

மேலும், `தீவிரவாத செயல்களை எந்த நியாயப்படுத்துதலுக்கும் உலகம் விலைபோகக் கூடாது. அதேசமயம், பாலஸ்தீனத்தில் ஏற்பட்டிருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட வேண்டும்’ என, இந்தியா கருத்தும் தெரிவித்தது. இருப்பினும், பாதிக்கப்படும் பாலஸ்தீனத்துக்கு இந்தியா ஆதரவாக நிற்காமல் வாக்கெடுப்பை புறக்கணித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக மத்திய பா.ஜ.க அரசை, காங்கிரஸ் சாடியது. இதற்கு, பா.ஜ.க தரப்பிலிருந்தும் பல்வேறு பதில் விமர்சனங்கள் வந்தன. இந்த நிலையில், தீவிரவாதத்தின்மீது வலுவான நிலைப்பாட்டை எடுப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

ஜெய்சங்கர்

போபாலில் நேற்று பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இன்று, ஒரு நல்ல அரசு மற்றும் வலுவான ஆட்சி அதன் மக்களுக்காக நிற்கிறது. இங்கு உள்நாட்டில் எப்படி நல்லாட்சி தேவையோ, அதேபோல வெளிநாடுகள்மீது சரியான நிலைப்பாடுகள் எடுப்பதும் அவசியம். எனவேதான், தீவிரவாதத்தின்மீது நாங்கள் வலுவான நிலைப்பாட்டை எடுக்கிறோம். ஏனென்றால், தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். தீவிரவாதம் நம்மை தாக்கும்போது அது தீவிரமானது என்றும், மற்றவர்களைத் தாக்கும்போது அது தீவிரமானது இல்லை என்றும் கூறினால், அது நம்மீது நம்பகத்தன்மையை இல்லாமல் ஆக்கிவிடும். எனவே, நாம் ஒரு நிலையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/LJYszXG