கேரள மாநிலம், கொச்சி களமசேரியில் யெகோவா சாட்சிகள் கிறிஸ்தவ சபை சார்பில் நடந்த கன்வென்ஷன் கூட்டத்தில், கடந்த 29-ம் தேதி வெடிகுண்டு வெடித்தது. அந்தச் சம்பவத்தில் இதுவரை 3 பேர் மரணமடைந்திருக்கின்றனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்த்தியதாக டொமினிக் மார்ட்டின் என்பவர் போலீஸில் சரணடைந்தார். அவரை போலீஸார் கைதுசெய்தனர். இணையதளத்தைப் பார்த்து ஆலுவாவிலுள்ள வீட்டில் வைத்து, வெடிகுண்டு தயாரித்ததாகவும், அதற்காக 3,000 ரூபாய் செலவானதாகவும் டொமினிக் மார்டின் தெரிவித்திருக்கிறார். குண்டுவெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள டி.ஜி.பி, `வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பிரிவினையை ஏற்படுத்தும் தவறான தகவல்களைப் பகிரக் கூடாது’ என எச்சரித்திருந்தார்.

மேலும் சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியிருந்தார். அதே சமயம் மத்திய தகவல் தொழில்நுட்பவியல் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், `கேரளாவில் ஹமாஸ் தீவிரவாதியைப் பேசவைத்ததன் பலனை 24 மணி நேரத்துக்குள் பார்த்துவிட்டோம்’ என கருத்து தெரிவித்ததுடன், அது குறித்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டிருந்தார்.
சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், “பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கேரள மக்கள் ஒன்றாக நிற்கிறார்கள். மக்களின் கவனத்தை திசைதிருப்ப இது போன்ற பயங்கரவாதச் செயலை செய்தாலும், ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட ஒவ்வொருவரும் ஒன்றாக எதிர்க்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், வெடிகுண்டு வெடித்த பிறகு சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பரப்பியவர்கள் குறித்து கேரள சைபர் க்ரைம் போலீஸார் கணக்கெடுத்தனர். அதன்படி, மதப் பிரிவினையைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக, மத்திய தகவல் தொழில்நுட்பவியல் இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கொச்சி சென்ட்ரல் போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். வழக்கு குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரன், ‘எனக்கு எதிராக வழக்குப்போடுவதில் பினராயி விஜயனும், ராகுல் காந்தியும் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். எஸ்.டி.பி.ஐ, பி.எஃப்.ஐ, ஹமாஸ் ஆகிய தீவிரவாத அமைப்புகளை ஊக்குவிக்கிறது கேரள அரசு. இந்த அரசியல்தான் கஷ்மீரிலும், பஞ்சாப்பிலும், கேரளாவிலும் மக்களின் உயிரைப் பறித்தது. ஹாமாஸ் அமைப்பை ஊக்குவிப்பதை வெளிப்படுத்தியதால்தான் என்மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் வி.முரளீதரன், “களமசேரியில் நடந்தது ஒரு தீவிரவாதச் செயல் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. தனிநபரால் பெரிய அளவில் வெடிகுண்டு வெடிக்கச் செய்யமுடியும் என்ற நிலைக்கு கேரளா மாறியிருக்கிறது என்பது மோசமான நிலைதான். வழக்குப்போட்டதால் ராஜீவ் சந்திரசேகர் பயந்து ஓடப்போவதில்லை. அப்படிப் பார்த்தால் சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் மீதுதான் முதலில் வழக்கு பதிந்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையே சி.பி.எம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என, காங்கிரஸ் சார்பில் டி.ஜி.பி-யுடம் மனு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
from Tamilnadu News https://ift.tt/KsPMGvB
