பழ.செல்வகுமார், மாநிலத் துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க
‘‘ஒரு வகையில் உண்மைதான். அனைத்து சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடும் குண்டர்களின் புகலிடமாக மாறியிருக்கிறது தமிழக பா.ஜ.க தலைமையகமான கமலாலயம். நிதி மோசடியாளர்கள், நில அபகரிப்பாளர்கள் மட்டுமின்றி ஏ கிளாஸ் ரௌடிகளுக்குக்கூட பதவி கொடுத்து அழகு பார்க்கிறார் போலி போலீஸ் அண்ணாமலை. ஆளுநர்மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த முயற்சி நடப்பதாகவும், குற்றவாளி தப்பியோடிவிட்டார், கூட்டமாக வந்தார்கள் என்றும் அடுக்கடுக்காகப் பொய் சொல்கிறது ஆளுநர் மாளிகை. ஆனால், அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று டி.ஜி.பி ஆதாரங்களுடன் விளக்கம் கொடுக்கிறார். ஆக, இந்த ஒரு விவகாரத்திலேயே இத்தனை பொய் என்றால், ஆளுநர் மாளிகை இதுவரை எத்தனை பொய்களைச் சொல்லியிருக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள். தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்க வேண்டும் என ஒரு சதிகாரக் கூட்டமே திட்டம் போட்டு வேலை செய்துகொண்டிருக்கிறது. அவர்களின் எண்ணம் இந்த மண்ணில் ஒருபோதும் ஈடேறப்போவதில்லை. காரணம் இது பெரியார் மண். நடப்பது அண்ணா, கலைஞர் வழி ஆட்சி. அதை நடத்திக்கொண்டிருப்பவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!’’

கே.பி.ராமலிங்கம், மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க
‘‘தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. காவல் நிலையத்துக்கு அருகில் தொடங்கி, கோர்ட் வாசல் வரை சர்வ சாதாரணமாகக் கொலைகள் நடக்கின்றன. பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்து கத்திமுனையில் கொள்ளையடிக்கிறார்கள். வழிப்பறி, செல்போன் பறிப்பு, செயின் பறிப்புச் சம்பவங்கள் சாதாரண விஷயங்களாகிப்போய்விட்டன. மாநிலத்தில் உச்சப் பாதுகாப்பில் இருக்கும் ஆளுநருக்கே உரிய பாதுகாப்பு இல்லையென்றால், சாதாரண மனிதனின் நிலைமையைச் சற்று நினைத்துப் பாருங்கள். பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன்தான் நடமாடும் சூழல் நிலவுகிறது. இதைத்தான் எங்கள் தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார். மது, கஞ்சா போதையில் குற்றங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கே காவல்துறைக்கு நேரம் போதவில்லை. இதில் குற்றம் செய்பவர்களைக் கண்காணிக்க எங்கு நேரமிருக்கப்போகிறது… ஆனால், ‘தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது’ என்று பொய் சொல்லி ஊரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது ஆளும் திறனற்ற தி.மு.க!’’
from Tamilnadu News https://ift.tt/Nh0qidk
