முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில், கடந்த ஆண்டு மே மாதம் அப்போது மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் பணமோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர், கலால் மற்றும் கல்வித்துறையை கவனித்துவந்த துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக இந்த ஆண்டு பிப்ரவரியில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இதில், சத்யேந்தர் ஜெயினும், மணீஷ் சிசோடியவும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.

அவர்களைத் தொடர்ந்து, மீண்டும் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சென்ற அக்டோபர் மாத தொடக்கத்தில் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் வீட்டில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை அவரைக் கைதுசெய்து சிறையிலடைத்தது. இதில், சத்யேந்தர் ஜெயின் மட்டுமே தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார். மணீஷ் சிசோடியாவுக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறான சூழலில், மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக நவம்பர் 2-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது.
அதன்படி, நாளை காலை 11 மணியளவில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, நாளை விசாரணை முடிந்ததும் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி அச்சம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், மொத்த கட்சியும் சிறைக்குச் சென்றால், ஆட்சியும் சிறையிலிருந்துதான் நடக்கும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பரத்வாஜ் தெரிவித்திருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவால் மீதான அமலாக்கத்துறை சம்மன் குறித்து ஊடகத்திடம் பேசுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டால் அடுத்தகட்ட வியூகம் என்ன என்ற கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் பரத்வாஜ், “அதை கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள். ஆனால், மொத்த கட்சியும் சிறையிலிருந்தால், ஆட்சியும் கட்சியும் சிறையிலிருந்துதான் நடத்தப்படும். பா.ஜ.க-வும் அதைத்தான் விரும்புகிறது. அனைவருமே சிறையிலிருக்க வேண்டும், இலவச கல்வி, இலவச மின்சாரம், இலவச தண்ணீர், இலவச பயணம், மருத்துவமனைகள் மற்றும் மொஹல்லா கிளினிக்குகள் போன்றவை நிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அரவிந்த கெஜ்ரிவால் அவ்வாறு நடக்க விடமாட்டார்.
பா.ஜ.க-வுக்கு யார் தடையாக இருந்தாலும், அவர்களும் அவர்களது கட்சித் தலைவர்களும் சிறையிலடைக்கப்படுவார்கள் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. பணமோசடி தடுப்புச் சட்டம் என்பது எந்த ஆதாரமும் இல்லாமல் யாரையும் பல ஆண்டுகளாக சிறையிலடைக்கும் சட்டம்.

மொத்த நாடும் இதைப் பார்க்கும்போது, நீதிமன்றங்களால் மட்டும் ஏன் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை… எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக சிறைக்கு அனுப்பப்படுவதை நீதிமன்றங்கள் கண்டுகொள்ளவில்லையா… இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்துவதை நீதிமன்றங்கள் தடுத்து நிறுத்தும் என்று மட்டுமே நம்ப முடியும்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/YiU9DIF
