நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் எல்லாம், விஜய் அரசியலுக்கு வருவதற்கான செயல்கள் என்று பல நாள்களாகவே பேசப்பட்டு வருகிறது. அதில், உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாகப் போட்டியிடுதல், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்துதல் எனப் பலவற்றைக் கூறலாம்.

இத்தகைய சூழலில், நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற லியோ திரைப்பட வெற்றி விழாவில், `2026-ல் கப்பு முக்கியம் பிகிலு’ என விஜய், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான பேச்சுகள் குறித்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், `அரசியலுக்கு வந்தால் நின்று சண்டை செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், விஜய்யின் அரசியல் வருகை தொடர்பாக பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த சீமான், “விஜய்யைத் தட்டிக்கொடுப்போம். எந்தவொரு தலைவனின் வருகைக்காகவும் வரலாறு காத்திருந்ததில்லை. இருக்கிறவர்களில் ஒருத்தரை அதுவே தேர்வு செய்து கையைப் பிடித்து நடத்திச் சென்றுவிடும். அதில், அவரும் (விஜய்) வர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கான வேலைகளைச் செய்கிறார், வரட்டும்.

என்னென்ன கோட்பாடுகள், என்னென்ன கொள்கைகளை முன்னிறுத்துகிறோம் என்பதை மக்கள் ஏற்கும்போதுதான், அது வெற்றி பெறும். அது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. தி.மு.க-விலிருந்து வெளியே வந்த பிறகு எம்.ஜி.ஆரே கட்சி தொடங்க பயந்தார். மீண்டும் தி.மு.கவுடனே இணைந்துவிடலாம் என்றெல்லாம் பெரும் முயற்சி செய்தார். பிறகு, கருணாநிதி மட்டுமே இருந்ததால் அவரை எதிர்க்க ஓர் ஆள் தேவைப்படுதே என்று அவரே வந்தார். எம்.ஜி.ஆரைப் பார்த்து என்.டி.ஆர் கட்சி தொடங்கினார். அதன் பிறகு அங்கு வந்த சிரஞ்சீவியோ, பவன் கல்யாணோ அந்த அளவுக்குச் செல்ல முடியவில்லை.

இங்கேயும் விஜயகாந்த் வலிமையாக இருந்தார். ஆனால், விஜயகாந்த் நின்று சண்டை செய்யாமல், ஜெயலலிதாவிடம் கூட்டணிக்குச் சென்றதால் சரிந்தார். எனவே, நின்று சண்டை செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றியை நெருங்க முடியும். ஒரே நாளில் வெற்றி என்பதெல்லாம் சாத்தியப்படுத்த முடியாது. எனவே விஜய்யின் கனவு வெல்வதற்கு வாழ்த்துகள்” என்று கூறினார்.
from Tamilnadu News https://ift.tt/ZV32OLx
