ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் ஒன்றான மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் களம் படு விறுவிறுப்பாக இருக்கிறது. அங்கு நீண்டகாலமாக பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவந்தாலும், 2018-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று, கமல்நாத் தலைமையில் ஆட்சியமைத்தது.

கமல்நாத்

ஆனால், அந்த ஆட்சி நீண்டகாலம் நிலைக்கவில்லை. காங்கிரஸிலிருந்து சில எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க-வுக்கு ஜோதிராதித்யா சிந்தியா தாவியதால், அங்கு பா.ஜ.க அதிகாரத்தைக் கைப்பற்றியது.

என்ன விலை கொடுத்தாவது மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைப்பது என்ற முடிவுடன் பா.ஜ.க தீவிரமாக வேலை செய்துவருகிறது. மூன்று மத்திய அமைச்சர்கள், ஏழு எம்.பி-க்கள், ஒரு பொதுச்செயலாளர் ஆகியோரை மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக பா.ஜ.க நியமித்தது. இந்தக் குழுதான், மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் மோடியின் சூறாவளி சுற்றுப்பயணத்தை வடிவமைத்தது.

சிவராஜ் சிங் சௌஹான்

நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேசத்தில், பா.ஜ.க-வுக்கு ஆதரவாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. அப்போது, ‘காங்கிரஸ் ஓர் ஊழல் மலிந்த கட்சி… பழங்குடியினச் சமூகத்தை காங்கிரஸ் புறக்கணித்தது. தற்போது, காங்கிரஸ் தலைவர்கள் மக்களிடம் என்ன சொல்வார்கள்… காங்கிரஸின் போலி வாக்குறுதிகளால், மோடியின் வாக்குறுதிகளுக்கு முன்னால் நிற்க முடியாது. இந்தத் தேர்தல், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸின் ஊழலையும், கொள்ளையையும் தடுத்து நிறுத்துவதற்கான தேர்தல்’ என்று மோடி விமர்சித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் 2005-ம் ஆண்டிலிருந்து பா.ஜ.க-வின் ஆட்சிதான் நடைபெறுகிறது. இடையில் ஓர் ஆண்டு மட்டுமே காங்கிரஸின் ஆட்சி நடைபெற்றது. அப்படியிருக்கும்போது, காங்கிரஸின் ஊழலைத் தடுத்து நிறுத்துவது பற்றி மோடி பேசியதில் என்ன அர்த்தம் இருக்கிறது?’ என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுக்கால பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளை ஏன் பிரதமர் மோடியால் பட்டியலிட முடியவில்லை என்பது தெரியவில்லை.

ராகுல் காந்தி – மோடி

`மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்’ என்கிறார் ராகுல் காந்தி. ‘தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்தது. ஆனால், அந்த ஆட்சியை பா.ஜ.க கவிழ்த்துவிட்டது’ என்று மத்தியப் பிரதேசத்தில் பிரசாரம் செய்தார் ராகுல் காந்தி.

போபால் அருகே விதிஷா என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பெரும் புயல் வீசப்போகிறது. 145 தொகுதிகளிலிருந்து 150 தொகுதிகள் வரை காங்கிரஸ் நிச்சயம் கைப்பற்றும். ஐந்தாண்டுகளுக்கு முன்பு நீங்கள் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெறச் செய்தீர்கள். ஆனால், எம்.எல்.ஏ-க்களையும், உங்கள் ஆட்சியையும் பா.ஜ.க தலைவர்கள் திருடிவிட்டார்கள்’ என்றார்.

ராகுல் காந்தி

மேலும், ‘கர்நாடகாவில் 40 சதவிகித கமிஷன் அரசை பா.ஜ.க நடத்தியது. கடந்த ஐந்தாண்டுகளில் ஏழை மக்களிடமிருந்து பா.ஜ.க அரசு பறித்துக்கொண்ட பணத்தை, அவர்களிடம் திருப்பிக்கொடுங்கள் என்று காங்கிரஸ் வெற்றிபெற்ற பிறகு முதல்வரிடம் நான் சொன்னேன். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவிலும், சத்தீஸ்கரிலும் ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் மக்களுக்குக் கிடைக்கிறது.

ஆனால், மற்ற மாநிலங்களில், 1,200 ரூபாய் முதல் 1,400 ரூபாய் வரை சமையல் எரிவாயு சிலிண்டருக்காக மக்கள் செலவழிக்கிறார்கள். வேளாண் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் உட்பட காங்கிரஸின் வாக்குறுதிகளை கர்நாடகாவில் நிறைவேற்றிவிட்டோம்’ என்று காங்கிரஸ் ஆட்சியின் சமீபத்திய சாதனைகளை ராகுல் காந்தி பட்டியலிட்டார்.

கமல்நாத்

நீண்டகாலமாக பா.ஜ.க ஆட்சி நடத்தியதால், மக்களிடம் அதிருப்தி நிலவுவதாகவும், முந்தைய சட்டமன்றத் தேர்தல் முடிவைப்போலவே, இந்த முறையும் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகத் தேர்தல் முடிவுகள் அமைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருப்பினும், பா.ஜ.க தேர்தலில் வெற்றிபெற்று அங்கு ஆட்சியமைக்கும் என்பதில், அந்தக் கட்சியினர் மிகவும் உறுதியாக இருக்கின்றனர்.

from Tamilnadu News https://ift.tt/EATyGdh