இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Bombay) பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலை குறித்து, மனிதபண்பியல் மற்றும் சமூக அறிவியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஷர்மிஸ்தா சாஹா, நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த சுதன்வ தேஷ்பாண்டே என்பவர், `இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீன சுதந்திரப் போராட்டம்’ குறித்துப் பேசினார். இந்தப் பேச்சை IIT-யில் முனைவர் பட்டம் பயிலும் ஓம்கார் சுபேகர் என்ற மாணவர், தனது கைபேசியில் பதிவுசெய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

IIT Bombay

அதைத் தொடர்ந்து, தீவிரவாதத்தை உயர்த்திப் பேசுவதாக, வலதுசாரி மாணவர்கள் IIT வளாகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். சிறப்பு விருந்தினர் சுதன்வ தேஷ்பாண்டே, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பேராசிரியர் ஷர்மிஸ்தா சாஹா ஆகியோரைக் கைதுசெய்ய வேண்டும் என, அவர்களின் பெயர்களை முழங்கியும், புகைப்படம் மற்றும் பதாகைகளை ஏந்தியவாரும் கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில், இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Bombay) அரசியல் சார்புடைய பேச்சுகள், ஒரு கொள்கை சார்ந்த நபர்களை அழைத்து நடத்தப்பெறும் கருத்தரங்குகள் தொடர்பாகவும், அவற்றில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொள்வது தொடர்பாகவும் புதிய கட்டுப்பாடுகளையும், விதிகளையும் வகுத்திருக்கிறது.

இது தொடர்பாக இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில், `பாடங்கள் சார்ந்தும், ஆய்வுகள் சார்ந்தும் மாணவர்களின் வெளிப்படைத்தன்மையான மற்றும் சுதந்திரமான அணுகுமுறைகளை இந்த நிறுவனம் ஆதரிக்கும். அதே நேரம், அது பெரும்பாலும் அரசியலற்றதாக இருப்பது அவசியம். எனவே மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சமூக-அரசியல் சர்ச்சைகளை உருவாக்கக்கூடிய கருத்தரங்குகள், செயல்பாடுகள், நிகழ்வுகளை நடத்தக் கூடாதென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வலதுசாரி மாணவர்கள் போராட்டம்

மேலும், அது போன்ற நிகழ்வுகள் பெரும் அவப்பெயரையும் ஏற்படுத்திவிடுகின்றன. எனவே, நிகழ்கால அரசியல் சார்ந்த கலந்துரையாடல்களுக்கு, இந்த நிறுவனத்தின் வெளியிலிருந்து பேச்சாளர்களை அழைப்பதற்கு மறு ஆய்வுக்குழுவின் அனுமதியைப் பெற வேண்டும். அதேபோல நிறுவன வளாகத்தில் கூட்டங்கள், போராட்டங்கள், காணொளி பதிவு நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு, காவல்துறையின் அனுமதி மற்றும் வழிகாட்டுதல்கள் அவசியம்’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் ஏற்கெனவே நடைமுறையில் இருந்தவையே. ஆனால், அவை ஆவணங்களாக, முழுமையாகத் தொகுக்கப்படவில்லை.

“மாணவர்கள் நலன் சார்ந்த குழுக்கள், ஆரம்பம் முதலே இயங்கி வருகின்றன. ஆனால், ஆசிரியர்களுக்கான ஒழுங்காற்றுக் குழு என ஏதும் அமைக்கப்படவில்லை. எனவே, இந்தச் சம்பவத்துக்குப் பிறகே பேராசிரியர்கள், மாணவர்களுக்கென புதிய விதிகளை உருவாக்கி, நிர்வாகம் அவற்றை விரைவில் நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். இனி வரும் காலங்களில் சிறந்த வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்” என இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் மூத்த பேராசிரியர் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து இந்திய தொழில்நுட்பக் கழகம் சார்பில் விசாரணை நடத்த, உண்மை கண்டறியும் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருக்கிறது.

“இதன்மூலம் இத்தகையச் சம்பவங்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டு நிறுவனத்துக்குப் பெரும் கலங்கத்தையும், அவப்பெயரையும் ஏற்படுத்தும் மாணவர்கள்மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று IIT பாம்பேவின் இயக்குநர் சுபாசிஸ் சௌத்ரி தெரிவித்திருக்கிறார்.

அதே நேரம், மாணவர்களின் கல்வி சார்ந்த, அரசியல் சார்பற்ற இன்னபிற செயல்பாடுகளான தொழில்நுட்பம், கலை, இலக்கியம், அறிவியல் சார்ந்த நிகழ்வுகளுக்கு ஒப்புதல் தேவையில்லை என்றும் விலக்கு அளித்து இந்திய தொழில்நுட்பக் கழகம் அறிவித்திருக்கிறது.

from Tamilnadu News https://ift.tt/8sezN6P