முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி சத்தீஸ்கரில் நடக்கிறது. இவர் தலைமையிலான சட்டசபையின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி தேர்தல் தேதியை வெளியிட்டது, தலைமை தேர்தல் ஆணையம். அதன்படி முதற்கட்ட தேர்தல் கடத்த 7-ம் தேதி நிறைவடைந்துவிட்டது. இரண்டாம் கட்ட தேர்தல் 17-ம் தேதி நடைபெறுகிறது. இங்கு வெற்றிக்கனியை ருசிப்பதில் காங்கிரஸ், பா.ஜ.க இடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதில் காங்கிரஸும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் பா.ஜ.க-வும் முனைப்பு காட்டிவருகின்றன.

2018-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது மொத்தமிருக்கும் 90 தொகுதிகளில் 68-ஐ கைப்பற்றியது காங்கிரஸ். சொற்பமான தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க-வுக்கு வெற்றி கிடைத்ததால், அந்தக் கட்சி தோல்வியைச் சந்தித்தது. இதற்கு, முந்தைய தேர்தலின்போது அந்தக் கட்சி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகத் தெரிவித்திருந்தது. அதை நிறைவேற்றாததுடன், அவுட் சோர்ஸிங் மூலமாக ஏராளமான பணியிடங்களை நிரப்பியது. மேலும், மாநிலத்தில் இருக்கும் தனியார்துறை வேலைவாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதிலிருந்தும் தவறிவிட்டது. எனவேதான் காங்கிரஸ் எளிதாக ஆட்சியைக் கைப்பற்றியது எனக் கூறப்பட்டது.
காங்கிரஸைப் பொறுத்தவரை தான் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருக்கிறது. குறிப்பாக அவுட் சோர்ஸிங் மூலம் பணியாளர்களைத் தேர்வுசெய்தது, ரூ.2,500-க்கு ஒரு குவின்டால் நெல் கொள்முதல் செய்தல் போன்றவை முக்கியமானதாகும். இருப்பினும், பெரும்பாலான இடங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. புதிதாகப் பணியாளர்களைத் தேர்வுசெய்ததில் லஞ்சம் அதிகரித்ததாக பா.ஜ.க குற்றம்சாட்டுகிறது. இருப்பினும், ஆட்சியை காங்கிரஸ் தக்கவைத்துக்கொள்ளும் என்கிறார்கள், அரசியல் நோக்கர்கள். இதற்கிடையில் சமீபத்தில் பிரசாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் பயங்கரவாதிகள் மற்றும் நக்சல் தீவிரவாதிகளின் துணிச்சல் அதிகரிக்கிறது.
அவர்களால் ஏற்படும் வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது. மனிதர்களைக் கடத்திப் பணம் பறிப்பது, போதைப்பொருள் வியாபாரம் ஆகியவை அதிகரித்திருக்கின்றன. மகாதேவர் பெயரிலும் காங்கிரஸ் ஊழல் செய்கிறது. மகாதேவ் சூதாட்ட செயலி ஊழலின் மொத்த மதிப்பு ரூ.508 கோடி. இந்த விவகாரத்தில் முதல்வர் பூபேஷ் பாகலின் நெருக்கமான ஒருவர் தற்போது சிறையில் இருக்கிறார். இந்த ஊழலில் முதல்வர் பூபேஷ் பாகல் பெற்ற பணம் குறித்து காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும்” எனக் கொதித்திருந்தார்.
பதிலுக்கு “சத்தீஸ்கருக்கு வந்த பிரதமர் மோடி என்மீது தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருக்கிறார். நான் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவன். ஆனால், பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது மேற்கொண்ட சட்டத் திருத்தத்தின் மூலம் ஓபிசி வகுப்பில் சேர்ந்தார். சாதிவாரி கணக்கெடுப்பை நீங்கள் ஏன் நடத்தவில்லை… எதற்காக அஞ்சுகிறீர்கள்… மிகப்பெரிய பொய்யர் குறித்து நீங்கள் தேடினால், பிரதமர் மோடியின் முகம்தான் வரும்” என வெடித்திருக்கிறார், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல். சத்தீஸ்கரில் மோடியின் நக்சல் குறித்த பேச்சு, தேர்தல் நேரத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறையின் ரெய்டு, முதல்வர் மீதே 508 கோடி ரூபாய் லஞ்சக் குற்றச்சாட்டு என தேர்தல் களம் சூடாகவே இருக்கிறது. எனினும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகளும் அதையேதான் சொல்கின்றன.
இவ்வாறு இரு கட்சிகளும் தேர்தலில் வெல்ல தீவிரம் காட்டிவரும் நிலையில், எந்தக் கட்சி ஆட்சிக்கட்டிலில் அமரும், மோடியின் ‘நக்சல்’ பேச்சு களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதையெல்லாம் எதிர்வரும் தேர்தல் முடிவுகள் தெரியப்படுத்தும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/HvcUq9x
