90-களின் காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வந்த விஜயசாந்தி, அரசியலிலும் தடம் பதிக்க வேண்டும் என்று 1998-ல் பா.ஜ.க-வில் இணைந்தார். ஆனால், பா.ஜ.க-வில் தனக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, 2009-ல் `தல்லி தெலங்கானா’ என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். ஆனால், கட்சி ஆரம்பித்த சில நாள்களிலேயே பாரத ராஷ்டிர சமிதி (அப்போது தெலங்கானா ராஷ்டிர சமிதி) கட்சியுடன் தனது கட்சியை இணைத்தார் விஜயசாந்தி. கட்சியை இணைத்ததோடு மட்டுமல்லாமல், அந்த ஆண்டே பாரத ராஷ்டிர சமிதி சார்பாக எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

விஜயசாந்தி காங்கிரஸில் இணைந்தார்

அதன்பின்னர், சந்திரசேகர ராவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்து, 2014 தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அதில் தோல்வியடைந்த விஜயசாந்தி, 2020-ல் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார். இப்படியான சூழலில், தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வில் தனக்கு சீட் கிடைக்கும் எதிர்பார்த்துக் காத்திருந்த விஜயசாந்தி, இறுதியில் நேற்று முன்தினம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

காங்கிரஸில் இணைந்த அடுத்த நாளே, தெலங்கானாவுக்கான பிரசாரம் மற்றும் திட்டமிடல் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார் விஜயசாந்தி. இத்தகைய சூழலில்தான், பா.ஜ.க-வும் பாரத ராஷ்டிர சமிதியும் மறைமுக கூட்டணியில் இருக்கின்றன என்று காங்கிரஸ் கூறும் பிரதான குற்றச்சாட்டை முன்வைத்து கேள்வியெழுப்பியிருக்கிறார் விஜயசாந்தி.

விஜயசாந்தி

நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் தனது முன்னாள் கட்சிகளை விமர்சித்த விஜயசாந்தி, “நாட்டிலேயே அதிக ஊழல் செய்த முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை பா.ஜ.க நிறைவேற்றாததால்தான் அந்த கட்சியிலிருந்து விலகினேன். கே.சி.ஆர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் மீதான ஊழல் குறித்த அனைத்து தகவல்களும் மத்திய பா.ஜ.க அரசிடம் இருக்கிறது.

ஆனால், தெலங்கானாவுக்கு வருகை தரும் பா.ஜ.க முக்கிய தலைவர்கள் கே.சி.ஆரை விமர்சிப்பதுபோல் நடித்துவிட்டு, டெல்லி சென்றதும் அதை மறந்துவிடுவார்கள். பாரத ராஷ்டிர சமிதியுடனான ரகசிய ஒப்பந்தம் காரணமாக, கே.சி.ஆர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ விசாரணைகளை பா.ஜ.க அரசு நடத்தவில்லை” என்று சாடினார்.

அமித் ஷா,

விஜயசாந்தியின் இத்தகைய குற்றச்சாட்டுக்கு நேற்றைய தினமே செய்தியாளர்களிடம் பதிலளித்த அமித் ஷா, “தெலங்கானாவில் ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டம் வலுவாக நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் நடைபெறுவதால், விசாரணையை முடிக்காமல் யார் மீதும் நடவடிக்கை எடுப்பதென்பது பா.ஜ.க-வின் கலாசாரம் அல்ல. எங்கள் தலைவர்களை கே.சி.ஆர் துன்புறுத்தியதை நாங்கள் யாருக்கும் எதிராகவும் செய்ய மாட்டோம்” என்று அவர் கூறினார்.

தெலங்கானாவில், நவம்பர் 30-ம் தேதியன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/7Qv2Ay4