கடந்த மாதம் 7-ம் தேதி இஸ்ரேலில் நடைபெற்ற `சூப்பர் நோவா’ இசை நிகழ்ச்சியில் ஹமாஸ் படைகள் திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தின. நிலைமையைச் சமாளித்து பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் படைகளும் உடனடியாக தாக்குதல் நடைபெற்ற பகுதிக்கு விரைந்தன. இரு நாடுகளுக்கு இடையேயான பெரும் போருக்கு வித்திட்டது, ஹமாஸ் நடத்திய அந்த அதிபயங்கரத் தாக்குதல்தான். இந்த நிலையில் அந்த இசை நிகழ்ச்சித் தாக்குதல் சம்பவத்தில், `இஸ்ரேல் படைகள் ஹெலிகாப்டர்களிலிருந்து தாக்குதல் மேற்கொண்டதன் காரணமாகவே, இஸ்ரேலிய மக்கள் பலர் கொல்லப்பட்டனர்’ என பாலஸ்தீனத்தின் தேசிய ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல பாலஸ்தீனத்தின் தேசிய ஆணையத்தில் பேசிய அந்த நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ், “இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, போருக்காகத் தன்னுடைய மக்களையே பலிகொடுத்தவர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், பாலஸ்தீன அதிபரின் இத்தகைய கருத்துக்கு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர், “சூப்பர் நோவா இசை நிகழ்ச்சியின்போது நடந்த திடீர்த் தாக்குதலின் பின்னணியில் ஹமாஸ் இருப்பதை ஆரம்பத்தில் பாலஸ்தீன அதிபர் மறுத்தார். உண்மையில் அந்தப் படுகொலையை இஸ்ரேல் நடத்தியதாகக் குற்றம்சாட்டினார். அதன் பிறகே உண்மை வெளியே வந்தது. அது போன்ற ஒரு கருத்தைத்தான் இப்போது பாலஸ்தீன தேசிய ஆணையம் தெரிவித்திருக்கிறது.
என்னுடைய மக்களை நானே கொல்வேனா… இது அபாண்டமான குற்றச்சாட்டு. பாலஸ்தீன அதிபரின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைநாட்டும் வழி இதுவல்ல. ஹமாஸை அழித்த மறுநாளே, காஸாவில் இருக்கும் யாரும், தங்கள் குழந்தைகளுக்குத் தீவிரவாதத்தைப் பயிற்றுவிக்கக் கூடாது; தீவிரவாதிகளுக்குப் பணம் கொடுக்கக் கூடாது; அவர்களின் வாழ்க்கையின் இறுதி இலக்கு இஸ்ரேல் அரசின் அழிவைப் பார்க்க வேண்டும் எனக் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கக் கூடாது. அப்படி அந்த மக்கள் இருக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அவர்களின் இந்தச் சிந்தனை ஏற்கத்தக்கதல்ல, இது சமாதானமடைவதற்கான வழியுமல்ல” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/KDSUB9h
