நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அத்தோடு அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான நாளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ராமர் கோயில் வேறு, நாடாளுமன்றத் தேர்தல் வேறு என்று இரண்டையும் பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு, கடந்த 30 ஆண்டுகால தேசிய அளவில் இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை.

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவோம் என்பது பா.ஜ.க-வின் கடந்த 30 ஆண்டுகால முக்கிய முழக்கங்களில் ஒன்று. நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தனது 2-வது ஆட்சிக்காலத்தில் அதனைச் செய்தும் விட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஒருவரிடம் பேசும்போது, “ராமர் கோயில் திறப்பு நாளுக்காக அளவில்லாத மகிழ்ச்சியோடு காத்திருக்கிறோம். நாடு முழுவதும் ராமர் கோயில் திறப்புக்கான 4 கட்ட பிரசார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் 19-ஆம் தேதி தொடங்கிய இப்பிரசாரம் டிசம்பர் 20-ஆம் தேதி முடியவடைய உள்ளது. ஜனவரி 1-ம் தேதி இரண்டாம் கட்ட பிரச்சாரம் நடைபெறவுள்ளது. ராமர் படங்கள், துண்டுப் பிரசுரங்களை 10 கோடி குடும்பங்களுக்கு கொண்டு சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 22-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் 3-வது கட்ட பிரசாரத்தில் அனைத்து மக்களையும் ஈடுபடுத்த முடிவெடுத்துள்ளோம்.

ஒட்டுமொத்த இந்துக்களும் அயோத்தியில் கூடுவது சாத்தியமில்லை என்பதால், நாடு முழுக்க கொண்டாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்துக்கள் எல்லோரும் அவரவர் வீடுகளில் வழிபாடுகளை நடத்தச் சொல்லி பிரசாரத்தில் வலியுறுத்துவோம். அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் வழிபடுவார்கள். ஜனவரி 26 முதல் பிப்ரவரி 22 வரை நடைபெறும் 4-வது கட்ட பிரசாரத்தில், பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சென்று வழிபடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்” என்றார்.
குடமுழுக்கு விழாவில் அதிக அளவிலான எண்ணிக்கையில் மக்கள் பங்கெடுக்கும் விதமாக நாடு முழுவதும் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கரசேவர்களும் இக்குழுக்களில் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்களை அழைத்து வருவது தொடர்பாக நாடு முழுவதும் 250 இடங்களில் கூட்டங்கள் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி இப்போதே மின்னொளியில் ஜொலிக்கத் தொடங்கிவிட்டது. கோயில் ஏற்பாடுகள் மட்டுமின்றி பல நூறு கோடி ரூபாய்களில் அயோத்தி முழுவதும் கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. ரயில் நிலையத்தை மேம்படுத்துதல், விமான நிலையம் என அயோத்தி தலைகீழ் மாற்றத்தை காணவிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர், ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறுவதால், பா.ஜ.க-வின் பிரச்சார உத்திகளில் ராமர் கோயிலுக்கு அதீத முக்கியத்துவம் தரப்படும் என்றே தெரிகிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலேயே பா.ஜ.க-வினர் ராமர் கோயில் குறித்து அதிக அளவில் பேசியிருக்கின்றனர். பா.ஜ.க வெற்றி பெறும் மாநிலங்களில் இருந்து மக்கள் அயோத்திக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அமித் ஷா-வே பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். ராமர் கோயில் கட்டப்பட்டது ராமராஜ்ஜியம் அமைக்கப்படுவதற்கான அறிகுறி என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியிருக்கிறார். 60 ஆண்டுகளாக காங்கிரஸால் முடியாததை, 10 ஆண்டுகளில் பா.ஜ.க செய்திருக்கிறது என்று பா.ஜ.க-வினர் மேடைக்கு மேடை முழங்குகின்றனர்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமர் கோயில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து அரசியல் பார்வையாளர் ஜெகதீஸ்வரனிடம் கேட்டோம். “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வலுவான முகம் இல்லமால் இருந்தது. ஆனால் இப்போது இந்தியா கூட்டணி வலுவான முகமாக உருவாகியிருக்கிறது. அதனால் ராமர் கோயில் கட்டப்பட்டது பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும், அவர்கள் வேகமாக செயல்பட உந்துதலாக அமையும். பெட்ரோல் லிட்டர் 500 ரூபாய்க்கு விற்றால் கூட அவர்கள் பாஜகவுக்கு மட்டும்தான் வாக்களிப்பார்கள். ஆனால் சாதாரண மக்களிடம் பழைய மனநிலையே இருக்காது. மத பெருமிதங்களை தாண்டிய பல வாழ்வியல் பிரச்னைகளுக்குத்தான் மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சிக்காலம் மக்களுக்கு பல்வேறு படிப்பினைகளை கொடுத்திருக்கும். காஸ் விலை, பெட்ரோல் விலை, மின்சார வசதி என எல்லாவற்றையும் மக்கள் கவனிக்கிறார்கள். பெண்கள் சார்ந்த நலத்திட்டங்களை கட்சிகளும் பேசுகின்றன. அவற்றுக்குத்தான் மக்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். கர்நாடகாவில் நாம் அதைத்தான் பார்த்தோம். பஜ்ரங் பலி என்றார்கள், திப்பு சுல்தானுக்கு எதிராகப் பேசினார்கள், ஹிஜாப் சர்ச்சையை கிளப்பினார்கள். ஆனால் எதுவுமே எடுபடவில்லை. அதேபோல மத்தியப் பிரதேசத்தில் கடந்தமுறை காங்கிரஸ்தான் வெற்றி பெற்றது. அப்போதும் ராமர் கோயில் குறித்த விவாதங்கள் இருந்தன. இம்முறையும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் என்ன நிலைமை என்பதை சட்டமன்றத் தேர்தல் காட்டிவிடும். ராமர் கோயில் பாஜக வேண்டுமானால் பேசலாம். ஆனால் வாக்கு அறுவடை செய்துவிடலாம் என்று பாஜக கணக்குப்போட்டால் அது இம்முறை நடக்காது.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/Q4GcZw8
