நடிகர் மன்சூர் அலிகான், தான் நடித்து வெளியாகத் தயார் நிலையில் இருக்கும் சரக்கு திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், லியோ படத்தில் நடித்தது குறித்துப் பேசினார். அப்போது த்ரிஷாவுடன் நடித்தது குறித்து மிகவும் சர்ச்சையான முறையில் பேசியிருந்தார். இதையடுத்து நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் அவரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து, நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவாலுக்கு, தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தான் பேசியதற்கு விளக்கமளிக்கும்விதமாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் மன்சூர் அலிகான். அப்போது அவர், “தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தப்பட்டால், இட ஒதுக்கீடு குறித்து நாம் யாரிடமும் கையேந்தி நிற்க வேண்டாம். நமது பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்றுதான் அன்று பேசினேன். அதற்கு மத்தியில்தான் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஒரு நடிகனாகப் பதிலளித்தேன். சினிமாவில் கொலைசெய்யப்படுவது என்றால் உண்மையில் கொலைசெய்வதா… பாலியல் வன்கொடுமை செய்வது என்றால் அது உண்மையா… எல்லாம் நடிப்புக்காகத்தான்.
அது போன்ற காட்சிகளில் எனது கைக்கூட நடிகைகள்மீது தவறாகப் பட்டுவிடக் கூடாது என நினைப்பவன் நான். தெரியாமல் கை பட்டுவிட்டால் அதற்காக மன்னிப்புக் கேட்பவன். என்னைப் பற்றி தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும். மோடி, `ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவேன்’ என வாக்களித்து, அதை நிறைவேற்றவில்லை. அதனால், யூடியூப் சேனல் வைத்திருப்பவர்கள் என்னை வைத்துச் சம்பாதிக்க நினைத்தார்கள். அதைத் தவறென்று கூறமாட்டேன். அவர்கள் நன்றாக இருக்கட்டும்.

ஆனால் நடிகை குஷ்பு, `மகளிர் ஆணையத்திலிருந்து நடவடிக்கை எடுப்பேன்’ எனத் தெரிவித்திருக்கிறார். நானாவது நடிப்பு சார்ந்து பேசும்போது, கதாபாத்திரமாகத்தான் பேசினேன். ஆனால், எஸ்.வி.சேகர் `பெண்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் வேலையே செய்கிறார்கள்’ எனப் பேசினாரே… அவர்மீது நடவடிக்கை எடுத்த பிறகு என்னிடம் வாருங்கள். பாலியல் வன்கொடுமை, நீட்டுக்காக அனிதா மரணம் எனத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்த்தப்படும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு, நான் சாதாரணமாகப் பேசியதற்கு நடவடிக்கை எனக் கூறுகிறார் குஷ்பு.
நடிகர் சங்கம், நான் ஊடகங்கள் முன்பு மன்னிப்புக் கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. நான் என்ன பேசினேன்… இப்படிப் பேசுவதன் நோக்கம் என்ன என்பதை என் தரப்பிடமும் கேட்க வேண்டுமல்லவா… அப்படிக் கேட்காமல் நேரடியாக மன்னிப்புக் கேட்கக் கூறுவது இமாலயத் தவறு. நான் தவறாகப் பேசவில்லை. அதனால் மன்னிப்புக் கேட்கமுடியாது. இன்னும் 4 மணி நேரத்தில் எனக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற்றுவிட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புங்கள். அதற்கு மிகச் சரியான முறையில் வந்து விளக்கமளிக்கிறேன். இப்படி பூச்சாண்டி காண்பிக்க வேண்டாம். முறைப்படி கேட்டால் எல்லாம் முறைப்படி நடக்கும்.

தற்போது ஐந்து மாநிலத் தேர்தலில், காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியது என்ன… ஆனால் மத்திய பா.ஜ.க அரசு செய்த பிரசாரம் என்ன… இதெல்லாம் நமக்கு நன்றாகத் தெரியும். அதுபோலத்தான் எனது வீடியோவும் தவறாகக் காண்பிக்கப்பட்டது. அந்த கட் செய்யப்பட்ட வீடியோவை நான் பார்த்தபோது, எனக்கே கேவலமாகத்தான் இருந்தது. ஆனால், அதற்கு முன்னாலும், பின்னாலும் நான் என்ன பேசினேன் என்பதை யாரும் பார்க்கவில்லை. கட் செய்யப்பட்ட வீடியோவைப் பார்த்துத்தான் நடிகை த்ரிஷாவும் கோபப்பட்டிருக்கிறார். அவரின் கோபத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
இவ்வளவு நாள் காங்கிரஸை விமர்சித்த நான் இப்போது ஆதரிக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் தற்போது இருக்கும் தலைவர்கள். அவர்கள் அனைவரும் புதிய ரத்தம். அவர்களின் ஆட்சியைப் பார்த்ததில்லை. அதனால் ஆதரிக்கிறேன். பிரதமர் மோடி இந்தியாவை அதானியின் நாடாக மாற்றி வருகிறார். குஜராத்தில் அதானி துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்புள்ள கொகைன் பிடிபட்டது. அது தொடர்பாக யாராவது கைதுசெய்யப்பட்டார்களா… அது என்ன ஆனது என்றே தெரியவில்லை.

விமான நிலையம் தற்போது அதானி கைகளில் இருக்கிறது. அவர்கள் நினைத்தால் எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் கடத்தி வரலாம். இன்னும் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் நாட்டின் பொருளாதாரம் நாசமாகும். எட்டுவழிச் சாலைக்காக, பிரதமர் மோடியை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்காகக் கைதுசெய்யப்பட்டேன். இப்போது என்னை விமர்சிப்பவர்கள் யாராவது அப்போது எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்களா… பயில்வான் ரங்கநாதனைக்கூட நான் கண்டித்திருக்கிறேன்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/Wai7mrK
