தங்கநகை சேமிப்புத் திட்டம் என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்து சுமார் 100 கோடி ரூபாயை ஏப்பம்விட்டதாக, பிரணவ் ஜுவல்லர்ஸ் நகைக்கடை மீது தமிழக பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவாகியிருப்பது தெரிந்த செய்தி. இப்போது அந்தக் கடையில் அமலாக்கத்துறையும் தன் பங்குக்கு ரெய்டு நடத்தியிருக்கிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் மட்டும் அதற்குக் காரணமில்லையாம்… இந்த கடையின் மோசடித் திட்டத்துக்கு விளம்பரத் தூதராக பணியாற்றிய ‘செல்லமான’ நடிகரை வளைப்பதும் அமலாக்கத்துறையின் திட்டமாம். 2020-ம் ஆண்டு வாக்கில் அவர் விளம்பர தூதராக நியமிக்கப்பட்ட பிறகுதான் அதிகப்படியான முதலீடுகள் குவிந்திருக்கின்றன என்று சொல்லி அவரையும் விசாரிக்கவுள்ளோம் என்கிறார்கள் அமலாக்கத்துறையினர். கர்நாடகாவில் பா.ஜ.க-வுக்கு எதிராக அதிகம் பேசும் அவர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், மெளனமாக்கப்படுவார் என்று கண் சிமிட்டுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.
சேலத்தில் நடக்கும் இளைஞரணி மாநாட்டின் ஒரு பகுதியாகத் தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகனப் பிரசாரப் பேரணியைத் தொடங்கியிருக்கிறது தி.மு.க. ‘மூன்று நாட்கள்… 234 சட்டமன்ற தொகுதிகள்… 8,647 கி.மீ பயணம்’ என்ற இலக்கோடு நடக்கும் இந்த பேரணியில் பங்கேற்கும் இளைஞர்கள் ‘கமான் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு…’ என உற்சாகமாகத்தான் இருக்கிறார்களாம். ஆனால், மாவட்ட செயலாளர்கள்தான் தூக்கம் கெட்டுத் திரிகிறார்களாம்.

பேரணிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கவில்லை என்று அதற்குள்ளாகவே சில மாவட்டச் செயலாளர்கள் மீது புகார்களும் வரத்தொடங்கிவிட்டன. என்ன பிரச்னையென்று விசாரித்தால், “பேரணியில் எத்தனை பேர் வருகிறார்கள்… மாவட்ட எல்லையை எப்போது அடைகிறார்கள் என்று முறையாக தகவல் தெரிவிப்பதில்லை. வருவோருக்குத் தங்குமிடம், உணவு, புல்லட்டுக்கு பெட்ரோல் என பெரும்தொகையை வசூல்செய்கிறார்கள். ஏற்கெனவே, வரவைவிட செலவுதான் அதிகமிருக்கிறது. பிறகெப்படி உற்சாக வரவேற்பு கொடுக்க முடியும்?” எனக் கொதிக்கிறார்கள் மா.செ-க்கள்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் அவர்கள் துரிதமாக விடுவிக்கப்படுவதில்லை என்பதும் கசப்பான உண்மை. இதை தடாலடியாக மாற்றியிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். லோன் மேளாவுக்காக சமீபத்தில் ராமேஸ்வரம் வந்த நிர்மலா சீதாராமனை, மீனவர்கள் சந்தித்து கோரிக்கை வைக்க, கையோடு வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு போன் போட்டார் அவர்.

உடனே 22 மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு மறுநாளே ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார்கள். மேஜிக் போல நடந்த இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்திவிட்டது. “இதென்ன பிரமாதம்… இன்னும் நிறைய ஐட்டம் இருக்குது… நம்ம கட்சிக்கு ஆதரவு கொடுங்கள்!” என்று மீனவர்கள் மத்தியில் பா.ஜ.க-வினர் பிரசாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதன்பிறகுதான், “ஓ… எல்லாமே தேர்தலுக்காகத்தானா?” என்று புரிந்துகொண்டார்களாம் மீனவர்கள்.
தேர்தல் திருவிழாவுக்கு தயார்படுத்தும் விதமாக, ‘ஜில்’ மாவட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அழைத்து, மட்டன் பிரியாணி விருந்துடன் கூட்டம் ஒன்றை அண்மையில் நடத்தியிருக்கிறார் மன்னர் பிரமுகர். தன்மீதான அதிருப்தியை எல்லாம் இந்த ஒரே கூட்டத்தில் போக்கி, மன்னரிடமும் நல்ல பெயர் வாங்கிவிட வேண்டுமென நினைத்த மா.செ., முன்கூட்டியே விழா நடக்கும் இடத்துக்குப் போயிருக்கிறார். கூட்டத்தில், ‘என்ன பேச வேண்டும். எப்படிப் பேசக்கூடாது’ என்றெல்லாம் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு வகுப்பும் எடுத்திருக்கிறார். “சரி… சரி…” எனத் தலையை ஆட்டியவர்கள், மன்னர் பிரமுகர் வந்ததும் மாவட்ட நிர்வாகிகள் மீதான தங்கள் அதிருப்தி, மற்ற கட்சிகளை நோக்கி படையெடுக்கும் உடன்பிறப்புகள் என மொத்த வருத்தத்தையும் கொட்டித்தீர்த்துவிட்டார்களாம்.
கூடவே, “இப்படியே போனால், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி எட்டாக் கனியாகிவிடும்” என்ற குண்டையும் தூக்கிப் போட்டிருக்கிறார்கள். அதிர்ச்சியடைந்த மன்னர் பிரமுகர் மா.செ-வைப் பார்த்து முறைக்க, இதைச் சற்றும் எதிர்பாராத மா.செ., “யப்பா சாமிகளா நீங்கள் பேசியதுவரை போதும்…” என மைக்கைப் பிடுங்கி ஒவ்வொருவரையும் உட்கார வைக்க படாதபாடுபட்டுவிட்டார் என்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்.
மலர்க் கட்சியில் மாநிலத் தலைவரின் புகழ்பாடுவதையே முழுநேர வேலையாக வைத்திருந்த, அவருக்கு நெருக்கமான நிர்வாகிகள் சிலர் வழக்குகளில் சிக்கி சிறைக்குச் சென்று திரும்பிய பிறகு சைலண்ட் மோடுக்குச் சென்றுவிட்டார்களாம். இதனால் சோஷியல் மீடியாவில் தனக்கான ‘பில்டப்’புகள் குறைந்துவிட்டதாக சோகத்தில் இருந்த தலைவர், வேளச்சேரி, அடையாறு ஆகிய இடங்களைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக இரண்டு ஐ.டி-விங்குகளை உருவாக்கியிருக்கிறாராம். இவர்களின் முழு நேர வேலையே சோசியல் மீடியாவில் மலர்த் தலைவரை ‘பொன்மனச் செம்மல்’ என எழுதுவதும், எம்.ஜி.ஆர் பாடல்களின் பின்னணியோடு அவரது காணொளிகளைப் பரப்புவதும்தானாம். “ஏற்கெனவே தமிழ்நாடு பச்சை, மஞ்சள், சிவப்பு, கருப்பு எம்.ஜி.ஆர் வரைக்கும் பார்த்துவிட்டது. இப்போது காவி எம்.ஜி.ஆர் வேறா… இது எங்கே போய் முடியுமோ” எனப் புலம்புகிறார்கள் கட்சியின் சீனியர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/G0skflm
