காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான என்கவுன்ட்டர் மோதலில் உயிரிழந்த மகனுக்காக கதறி அழுத ராணுவ அதிகாரியின் தாயை, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சரும், எம்.எல்.ஏ-வும் கேமரா முன்பு போட்டோவுக்கு போஸ் கொடுக்க கட்டாயப்படுத்திய சம்பவம், கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.

முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே புதன், வியாழன் என இரண்டு நாள்களாக துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேசம் – பாஜக அமைச்சர்

அதில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ கேப்டன் ஷுபம் குப்தாவும் ஒருவர். இதனையறிந்து, ஷுபம் குப்தாவுக்கு இரங்கல் தெரிவித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ரூ.50 லட்சம் இழப்பீடு தருவதாகவும், ஷுபம் குப்தாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்பதாகவும் அறிவித்தார். இந்த நிலையில், ஆக்ராவிலிருக்கும் ஷுபம் குப்தா வீட்டுக்கு நேற்று சென்ற உத்தரப்பிரதேசத்தின் பா.ஜ.க அமைச்சரும், எம்.எல்.ஏ-வும், கதறி அழுதுகொண்டிருந்த ஷுபம் குப்தாவின் தாயை கேமரா முன்பு போட்டோவுக்கு போஸ் கொடுக்க கட்டாயப்படுத்தியிருக்கின்றனர்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், அமைச்சர் யோகேந்திர உபாத்யாய், எம்.எல்.ஏ தர்மேஷ் ஆகியோர் ஷுபம் குப்தாவின் தாயாரிடம், காசோலைகளைக் கொடுக்க முயல்கின்றனர். கதறி அழும் தாயார், காசோலையை வாங்க மறுத்தபோதும் போட்டோவுக்கு போஸ் கொடுக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அப்போதும்கூட, `இதெல்லாம் எனக்கு வேண்டாம், விளம்பரப்படுத்தாதீர். என்னுடைய மகன்தான் எனக்கு வேண்டும். அவரைத் திருப்பிக்கொடுங்கள்’ என அந்தத் தாயார் கதறுகிறார்.

https://platform.twitter.com/widgets.js

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில், பலராலும் வேகமாகப் பகிரப்பட்டு வர, இணையதளவாசிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் எனப் பலரும் பா.ஜ.க-வைச் சாடிவருகின்றனர். அந்த வரிசையில், உத்தவ் தாக்கரே கட்சியின் எம்.பி பிரிங்கா சதுர்வேதி, “இரக்கமற்ற செயல். தாயார் அழும் வேளையிலும், போட்டோ எடுப்பதில் குறியாக இருக்கிறார் அமைச்சர். தியாகியின் குடும்பம் நிம்மதியாக துக்கப்படுவதற்குக்கூட விடுவதில்லை” என பா.ஜ.க-வைச் சாடினார்.

from Tamilnadu News https://ift.tt/uBVCOPm