பா.ஜ.க அல்லாத மாநிலங்களில், `சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிக்க மறுக்கின்றனர், பரிசீலனை என்ற பெயரில் மசோதாக்களை காலவரையின்றி கிடப்பில் போடுகின்றனர்’ என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றன. இது போன்ற விவகாரத்தில், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோருக்கு எதிராக அந்தந்த மாநில அரசுகள் தொடுத்த வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதில், கடந்த மூன்று வாரங்களாக பஞ்சாப் அரசின் மனுமீது நடைபெற்ற விசாரணையில், “தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை ஆளுநர்கள் மறக்கக் கூடாது, நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்” என்றெல்லாம் ஆளுநரைக் கண்டித்தது உச்ச நீதிமன்றம். இந்த நிலையில், பஞ்சாப் அரசின் மனுமீது இன்று நடைபெற்ற விசாரணையில், “மாநிலத்தின் ஆளுநராக அரசியலமைப்பில் சில அதிகாரங்கள் இருந்தாலும், அவற்றைக் கொண்டு சட்டமன்றத்தின் அதிகாரத்தை முறியடிக்க முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கே உண்மையான அதிகாரம் இருக்கிறது” என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்த தீர்ப்பில், “பிரிவு 200-ன்கீழ் மசோதாவை ஆளுநர் நிறுத்திவைக்க முடிவுசெய்தால், அதை மறுபரிசீலனைக்காக மாநிலச் சட்டமன்றத்துக்கு அனுப்புவதற்கான முதல் விதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் வழிமுறையைப் பின்பற்றுவதே தர்க்கரீதியான நடவடிக்கை. இன்னும் தெளிவாகச் சொன்னால், பிரிவு 200-ன்கீழ் மசோதாவை நிறுத்திவைப்பதற்கான அதிகாரம் இருப்பதுடன், முதல் விதியின்கீழ் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாவிட்டால், மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்படாத தலைவர் ஆளுநர் என்ற முறையில் மசோதாவை வெறுமனே நிறுத்திவைப்பது, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் செயல்பாட்டை ஆளுநர் வீட்டோ (Veto) செய்வதாக அமையும். அத்தகைய நடவடிக்கையானது, நாடாளுமன்ற ஆட்சிமுறையின் அடிப்படையில் அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது.
எனவே, மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்படாத தலைவராக ஆளுநருக்கு, அரசியலமைப்பில் சில அதிகாரங்கள் இருந்தாலும்கூட, அவற்றின் மூலம் சட்டமியற்றும் சட்டமன்றத்தின் அதிகாரத்தை முறியடிக்க முடியாது. ஜனநாயக ஆட்சியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே உண்மையான அதிகாரம் இருக்கிறது.

மத்தியில், மாநிலங்களில் இருக்கும் அரசுகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றன. அத்தகைய அரசுகளின் அமைச்சரவையில் இருக்கும் உறுப்பினர்களே, சட்டமியற்றும் அவையின் பொறுப்புக்கூறல் மற்றும் ஆய்வுக்கு உட்பட்டவர்கள். ஆளுநர் என்பவர், குடியரசுத் தலைவரால் மாநிலத்துக்கு நியமிக்கப்பட்ட பெயரளவிலான தலைவர்தான்” என்று உச்ச நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தெளிவாகக் கூறியிருக்கிறது.
from Tamilnadu News https://ift.tt/0SwBanX
