நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், அவர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. அதேபோல, மகளிர் ஆணையம், நடிகர் சங்கம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகன் உள்ளிட்ட திரையுலகினரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில், திரிஷாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்க வந்த, நடிகையும் பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்பு அதற்காக பயன்படுத்திய ’சேரி மொழி’ என்ற வார்த்தையால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானர்.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில், அதற்கு விளக்கமளித்துப் பேசிய குஷ்பு, “நான் பயன்படுத்திய சேரி என்ற பிரெஞ்ச் மொழி வார்த்தையை கேலியாகதான் பயன்படுத்தினேன். அதை உங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லையென்றால் நான் என்ன செய்ய முடியும்… மேலும், அந்த பதிவில் தி.மு.க-வை தானே விமர்சித்தேன். அதற்கு எதற்கு காங்கிரஸ் எதிர்ப்புக்குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. தி.மு.க-வுக்காக காங்கிரஸ் வேலை செய்கிறதா? நான் சேரி என்ற நீங்கள் குறிப்பிடும் அர்த்தத்தில் பேசாத போது, ஏன் அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்?
சேரி என்ற வார்த்தை அரசின் பதிவேடுகளிலேயே இருக்கிறது. வேளச்சேரி, செம்மஞ்சேரி பெயர்களுக்கு என்ன அர்த்தம்? சேரி பகுதி மக்களை வைத்து அரசியல் செய்வது யார் என்பது தெரியாதா? மக்கள் அனைவரும் சமம்தான். சேரியில் இருப்பவர்கள் நமக்கு சமமாக வரக்கூடாதா என்ன… எனவே நான் அந்த அர்த்தத்தில் எழுதவில்லை. மேலும், நான் எப்போதும் தகாத வார்த்தையில் பேசுபவளல்ல. எனக்கு தெரிந்த பாஷையில்தான் பேசமுடியும். அதை அப்படிதான் புரிந்துக்கொள்ள வேண்டும். ஆனால், திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்றபோது, அவரை தகாத வார்த்தையில் பேசியவர்கள் காங்கிரஸை சேர்ந்தவர்கள்.

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஏன் பாரத ரத்னா விருது வழங்கவில்லை. விவசாயிகள் 7 பேரை குண்டர் சட்டதில் கைது செய்தபோது எங்கே போனார்கள் காங்கிரஸ் கட்சிகாரர்கள். மணிப்பூரில் ஆளும் அரசாக பா.ஜ.க இருந்தாலும், எப்போது அந்த நிர்வாண வீடியோ ஊடகங்களில் வெளியானதோ அப்போதுதான் எனக்கே தெரிய வந்தது. அந்தக் குற்றவாளிகளை தூக்கில் போடுங்கள் என அப்போதே நான் தெரிவித்தேன். மேலும், அப்போதே தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. மல்யுத்த வீரர்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
ஆனால், என்ன நடவடிக்கை என அனைத்தையும் ஊடகங்களிடம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், தேசிய மகளிர் ஆணையத்தை பொறுத்தவரை, புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுப்போம். த்ரிஷா விவகாரம் கூட யாரோ புகார் அளித்துதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பா.ஜ.க-வைச் சேர்ந்த பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இருக்கிறது என்றால் அது குறித்து அவர்கள் தான் புகார் அளிக்க வேண்டும். எனவே, அந்த விவகாரத்தை அவர்களிடமே கேளுங்கள். காயத்ரி ரகுராமுக்கு பாலியல் சீண்டல் இருந்ததாக எங்களிடம் புகார் அளிக்கவில்லை.

சினிமாவில் இருக்கும் பெண்களுக்கு தொடர் பாலியல் துன்புறுத்தல் இருக்கிறது என்றால் அவர்கள் வந்து புகார் அளிக்க வேண்டும். புகார் அளிக்காமல் எப்படி நடவடிக்கை எடுப்பது?ஆந்திர அமைச்சர் ரோஜா எங்களிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தோம். எனவே, புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுப்போம். கோவையில் ஒரு இஸ்லாமிய சிறுமியை ஆசிரியர்களே மாணவர்களின் ஷூவை துடைக்க வைத்த விவகாரம் குறித்து எனக்குத் தெரியாது.
அது நடந்தபோது நான் ஹைதராபாத்தில் இருந்தேன். நான் எனது பதிவுகள் எதையும் டெலிட் செய்யமாட்டேன். திரிஷா – மன்சூர் அலிகான் விவகாரம் சீரியஸான விஷயமே இல்லை. ஆனால், அதை மன்சூர் அலிகான்தான் பெரிது படுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு வருடத்தில் மட்டும் தலித்கள் மீது 450 தாக்குதல்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள் என தேசிய தலித்கள் ஆணையம் தெரிவித்திருக்கிறது. வி.சி.க, காங்கிரஸ் அதெற்கெல்லாம் என்ன குரல் கொடுத்தது? குடிநீரில் மலம் கலந்த விவகாரம் என்னவானது? இதையெல்லாம் உங்களால் கேள்வி கேட்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/4rlCXeE
