உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க அரசு ஆட்சி செய்து வருகிறது. யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க அரசு, “ஹலால் தர சான்று பெற்ற உணவு பொருட்களை சேமித்து வைக்கவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது. மீறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என உத்தரவிட்டிருக்கிறது.

இதற்கு நாடு முழுவதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், “இந்திய நாட்டின் அடிநாதமான மதச்சார்பின்மையை முற்றாகக் குலைத்து, மதத்தால் நாட்டைத் துண்டாட முற்படும் பாஜக அரசின் சூழ்ச்சிச் செயலே இதுபோன்ற வகுப்புவாத நடவடிக்கைகள். ஹலால் செய்யப்பட்ட இறைச்சி வகைகள் உடலுக்கு எந்த விதத் தீங்குமில்லை என்பதோடு, அது சுகாதாரமானதும்கூட என்பதும் மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஹலால் உணவுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பது அப்பட்டமான மதவெறியையே காட்டுகிறது” எனக் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நவம்பர் 30-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹைதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது,“உங்கள் ஒவ்வொரு வாக்கும் ஒரு எம்.எல்.ஏ அல்லது அரசின் தலைவிதியை மட்டும் தீர்மானிக்காது, தெலுங்கானா மற்றும் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். ஒவ்வொரு கட்சியின் செயல்திறனையும் ஆய்வு செய்த பின்னரே வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் சட்டம் யாருக்கும் மதரீதியிலான இட ஒதுக்கீடுகளை, சிறப்புச் சலுகைகளை வழங்க அனுமதிக்கவில்லை. மத சிறுபான்மையினருக்கான 4 சதவிகித இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, பட்டியல் பழங்குடியினர், பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்த இட ஒதுக்கீட்டை வழங்குவோம். ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்களின் விற்பனைக்குத் தடை விதிக்கும் எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்கவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/gj24NTl
