தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் `என் மண் என் மக்கள்’ என்ற நடைப்பயணத்தை கடந்த ஜூலை மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராமநாதபுரத்தில் தொடங்கிவைத்தார். இந்தப் பயணம், வரும் ஜனவரி மாதத்தோடு சென்னையில் நிறைவடைகிறது. இந்த நடைப்பயணமானது, அனைத்துத் தொகுதிகளையும் இணைக்கும் வகையில் வடிவகைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டிலும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலும் நடைப்பயணத்தை அண்ணாமலை மேற்கொண்டார். மன்னார்குடியின் பட்டுக்கோட்டை பிரிவு சாலையிலிருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்கு முன்பாக நிறைவடைந்தது.

கடைவீதியில் கூடியிருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், “திருவாரூர் தேர் அழகு, மன்னார்குடி மதிலழகு என்று சொல்லும் பெருமை வாய்ந்த மண். எனக்கு மிகவும் பிடித்தமான இன்னொருவர் பிறந்த மண் இது. விவசாயிகள் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா ரங்கநாதன் அவருடைய மண் இது. 1983-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில், `காவிரிப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும். அதற்கு ஓர் ஆணையம் அமைக்க வேண்டும்’ என்று முதன்முதலாக வழக்கு தொடர்ந்தவர் என்ற பெருமைமிக்கவர் வாழ்ந்த மண்.
ஆனால் இப்ப இருக்கக்கூடிய ஆட்சியாளர்கள் மன்னார்குடிக்கு அந்த பெருமையையும் புகழையும் கொடுக்கிறார்களா, இல்லையா என்பதுதான் என்னுடைய கேள்வியாக இருக்கிறது. மகாகவி பாரதியார்கூட `பாருக்குள்ளே நல்ல நாடு’ என்று பாடலை இந்த மன்னார்குடி மண்ணில் அமர்ந்துதான் எழுதினார். அதை இன்றைய முதல்வர் ஸ்டாலின் தவறாகப் புரிந்துகொண்டு `பாருக்குள்ளே தமிழ்நாடு’ என்று தமிழகத்தில் எந்தப் பகுதியில் திரும்பினாலும் பார்தான். காவிரியில் தண்ணீர் வருகிறதோ, இல்லையோ டாஸ்மாக்கில் தண்ணியைப்போல் சாராயம் போய்க்கொண்டிருக்கிறது . தீபாவளி அன்றும், தீபாவளி முதல் நாளும் மட்டும் டாஸ்மாக்கின் மொத்த வருமானம் 467 கோடி ரூபாய். `திராவிட மாடல் அரசு’ என்றால் என்ன என்று மக்களிடம் கருத்து கேட்டால், அதை `டாஸ்மாக் மாடல் அரசு’ என்றுதான் மாற்றிவைக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

மன்னார்குடியைச் சுற்றி நிறைய குளங்கள் இருக்கின்றன. சுட்டெரிக்கிற சூரியன் வரும்போது குளத்திலுள்ள நீர் ஆவியாகி மேலே செல்லும். இதுவே அந்தக் குளத்தில் தாமரை இருந்தால் நீர் ஆவியாகாமல் தடுக்கும். அதுபோல தமிழகத்தில் தாமரைதான் இந்த ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து தமிழகத்தைக் காத்துக்கொண்டிருக்கிறது. மன்னார்குடியைப் பொறுத்தவரை டி.ஆர்.பாலு மக்களவை உறுப்பினராக இருக்கிறார். அவரின் மகன் டி.ஆர்.பி ராஜா மன்னார்குடியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். ஆக, இருவரும் இணைந்து குடும்ப ஆட்சியை நடத்திவருகிறார்கள்.
இன்றைக்கு தமிழகத்தில் யாரைக் கேட்டாலும் டெல்டாக்காரன் என்று சொல்றது ஒரு ஃபேஷனா மாறிடுச்சு. முதலமைச்சரும் சொல்றாரு, `நான் ஒரு டெல்டாக்காரன்’னு. ஆனா, உண்மையான டெல்டாக்காரன் யாரு… டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு உண்மையா உதவக்கூடியவர்தானே உண்மையான டெல்டாக்காரன்… அப்படி உதவக்கூடியவர் பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே…
உங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்தின், பாராளுமன்ற மொத்த வருகை 48 சதவிகிதம் மட்டுமே… அதுமட்டுமல்லாமல் அவர் இதுவரை எழுப்பிய கேள்விகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம்” என்று சாடினார்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/iA2h7gQ
