சென்னையில் வரும் டிசம்பர் 9 , 10-ம் தேதிகளில் ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக் போட்டிகள் நடக்கிறது என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த போட்டிகள் தீவுத் திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவு போட்டியாக நடத்தப்படுகிறது. தீவுத் திடலில் இருந்து ஃபிளாக் ஸ்டாஃப் ரோடு, அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடல் வரை நடைபெறுகிறது. இதற்கு தமிழக அரசு ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது.

“தமிழக நிதிநிலைமை மோசமாக இருப்பதாக கூறி பல்வேறு நிதி சார்ந்த பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக அரசு, ரூ.40 கோடியில் கார் பந்தயத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன?” என கொதித்திருக்கிறார், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

பாபு முருகவேல்

எனவே என்னதான் பிரச்சனை என அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் பாபு முருகவேலிடம் பேசினோம், “தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை மேம்படுத்த பட வேண்டும். விளையாட்டு வீரர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இதில் தி.மு.க அரசுக்கு கவனம் இல்லை. அவர்கள் விளம்பர விஷயங்களில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்களில் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதை சரிசெய்ய அமைச்சர் உதயநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் விளையாட்டுத்துறை அமைச்சர் விளையாட்டாகவே இருக்கிறார். ஏற்கெனவே கார் பந்தயங்களை நடத்துவதற்கு என ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் பந்தய களம் இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் – உதயநிதி

அதை தவிர்த்துவிட்டு மாநகருக்குள் எதற்காக போட்டி நடத்துகிறார்கள்?. அதற்கான கட்டாயம் என்ன என்றால், அது விளம்பர நோக்கமாகவே இருக்கிறது. சென்னை பல இடங்களில் மெட்ரோ ரயிலுக்கான பணிகள் நடந்துவருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதில், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடுமையாக சிக்கி தவித்து வருகிறார்கள். இதற்கிடையில் இப்போட்டி நடத்துவதற்காக நன்றாக இருக்கும் சாலைகளை உடைத்து, புதிய பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது வாகன ஓட்டிகளுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில் மழை அதிகமாக பெய்து வருகிறது. ஆம்புலன்ஸுகள் கூட செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதனால் தி.மு.க அரசுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் வேண்டுமானால் புகழ் கிடைக்கலாம். மாறாக விளையாட்டு துறை மேம்படாது. இது பொதுமக்களுக்கு தேவையற்றது” என கொதித்தார்.

மேகநாத ரெட்டி

இதையடுத்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டியிடம் விளக்கம் கேட்டோம், “இந்த போட்டிக்கு தமிழக அரசு ரூ.40 கோடி ஒதுக்கியிருக்கிறது. தனியார் நிறுவனம் எவ்வளவு செலவு செய்கிறது என நான் கூற முடியாது. இருங்காட்டுக்கோட்டைக்கு குறைவான மக்களே செல்வார்கள் என்பதால், மாநகரில் போட்டி நடத்துகிறோம். இதை 10,000 பேர் பார்க்க முடியும். ரூ.1,600 முதல் ரூ.7,000 வரை டிக்கெட் விலை இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் எல்லா நேரத்திலும் இருக்காது” என்றார்.

இந்த நிலையில், இந்த பந்தயத்திற்கு தடை விதிக்கவும், பந்தயத்தை இருங்காட்டுகோட்டையில் நடத்த உத்தரவிடவும் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீ ஹரிஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த கார் பந்தயம் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலையில் நடத்துவதால் பெரிய அளவில் அசவுகரியம் ஏற்படும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், பந்தயம் நடைபெறும் சாலைகளில் பன்னோக்கு மருத்துவமனை, ராணுவ தலைமையிடம் ஆகியவை உள்ளன. சுமார் 250 கிலோமீட்டர் வேகத்தில் பந்தய கார்கள் செல்லும்போது 120 டெசிபல் ஒலி மாசு ஏற்படும். இது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பெரிதும் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், `உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், இந்த பந்தயம் ஏற்கனவே நொய்டா, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளதாகவும்’ விளக்கமளித்தார். இதுபோன்ற பந்தயங்களை நடத்துவதால் சர்வதேச அளவிலான வர்த்தகம் நடைபெறும் என்றும் கார்களின் சத்தத்தை கட்டுப்படுத்த ஒலி கட்டுப்பாடு கருவிகள் பொருத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம்

இதைக்கேட்ட நீதிபதிகள், கார் பந்தயம் நடத்துவதற்காக பெறப்பட்ட அனுமதி ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இதனிடையே, ஃபார்முலா 4 பந்தயத்துக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பாலுசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மனுவில் அரசு செலவில் சாகச விளையாட்டுகளை நடத்துவது சட்டவிரோதம் என்றும் பந்தயம் நடத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் ஒப்புதல் கேட்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/vmGNYZk