பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில், ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நேற்று முந்தினம் (29-11-2023) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக, மாநகராட்சியால் அரசுப் பள்ளிகளில் திறம்பட செயல்படுத்தப்பட்டுவரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரைவார்த்துக்கொடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தி.மு.க கூட்டணிக்கட்சிகளான சி.பி.ஐ, சி.பி.ஐ(எம்) மற்றும் பா.ம.க, அ.ம.மு.க, உள்ளிட்ட எதிர்கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன.

சென்னை மாநகர மேயர் பிரியா!

எதிர்ப்புக்கிடையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டாரத்தில் உள்ள 125 பள்ளிகள், மத்திய வட்டாரத்தில் உள்ள 164 பள்ளிகள் மற்றும் தெற்கு வட்டாரத்தில் உள்ள 69 பள்ளிகள் என மொத்தம் 358 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை `வெளிநிறுவனம்’ (Outsourcing) மூலம் ஓராண்டுக்காலத்துக்கு ஒப்பந்தம் கோரி பணி மேற்கொள்ள அனுமதியளிக்கும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. அதாவது, சென்னை மாநகராட்சிப் பள்ளிகள், அரசு பள்ளிகள், ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளிகள் என மொத்தமுள்ள 358 பள்ளிகளில் பயிலும் 65,030 மாணவ மாணவிகள் பயன்பெற்றுவரும் காலை உணவுத் திட்டத்தை, ஆண்டுக்கு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீட்டில் தனியாருக்கு ஒப்பந்தம் வழங்க அனுமதியளிக்கும் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதை தி.மு.க கூட்டணிக் கட்சிகளான சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்) கட்சிகளைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

குறிப்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரேணுகா, “மாநகராட்சியே சிறப்பாக நடத்திவரும் காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு கொடுப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். அதேபோல, மற்ற இடதுசாரி வார்டு கவுன்சிலர்களும் எழுந்து எதிர்ப்புக் குரலெழுப்பினர். அதற்கு பதிலளித்த மேயர் பிரியா, “சென்னை தவிர தமிழ்நாட்டிலுள்ள அத்தனை மாநகராட்சிகளிலும் வெளிநிறுவனம் மூலம்தான் காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது; திட்டம் ஆரம்பிக்கும்போதே அவுட்சோர்சிங்குக்குதான் கொடுக்கப்பட்டது. அதில் சென்னை மாநகராட்சியும் இப்போது இணைந்திருக்கிறது” எனக் கூறினார். இதை ஏற்காமல் தொடர்ந்து இடதுசாரி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசிக்கொண்டிருக்கும்போது, மாமன்ற கூட்டத்தில் ஒரு பெண் வார்டு கவுன்சிலர் மயக்கமடைந்தார். இதனால் விவாதம் திசைதிரும்பியது. வழக்கமாக தீர்மானம் நிறைவேற்றப்படும்போது மேயரால் முன்மொழியப்படும், “தீர்மானத்தை ஏற்போர் ஆம் என்க, எதிர்ப்போர் இல்லை என்க!” என்று கேள்வியே கேட்கப்படாமல், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாமன்றக் கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

காலை உணவுத் திட்டம்

தீர்மானத்தில் இருக்கும் விவரங்கள்:

தேவைப்படும் நிதி எவ்வளவு?

ஒரு வருடத்திற்கு தோராயமாக ஒரு பள்ளி செயல்படும் நாள்கள் 230 என்றும், ஒரு நாளைக்கு ஒரு மாணவனுக்கு காலை உணவு திட்டத்திற்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூ.12.71 என்றும் கணக்கிடப்பட்டு, ஒட்டுமொத்தமாக 350 பள்ளிகளுக்கும், 65,030 மாணவ மாணவிகளுக்கும் சேர்த்து சுமார் 19 கோடி ரூபாய் (ரூ.19,102,198) ஆண்டு நிதியாக ஒதுக்கப்படவிருக்கிறது.

ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்ன?

மத்திய வட்டாரத்தில் 13 சமையல் கூடங்கள் வழங்கப்படும். அதன் கட்டடத்தின் பராமரிப்பு செலவு, குடிநீர் வசதி, சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள், மின்சார வசதிகள், சமையல் எரிவாயு இணைப்பு போன்ற பல சலுகைகளை சென்னை மாநகராட்சியே ஒப்பந்ததாருக்கு இலவசமாகக் கொடுக்கும்.

காலை உணவுத் திட்டம் மெனு

ஒப்பந்ததாரர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்ன?

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான காலை உணவு வழங்கப்பட வேண்டும். உணவு வகை பட்டியலை எந்த காரணம் கொண்டும் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன் அனுமதியின்றி மாற்றக்கூடாது. காலை 8.00 மணிக்கு பள்ளியில் காலை உணவு வழங்கப்பட வேண்டும். காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களின் தரம் FSSAI நெறிமுறைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப்பொருள்கள் (Extraneous substance) கலக்காமலும் சுத்தமாக இருக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொண்டு சமைக்கக்கூடாது உள்ளிட்ட 41 கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாட்டை மீறினால் என்ன நடக்கும்?

மாநகராட்சிகளின் கட்டுப்பாட்டுக்கு மாறாக ஒப்பந்ததாரரால் `காலதாமதமாக உணவு வழங்கப்பட்டாலோ, தரம் குறைந்த உணவு வழங்கப்பட்டாலோ, உணவின் அளவு குறைவாக வழங்கப்பட்டாலோ, தரம்குறைந்த மூலபொருட்கள், காய்கறிகளைப் பயன்படுத்தினாலோ, மூடப்படாத வாகனத்தில் உணவினை பள்ளிக்கு எடுத்துச்சென்றாலோ, சமையற்கூடத்தை சுத்தமாக பராமரிக்காமல் இருந்தாலோ…, முதல்முறை ரூ.1000, இரண்டாம் முறை ரூ.2000, மூன்றாம்முறை ரூ.3000 அபராதமாக ஒப்பந்ததாரருக்கு விதிக்கப்படும். மூன்று முறைக்கு மேலும் மேற்கண்ட விதிமுறைகளை மீறினால், ஒப்பந்தமே ரத்து செய்யப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்

இப்பணியினை சிறப்பாக வெளிநிறுவனம் மூலம் செயல்படுத்தவும், ஒப்ப நிபந்தனைக நிர்ணயிக்கவும், துணை ஆணையர் சரண்யா அரி தலைமையில், கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர், நிதி ஆலோசகர் தலைமை பொறியாளர்(பொது), மேற்பார்வை பொறியாளர்( இயந்திர பொறியியல் துறை) ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

தீர்மானத்தை இடதுசாரிகள் எதிர்க்க காரணம் என்ன?

இந்த நிலையில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கும் தீர்மானத்தை எதிர்த்து மாமன்றக் கூட்டத்தில் குரல்கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரேணுகாவிடம் பேசினோம். “இந்த தீர்மானத்துல பொதுநலன் அறவே இல்ல! முழுக்க தனியார் நலம்தான் இருக்கு! ஏற்கெனவே சென்னை மாநகராட்சி முழுக்க அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருது. அம்மா உணவகங்களில் வேலைபார்க்கும் மகளிர் சுய உதவிக்குழுவினரால் சரியாக சமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வந்துச்சு. குழந்தைகளுக்கு உணவு சமைப்பதற்காக எங்களோடைய வார்டுகள்ல உள்ள சமுதாய கட்டடங்களைக் கொடுத்தோம். ஆனால், இப்போ இந்த திட்டத்தை தனியாருக்கு கொடுக்க தீர்மானம் போட்ருக்காங்க! மாநகராட்சியால சிறப்பா இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும்போது அதை தனியாருக்கு கொடுக்க காரணம் என்ன? இதைப் பற்றி மாமன்ற கூட்டத்துல கேட்டா, மேயர் `தமிழ்நாட்டுல உள்ள எல்லா மாநகராட்சியிலயும் வெளிநிறுவனங்கள் மூலம் கொடுக்குறதால, சென்னை மாநகராட்சியும் வெளிநிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுக்குது’னு பதில் சொல்றாங்க. இது முறையான பதில் கிடையாது.

தீர்மானப்படி மாநகராட்சியே கட்டடம் கொடுக்குது, பாத்திரங்கள் கொடுக்குது வருஷத்துக்கு 19 கோடி ரூபாய் நிதி கொடுக்குது… தனியாருக்கு ஒப்பந்தம் போட்ட அப்புறம் அவங்கதானே அதையெல்லாம் பாத்துக்கணும். அரசாங்கமே எல்லாம் கொடுக்குறதுக்கு பேசாம அரசாங்கமே இப்போ இருக்குற மாதிரி காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்தலாமே? இந்த திட்டத்தை நம்பி உணவு சமைச்சு கொடுத்த பெண்களை மீண்டும் அம்மா உணவகத்துக்கே அனுப்பப்போறதா சொல்றாங்க. ஆனால் அம்மா உணவகத்துல ஏற்கெனவே ஆள் அதிகமாதான் இருக்காங்க. ஆகமொத்தம் மாசம் 8 ஆயிரம் சம்பாதிச்சவங்க இனி 4 ஆயிரத்துக்கும் கம்மியாதான் சம்பளம் வாங்கப்போறாங்க.

ரேணுகா, வார்டு கவுன்சிலர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

அதுமட்டுமில்லாம, உணவு சமைக்கும் தனியார் நிறுவனங்களை இன்ஸ்பெக்‌ஷன் பண்ற குழுவுல முழுக்க அதிகாரிகளே இருக்காங்க. கவுன்சிலர், மண்டலக்குழு தலைவர்னு மக்கள் பிரதிநிதிகள் யாரையுமே குழுவுல போடல. ஒப்பந்ததாரர்கள் தாமதமா உணவு கொடுத்தாலோ, தரமில்லாத உணவு கொடுத்தாலோ அபராதம் போடுவாங்களாம். ஒருவேளை தரமில்லாத உணவால பள்ளிக் குழந்தைகளுக்கு ஏதாச்சும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டா அதுக்கு யார் பொறுப்பு? இதுக்கு என்ன பதில் வச்சிருக்கு சென்னை மாநகராட்சி. நேற்று நடந்த மாமன்ற கூட்டத்துலக்கூட முறையா இந்த தீர்மானத்தை நிறைவேத்தல! எல்லாத்தையும் தனியாருக்கு கொடுக்குற வேலையத்தான் சென்னை மாநகராட்சி தொடர்ந்து பண்ணிட்டு இருக்கு! இதுல பொது நலமே இல்ல…முழுக்க தனியார் நலம்தான்” என சரமாரியாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

அதேபோல, `மத்திய அரசு எல்லாத்தையும் தனியாருக்கு தாரைவார்க்கிறது, பொதுத்துறைகளை தனியார்மயமாக்குகிறது என குற்றம்சாட்டும் தமிழ்நாடு அரசு `அவுட்சோர்சிங்’ என்ற பெயரில் படிப்படியாக ஒவ்வொரு துறைகளின் திட்டங்களையும் தனியாருக்கு தாரை வார்ப்பது எந்த வகையில் நியாயம்?’ என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியிலிருந்து நேற்று இரவு(30.11.2023) ஓர் அவசர அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “ சென்னை மாநகராட்சியில் 358 பள்ளிகளில், 65,030 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 35 சமையல் கூடங்களில் இருந்து, தினசரி உணவு வழங்கப்பட வேண்டிய அட்டவணையின்படி உயர் அலுவலர்களின் கண்காணிப்பில் காலை காலை உணவு தரமாக தயாரித்து வழங்கும் பணி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் உள்ள உயர் அலுவலர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்புடன் இத்திட்டம் ஒப்பந்த அடிப்படையில் வழங்குவதற்கான நிலை ஏற்படுமாயின், அதற்கான உத்தேச மதிப்பீடு தயாரித்து அதற்கான ஒப்புதல் சென்னை மாநகராட்சியின் மன்றத்தில் பெறப்பட்டது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி ஏதும் தற்போது கோரப்படவில்லை. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும்!” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், சென்னை மாநகராட்சியின் அறிக்கையின் ஒரு இடத்தில்கூட தனியாருக்கு ஒப்பந்தம் கொடுப்பது ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்றோ, தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட மாட்டாது என்றோ தெரிவிக்கப்படவில்லை. மேலும், `இந்தத் திட்டம் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அதை யார் செயல்படுத்துவார்கள் என்ற கேள்விக்கும் பதில் இல்லை!

சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார்

இந்த நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஸ்குமாரிடம் விளக்கம் கேட்டபோது, “சென்னை மாநகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தைப் பொறுத்தவரையில் தற்போது உள்ள நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கும் அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல சென்னை மாநகராட்சியே இந்தத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும்!” எனத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/aER5Fjn