தமிழ்நாட்டில் தி.மு.க அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதலானது, உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணையாக நடைபெற்றுவருகிறது. இதில், `சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்ற முக்கிய கோரிக்கை தமிழ்நாடு அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றமும், `மசோதாமீது மாற்றுக் கருத்து இருந்து திருப்பியனுப்புவதாக இருந்தால், உடனடியாகத் திருப்பியனுப்ப வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது’ என ஆளுநர் தரப்புமீது கொட்டு வைத்தது.

முதல்வர் ஸ்டாலின்
உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியதுமே, தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு, அவற்றை அரசுக்கே திருப்பியனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதன் பின்னர், நவம்பர் 18-ம் தேதி சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, ஆளுநரால் திருப்பியனுப்பப்பட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் பெற மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. இவ்வாறான சூழலில், தமிழ்நாடு அரசின் மனுமீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடந்தது.
அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஆளுநர் திருப்பியனுப்பிய 10 மசோதாக்களை, நவம்பர் 18-ம் தேதி சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது தமிழ்நாடு அரசு. ஆளுநர்மீது தமிழ்நாடு அரசு தொடர்ந்திருக்கும் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், நேற்று முன்தினம் அவசர அவசரமாக அந்த 10 மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறார் ஆளுநர். இதையே, நேற்றுதான் தெரியப்படுத்தினார்கள்” என்ற வாதத்தை முன்வைத்தார்.

அதைத் தொடர்ந்து, பேசிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட், “ஆளுநர் தரப்பிலிருந்து மசோதாக்கள் நிறுத்திவைக்கப்பட்டது எனக் கூறப்பட்டபோது, அது தொடர்பான கோப்புகள் சட்டமன்றத்துக்கு திருப்பியனுப்பப்பட்டதா… சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்…

ஆளுநருக்கு சட்டத்தைச் செயலிழக்க வைக்கவோ, முடக்கி வைக்கவோ (Kill the Bill) அதிகாரம் இல்லை. குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால், ஆளுநர் அதை முதலிலேயே செய்திருக்க வேண்டும். மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. ஆளுநர் என்பவர் மத்திய அரசின் NOMINEE என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்” என்று சரமாரியான கேள்விகளுடன் ஆளுநர் தரப்பை கடிந்துகொண்டார். இறுதியாக, இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்து பிரச்னையைப் பேசித் தீர்க்க ஆளுநர் தரப்புக்கு அறிவுறுத்திய நீதிமன்ற அமர்வு, வழக்கை டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
from Tamilnadu News https://ift.tt/3EnrYav
