இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தில் கடந்த நவம்பர் 7-ம் தேதி 40 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (MNF), ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM), காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் போட்டியின்ன. இந்த நிலையில், மிசோரம் மாநிலச் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து தொடர்ந்து ஜோரம் மக்கள் இயக்கம் கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

இக்கட்சி 2018-ம் ஆண்டு முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி, எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி என பல்வேறு முகங்கள் கொண்ட லால்துஹோமாவால் தொடங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டக் கட்சி, ஆளும் மிசோ தேசிய முன்னணிக் கட்சி, தேசியக் கட்சியான காங்கிரஸ், பா.ஜ.க-வை விட அதிக வாக்குகளைப் பெற்றுத் தொடர்ந்து முன்னிலை வகிப்பது அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது. மிசோரம் மக்கள் பெரும் அரசியல் மாற்றத்துக்கு தங்களை ஒப்புக்கொடுத்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்தக் கட்சி கடந்துவந்தப் பாதையை விவரிக்கிறது இந்தச் செய்திப் பகுதி.
ஜோரம் மக்கள் இயக்கத்தின் உருவாக்கம்:
மிசோரம் மக்கள் மாநாடு(Mizoram People’s Conference), ஜோரம் தேசியவாதக் கட்சி(Zoram Nationalist Party), ஜோரம் எக்ஸோடஸ் இயக்கம்(Zoram Exodus Movement), ஜோரம் அதிகாரப் பரவலாக்கல் முன்னணி(Zoram Decentralisation Front), ஜோரம் சீர்திருத்த முன்னணி (Zoram Reformation Front,) மிசோரம் மக்கள் கட்சி (Mizoram People’s Party) ஆகிய ஆறு மாநிலக் அமைப்புகளின் கூட்டணியாக ஜோரம் மக்கள் இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சிகள் பின்னர் ஒரு ஒருங்கிணைந்த அமைப்பாக ஒன்றிணைந்து, அதிகாரப்பூர்வமாக ஜோரம் மக்கள் இயக்கத்தை (Zoram People’s Movement) 2018-ல் உருவாக்கினர்.

தொடக்கத்தில், மிசோரம் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. தொடர்ந்து, சமூக அக்கறை மற்றும் சமூக நலனில் கவனம் செலுத்தும் அரசியல் அல்லாத அமைப்பாக உருவானது. இந்த நிலையில்தான், இந்தியத் தேர்தல் ஆணையத்தில் கட்சியை அதிகாரப்பூர்வமான கட்சியாகப் பதிவு செய்தது. ஆனால், ZPM அரசியல் கட்சியாக மாறியப் பிறகு, மிசோரம் மக்கள் மாநாடு, 2019-ல் கூட்டணியிலிருந்து வெளியேறியது.
2018 மிசோரம் சட்டமன்றத் தேர்தல்: அரசியல் அறிமுகம்:
2018-ம் ஆண்டு மிசோரமில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ZPM தனது முதல் தேர்தலை எதிர்கொண்டது. மிசோ தேசிய முன்னணி (MNF) மற்றும் இந்தியத் தேசிய காங்கிரஸ் (INC) ஆகியவற்றுக்கு அரசியல் மாற்றாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. மதுவிலக்கை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வாக்குறுதியுடன், 40 தொகுதிகொண்ட மிசோரத்தில், 36 இடங்களில் போட்டியிட்டது. தன்னுடைய முதல் தேர்தல் களத்தில், கடும் போட்டிக்கு மத்தியில் 8 இடங்களில் சுயேச்சையாக வெற்றி பெற்றது. இது ஒப்பீட்டளவில் புதிய ஜோரம் மக்கள் இயக்கத்திற்குக் குறிப்பிடத்தக்கச் சாதனையாக அமைந்தது.

2023 மிசோரம் சட்டமன்றத் தேர்தல்:
அதைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. இந்தமுறை மிசோரமின் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டது. நவம்பர் 7-ம் தேதி நடைபெற்ற இந்தத் தேர்தலில், 80 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி, ZPM, மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 28-35 இடங்களைக் கைப்பற்றி, கணிசமான வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆட்சி அமைக்க 21 தொகுதிகள் தேவை என்ற நிலையில், தற்போது 27 தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்து ஆட்சி அமைக்க உள்ளது!
from Tamilnadu News https://ift.tt/0iZLJgR
