கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் மணிவண்ணன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). பள்ளியில் படிக்கும் இவரின் பேத்தி கயல்விழி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), தீபாவளி அன்று தாத்தா மணிவண்ணன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது மிகுந்த சோர்வுடனும், குழப்பத்துடனும் இருந்த கயல்விழியைப் பார்த்த மணிவண்ணன், என்ன நடந்தது என்று கேட்டிருக்கிறார். முதலில் தயங்கிய கயல்விழி, அதன் பிறகு ஆரூரைச் சேர்ந்த தன்னுடைய ஆண் நண்பர் அருண் பிரசாத்துடன் தனிமையில் இருந்துவிட்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறார். அத்துடன், தாங்கள் தனிமையில் இருந்ததை அருண் பிரசாத் வீடியோ எடுத்ததாகவும் கூறி அழுதிருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணிவண்ணன், தன்னுடைய மகனை அழைத்துக் கொண்டு ஆரூரில் இருக்கும் அருண் பிரசாத் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

தலைமறைவாக இருக்கும் அருண் பிரசாத்

அங்கிருந்த அருண் பிரசாத்திடம் `ஸ்கூல் போற புள்ளைய இப்படி செய்யலாமா?’ என்று கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதற்கு சரியாக பதிலளிக்காத அருண் பிரசாத் அங்கிருந்து தப்பியோட முயன்றிருக்கிறார். அப்போது மணிவண்ணனும், அவருடைய மகனும், அருண் பிரசாத்தின் செல்போனை பிடுங்கிக் கொண்டனர். அதன் பிறகு அந்த செல்போனைப் பார்த்த மணிவண்ணன், அதில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்களும், பல பள்ளி மாணவிகளின் நிர்வாண போட்டோக்களும், வீடியோக்களும் இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்த அவர், நேற்று முன்தினம் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்ததுடன், அருண் பிரசாத்தின் செல்போனையும் ஒப்படைத்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், அருண் பிரசாத்தின் வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர்.

அவர் அங்கு இல்லாத நிலையில், விசாரணையை துவங்கியிருக்கும் போலீஸார், தலைமறைவாக இருக்கும் அருண் பிரசாத்தையும் தேடி வருகின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், “பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அருண் பிரசாத், டிப் டாப் உடையணிந்து, கல்லூரி மாணவன்போல கழுத்தில் ஐ.டி கார்டு மாட்டியவாறு இன்ஸ்டாகிராமில் நிறைய போட்டோக்களையும், ரீல்ஸ்களையும் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதைப் பார்த்து லைக், கமென்ட்டுகளைப் போடும் பெண்களிடம் தனியாக சாட் செய்து, அவர்களை காதல் வலையில் விழவைத்து, அவர்களுடன் நிர்வாண சாட்டிங் செய்திருக்கிறார். அப்போது அவர்களுக்கே தெரியாமல் அந்த சாட்களை ஸ்க்ரீன் ரெக்கார்டிங் செய்திருக்கிறார். இப்படி பல ஸ்க்ரீன் ரெக்கார்டிங்குகள் அவரது செல்போனில் இருக்கின்றன. அதில் பெரும்பாலும் அக்கம் பக்கத்து ஊர்களைச் சேர்ந்த பள்ளி மாணவிகள்.

இவரது காதல் வலையில் விழுந்து, நிர்வாண சாட்டிங்கில் வந்த மாணவிகள் ஒரு சிலரை, தனிமையிலும் சந்தித்து சீரழித்திருப்பதாக தெரிகிறது. மேலும் அந்த வீடியோக்களைக் காட்டி மிரட்டிப் பணம், நகையையும் பறித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும், தன்னுடைய ஊர் மற்றும் பக்கத்து ஊர்களிலுள்ள பள்ளி மாணவிகளைக் குறிவைத்து, காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார். அருண் பிரசாத்தின் தாய் துபாயில் வசிக்கிறார். அவர் அனுப்பும் பணத்தில்தான் பைக், டிப் டாப் ஆடைகள் என வசதியாக வாழ்ந்திருக்கிறார் அருண் பிரசாத். தலைமறைவாக இருக்கும் அவர், துபாய்க்கு தப்பிச் செல்ல வாய்ப்பிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறியிருக்கிறார்கள். அதனால் அதையும் கவனத்தில் கொண்டு அருண் பிரசாத்துக்கு வலை வீசியிருக்கிறோம்” என்கின்றனர்.

from Tamilnadu News https://ift.tt/HzMUvt2