நடந்த முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது பா.ஜ.க. அதேநேரம் தெலங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகக் கருதப்படும் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து இரண்டு மாநிலங்களின் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. மாநிலத் தேர்தல்களில் `முதல்வர் வேட்பாளர்’ முகமின்றியே களமிறங்கும் பா.ஜ.க வெற்றிக்கனியைப் பறிப்பது எப்படி?

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் மாநிலக் கட்சிகளைப் போலவே, பெரும்பாலும் மாநிலத் தலைவர்களை, தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர்களை தேர்தல் முகமாக முன்னிறுத்தியே பிரசாரங்களில் ஈடுபடுகிறது. அதேபோல, நடந்த முடிந்த ஐந்து மாநில தேர்தல்களிலும் மாநிலத் தலைவர்களை மையப்படுத்தியேதான் தேர்தல் வியூகம் அமைந்திருந்தது காங்கிரஸ். குறிப்பாக, மத்திய பிரதேசத்தில் கமல்நாத், ராஜஸ்தானில் அசோக் கெலாட், சத்தீஸ்கரில் பூபேஷ் பாகேல், தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி என ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில முதல்வராக இருந்தவர்களாக, மாநிலத் தலைவர்களாக இருந்தவர்களையே முன்னிலைப்படுத்தியிருந்தது. அதேபோல, தேர்தலை எதிர்கொள்வதற்கான முழு வியூகங்களை அமைப்பதற்கும் மாநில தலைமைக்கே முழு சுதந்திரத்தையும் கொடுத்திருந்தது காங்கிரஸ் தலைமை.
ஆனால் பா.ஜ.கவின் தேர்தல் வியூகமோ காங்கிரஸ் கட்சிக்கு நேர்மாறு. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் மாநிலத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் வரைக்குமே பா.ஜ.க கையிலெடுப்பதும், பா.ஜ.க-வுக்கு கைக்கொடுப்பதும் இந்த `மோடி மாடல்’தான்! கடந்த 2014-ம் ஆண்டு முதலே `மோடி அலை’ என்று தொடங்கிய ஒற்றை பிம்பமும், பிரசாரமும்தான் பா.ஜ.கவின் தேர்தல் பரப்புரையாக, ஒற்றை அடையாள முகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த முறையும் `மீண்டும் மோடி’ (Modi, Once more)என்ற கோஷமே பிரதானமாக இருந்தது. மாநிலத் தலைமை, முதல்வர் வேட்பாளர் என்பதையெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்காமல் மோடி என்ற பிம்பத்தை வைத்து மட்டுமே ஒவ்வொரு தேர்தலையும் சந்தித்து வருகிறது. அதேபோல, வழக்கமான `மத அரசியலும்’ பா.ஜ.கவுக்கு மைலேஜ் கொடுக்கிறது. பா.ஜ.க முன்னெடுக்கும் தேசிய அளவிலான மத அரசியல் மாநில அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் நிதர்சனம். குறிப்பாக, இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் `பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மக்கள் அயோத்தியில் ராமர் கோயிலுக்கு இலவச தரிசனம் செய்வதை உறுதி செய்வோம்’ என அமித் ஷா அறிவித்தார்.

அதேபோல, சனாதானம் குறித்த உதயநிதியின் பேச்சையும் கையிலெடுத்து காங்கிரஸ் – I.N.D.I.A கூட்டணிக்கு எதிராக விமர்சனப் பிரச்சாரம் செய்தது. மேலும், தான் உயர்த்திய பெட்ரோல், டீசல் விலையை தானே மறுஆய்வு செய்வோம் என்றும் கூறியது. இவை ஒருபுறமிருக்க அமலாக்கத்துறையை வைத்து ஆடும் ஆட்டமும் எதிரணியினரை திக்குமுக்காட வைத்து, மக்கள் மத்தியில் அதிருப்தி அலைகளை உருவாக்க வழிகோலியது. சத்தீஸ்கருக்கு மகாதேவ் கேமிங் ஆப் ஊழல், தெலங்கானாவுக்கு புதிய மதுபானக் கொள்ளை ஊழல் என எதிரணி கட்சித் தலைவர்களின் ஊழல் ஃபைல்ஸ்களை அமலாக்கத்துறை மூலம்வைத்து தோண்டி இழுத்தடித்து. பா.ஜ.கவின் தேர்தல் முகம் `மோடி’. தேர்தல் வியூகம் `மத அரசியலும் அமலாக்கத்துறை ரெய்டும்’ என விமர்சிக்கிறார்கள் எதிர்கட்சியினர்.
இந்த வெற்றி குறித்து பேசியிருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, இந்த தேர்தல் முடிவுகள் தேசத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. தேர்தல் முடிவுகளின் அடிப்படை உணர்வு, பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதையேப் பிரதிபலிக்கிறது” என்றிருக்கிறார்.

அதேபோல, இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து பேசியிருக்கும் பிரதமர் மோடி, “நேர்மையும் நல்ல நிர்வாகமும் வெற்றி பெற்றிருக்கிறது. ஊழலுக்கு எதிரான எங்கள் போருக்கு மக்கள் ஆதரவு அளித்திருக்கின்றனர். ஊழல், திருப்திபடுத்தும் அரசியல், வாரிசு அரசியலை மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த முடிவுகள் அமைந்திருக்கின்றன. தற்சார்பு இந்தியா, வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நமது இலக்குக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை இந்த வெற்றி உணர்த்துகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில மக்கள் பா.ஜ.க மீது அன்பை பொழிந்திருக்கின்றனர். தெலங்கானாவிலும் பா.ஜ.க-வின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/gAfO5ho
